ஜெர்மனியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பெண் ஒருவர், தனது 5 குழந்தைகளைக் கொன்று விட்டு, தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனி நாட்டின் சோலிங்கின் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், தனது 6 குழந்தைகளுடன் வசித்து வந்த 27 வயது பெண், தனது 5 குழந்தைகளைக் கொன்று விட்டு, தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அந்தப் பெண், தன் தாயாரை தொடர்பு கொண்டு, தனது 5 குழந்தைகளையும் கொன்று விட்டதாகவும், தானும் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து, அந்த பெண்ணின் தாயார், சோலிங்கின் நகர போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாருக்கு, வீட்டின் உள்ளே அதிர்ச்சியூட்டும் சம்பவம் காத்திருந்தது. வீட்டினுள் 5 குழந்தைகள் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளனர்.
இதில் 1, 2, 3, 6 மற்றும் 8 வயதுடைய 3 பெண்குழந்தைகளும், 2 ஆண்குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். 11 வயதுடைய, பெண்ணின் மகன் மட்டும் உயிருடன் இருந்துள்ளான்.
இந்நிலையில், குழந்தைகளின் தாய் தனது குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள டூசெல்டார்ஃப் ரெயில் நிலையத்தில், ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தைகளின் மரணம் குறித்து, சிகிச்சைக்குப் பின் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.