ஜப்பானில் கடும் பனிப்பொழிவு: 93 பேர் காயம்; 17 பேர் பலி

அமெரிக்காவில் சில நாட்களாக கடுமையான குளிர் தாக்கி வருகிறது. வெடிகுண்டு சூறாவளி எனப்படும் பனிப்புயலால் இதுவரை 39 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த சூழலில், ஜப்பானின் வடபகுதிகளில் கடந்த வார தொடக்கத்தில் இருந்தே கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது.

இதனால், சாலைகள், நெடுஞ்சாலைகளில் பனி படர்ந்து காணப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் வழியிலேயே தேங்கி விட்டன. பொருட்கள் வினியோக சேவையும் முடங்கி உள்ளது. இந்நிலையில், ஜப்பானில் கிறிஸ்துமஸ் வாரஇறுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் மொத்த உயிரிழப்பு 17 ஆக உள்ளது. 93 பேர் காயமடைந்து உள்ளனர்.

ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் இன்றி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்து உள்ளது. பலர் தங்களது குடியிருப்பின் மேற்பகுதியில் உள்ள பனிக்குவியலை அப்புறப்படுத்தும்போது தவறி விழுந்தோ அல்லது மேற்கூரையில் இருந்து விழும் பெரும் பனிக்கட்டிகளின் கீழே சிக்கி, புதைந்தோ உயிரிழந்து உள்ளனர்.

இதனால், பனிக்கட்டிகளை நீக்கும்போது கவனத்துடன் செயல்படவும் மற்றும் தனியாக அந்த பணியில் ஈடுபட வேண்டாம் என்றும் நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். ஜப்பானின் வடகிழக்கின் பல பகுதிகளில் இந்த பருவத்தில் சராசரியை விட 3 மடங்கு அதிக பனிப்பொழிவு காணப்படுகிறது. இரண்டரை அடி உயரத்துக்கு பனிக்குவியல்கள் காணப்படுகின்றன.

இதில், மின் பகிர்மான கோபுரம் மீது பனிப்பொழிவு ஏற்படுத்திய பாதிப்பினால் கிறிஸ்துமஸ் நாளன்று காலையில், 20 ஆயிரம் பேர் மின்சாரம் இன்றி தவித்தனர். பின் நிலைமை சீர் செய்யப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட ரெயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் நிலைமை சீர்செய்யப்பட்டு இருக்கிறது என போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Exit mobile version