பாதாளத்தில் வீழ்ந்த பாகிஸ்தான்… 2 லட்சம் வீடுகள் அழிந்து போயின

பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு 2 லட்சம் வீடுகள் முற்றிலும் அழிந்து போய் உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கிய நிலையில், கடந்த 3 மாதங்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழைபொழிவு அதிகமிருப்பதால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. நாடு முழுவதும் சுமார் 3.30 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் வீடு மற்றும் உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர். இதுவரை 982 பேர் பலியாகியுள்ளதாகவும்,113 பேருக்கு பலத்த காயங்களும், 1,456 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.

https://twitter.com/WallStreetSilv/status/1563372640232173568

இதற்கிடையே நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தி  அரசு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ஐநாவின் மனிதநேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுமார் 2.18 லட்சம் வீடுகள் முற்றிலும் அழிந்து உள்ளன. 4.58 லட்சம் வீடுகள் பகுதியளவு சேதமடைந்து உள்ளன என தெரிவித்துள்ளது.

மேலும், 3 ஆயிரம் கி.மீ தொலைவிலான சாலைகளும், 145 பாலங்களும் சேதமடைந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். 17,566 பள்ளிக் கூடங்கள் சேதமடைந்து அல்லது முற்றிலும் அழிந்தோ போய்விட்டன. 5,492 பள்ளிக் கூடங்களில் புலம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது.

Exit mobile version