சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின்படி, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் மாற்றியமைத்து நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன.
அதன்படி, பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இந்தியாவில் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலையும் 100ஐ கடந்து விற்பனையாவது அதிர்ச்சியளிக்கிறது.
கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்கள் படிப்படியாக மீண்டு வரும் நிலையில், பெட்ரோல்-டீசலுக்கான பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், கச்சா எண்ணெய்க்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் தேவை அதிகரிப்பு மற்றும் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. தேவை அளவிற்கு கணிசமான அளவுக்கு உற்பத்தியை பெரும்பாலான நாடுகள் அதிகரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
பெட்ரோல், டீசல் மீது மத்திய-மாநில அரசுகள் அதிக அளவில் வரி விதித்துள்ளன. இதுவும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. பெட்ரோல் விலை நாட்டின் அனைத்து பெரிய நகரங்களிலும் ரூ.105-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலையும் பல நகரங்களில் ரூ.100-ஐ கடந்து விற்பனையாகிறது. இதனைத் தொடர்ந்து சில மாநிலங்களில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பெட்ரோல் மீதான 3 ரூபாய் வரி தள்ளுபடி செய்யப்பட்டு பட்ஜெட் தாக்கலின் போது நிறைவேற்றப்பட்டது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து 105 ரூபாய் 13 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று, டீசல் விலை நேற்று 33 காசுகள் உயர்ந்து, 101 ரூபாய் 25 காசுகளுக்கு விற்பனையானது.
இந்நிலையில், இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 30 காசுகள் அதிகரித்து 105.43 ரூபாய்க்கும், டீசல் விலை 34 காசுகள் அதிகரித்து 101.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது சாமானிய மக்களுக்கு கடுமையான அதிர்ச்சியை அளித்துள்ளது.