சென்னையில் பெட்ரோல், டீசல் நான்காவது நாளாக இன்றும் விலை அதிகரித்திருப்பது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இதனால், அதன் விலை தினந்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது.
ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆகஸ்டு மாதம் 2வது வாரத்தில் இருந்து விலை குறைந்து காணப்பட்டது. அதன் பிறகும் அவ்வப்போது விலை சரிந்தது. தமிழக பட்ஜெட் அறிவிப்பிற்கு பெட்ரோல் விலையில் மூன்று ரூபாய் மானிய விலை குறைப்பு செய்யப்பட்டது.
சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய் 49 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 95 ரூபாய் 93 காசுகளுக்கும் விற்பனையானது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து 100 ரூபாய் 75 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து 96 ரூபாய் 26 காசுகளுக்கும் விற்பனையாகிறது.
பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் சாமானிய மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.