பிரபல பேச்சாளர் ‘தமிழ்கடல்’ நெல்லை கண்ணன் காலமானார்

தமிழறிஞரும், இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.தமிழ்கடல் என்று அன்போடு அழைக்கப்பட்ட அவர் அரசியலிலும் தீவிரமாக பணியாற்றியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் பிரபல பேச்சாளராக விளங்கியவர் நெல்லை கண்ணன். இலக்கியம் மட்டுமல்லாமல், ஆன்மீக சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர். நெல்லையில் மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கோடு இருந்த அவர், 1996-ம் ஆண்டில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டார். அப்போது அதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் சேப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டபோது, அங்கே போட்டியிட காங்கிரஸில் பலரும் தயங்கிய நேரத்தில் நெல்லை கண்ணன் துணிந்து போட்டியிட்டார். அவருக்காக ஜெயலலிதா பிரசாரமும் மேற்கொண்டார். எனினும் அந்தத் தேர்தலில் நெல்லை கண்ணன் தோல்வியடைந்தார்.

இதேபோல 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்காக தமிழகம் முழுவதும் ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்தவர். அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நெல்லை கண்ணன் ‘அதிமுகதான் சிறந்த கட்சி; ஜெயலலிதாதான் சிறந்த தலைவர்’ என்று அளித்த பேட்டியால், போயஸ் கார்டனுக்கு நெல்லை கண்ணனை வரவழைத்து ஜெயலலிதா பேசினார். இதனையடுத்து 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் சென்று அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டார். 2020ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நெல்லையில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ‘ஜோலியை முடிப்பீங்க’ என்று பேசிய காரணம் உள்பட 3 பிரிவுகளில் போலீஸார் அவரை கைது செய்தனர். அதன்பிறகு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் அரசியலில் இருந்து விலகியிருந்தார். அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version