புது வீடு- சுந்தரேஸ்வரன். மு

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 163 புது வீடு- சுந்தரேஸ்வரன். மு

காலையில விடிஞ்சதும் விடியாததுமா சாப்பிடாம கூட எங்க சாமி போற… எனக் கத்திக்கொண்டே வாசல் நோக்கி வந்தாள் மாரியம்மா. உனக்கு பிடிக்குமேனு கோழி அடிச்சு இட்லி ஊத்தி வச்சிருக்கேன், ஒருவா சாப்பிட்டு போயா என இறைஞ்சுவது போல கேட்டாள். அம்மாவின் கை பக்குவத்தில் சாப்பிட்டு நீண்ட நாள் ஆகி இருந்த காரணத்தால், அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் வீட்டிற்குள் சென்றான். அதியன் சென்னையில் வேலைக்கு சேர்ந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேல் இருக்கும். அதில் கடந்த இரண்டு வருடங்களாக அவன் ஊர் பக்கம் ஒரு முறை கூட வரவே இல்லை. கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட இணைய வசதி இல்லை எனக் கூறி ஊருக்கு வரவில்லை. இடையில் ஒரு முறை அவனது அம்மா தம்பி மற்றும் தங்கையை சென்னைக்கு அழைத்து வந்து ஒரு வாரம் இவனது இருப்பிடத்திலேயே தங்கச் செய்து ஊர் சுற்றி காட்டினான். திருச்சியில் உள்ள சுரேஷ் மச்சானின் திருமணத்தின் போது, அவனது வீட்டில் மூன்று நாட்கள் குடும்பத்துடன் தங்கி இருந்தான். அதோடு சரி ஊருக்கு வர வேண்டும் என்று ஏனோ  அதியனுக்குத் தோன்றவே இல்லை. கல்லூரிக்கு செல்லும் தம்பிக்கு இவன் வாங்கித் தந்த கைபேசியின் பயனால் தோன்றும்போதெல்லாம் குடும்பத்தினரை பார்த்துப் பேசிக்கொள்வான்.

காலை உணவை முடித்துவிட்டு அதியின் வெளியே வந்த போது, அவனது தந்தை வீட்டிற்குள் வந்தார். அதியனைப் பார்த்து சாப்பிட்டியா தம்பி என கேட்டுக் கொண்டே அவன் பதிலுக்கு காத்திடாமல், பத்து மணிக்கு எல்லாம் அந்த இன்ஜினியரை பாக்கணும் மறந்துடாத எனக்கூறி விட்டு வீட்டிற்குள் சென்றார். அதியன் இப்போது ஊருக்கு வந்திருப்பதற்கான முக்கிய காரணமே, தான் புதிதாக கட்டவிருக்கும் வீட்டிற்க்கான ஆயத்த பணிகளை செய்வதற்காக தான். அதியனின் அப்பா தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகின்றார். நிரந்தர வருமானம் என்பதால் அதியனின் அம்மா வேலைக்கு செல்வதில்லை. அவனது ஊரிலேயே இவ்வளவு பெரிய அரசு வேலையை அதியனின் தந்தையே முதன்முதலாக செய்து வந்தார். எனவே ஊரிலும், சொந்தங்களின் மத்தியிலும் அதியனின் தந்தை துரைக்கு எப்போதுமே மதிப்பு உண்டு. அவ்ஊரிலேயே முதன் முதலில் தன் மகனை சென்னையில் சேர்த்து படிக்க வைத்த பெருமையும் துரையையே சாரும்.

அதியன் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக உள்ளான். கை நிறைய வருமானம் வரும்போதும் அதியனுக்கு தனது சொந்த ஊரில் வீடு கட்டுவதில் விருப்பமே இருந்ததில்லை. அவன் பிறந்து வளர்ந்த‌ ஊரில் மேல் பற்று எப்போதுமே அவனுக்கு உண்டானதே இல்லை. கல்லூரி காலத்திலேயே அந்த ஊரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் கசப்பான சம்பவங்களே அவன் மனம் முழுவதும் இருந்தது. தன்னுடைய அத்தை சரோஜாவுக்கு அதியன் படிக்கும் பள்ளியிலேயே சத்துணவு அமைப்பாளர் வேலை கிடைத்த போது, கீழத்தெரு பொம்பள செய்யுற  சோத்த எங்கொழந்தைங்க திங்கனுமா எனக்கூறி சரோஜா அத்தையை துன்புறுத்தி அவளை அவ்வேலையில் இருந்து தூக்கிய போது அந்த ஊரின் மீது உருவாகத் தொடங்கிய அருவெறுப்பு இது. அதன் பிறகு பல சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன அதியனுக்கு அவ்ஊரை பிடிக்காமல் போவதற்கு. அவனுடைய அலுவலகத்தில் யாரேனும் அவனது ஊரின் பெயரை கேட்டால் கூட பக்கத்தில் இருக்கும் டவுனையை அவனது ஊராகக் கூறுவான். பெயரளவில் கூட மாறாமல் இன்னும் “கீழ” என்னும் முன் பெயரை உடையது அவரது ஊர். இவையெல்லாம் இருப்பினும் மாரியம்மாவின் நீண்ட நாள் விருப்பத்திற்காக அவனுடைய ஊரில் ஒரு வீடு கட்டுவது என முடிவு செய்து அதற்கான பணிகளை செய்ய தொடங்கினான்.

வீட்டை விட்டு வெளியே வந்த அதியன் ஊர் மந்தைக்கு சென்று சிறிது நேரம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த செல்வி அண்ணி அவனிடம் தன்னை பஸ் ஸ்டாப்பில் விட்டு விட்டு வரும்படி கேட்டாள். அதியனின் ஊருக்கு பேருந்துகள் என்று எதுவும் கிடையாது. ஒரு கிலோமீட்டர் தள்ளி தான் பேருந்து நிறுத்தம் உள்ளது. எனவே அதியன், பிரவீன் மச்சானின் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான். பேருந்து நிறுத்தம் மேல தெருவுக்கு அருகில் தான் உள்ளது.  செல்வியை அங்கே விட்டுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது, டேய் அதியா… என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தான் அதியன். அவனுடைய பள்ளி பருவ நண்பன் கணேசன் வந்து கொண்டிருந்தான். கணேசனும் அதியனும் அவர்கள் ஊரின் அரசு பள்ளியில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர்கள். இப்போது கணேசன் பக்கத்து டவுனில் உள்ள ஒரு தனியார் வங்கியில் லோன் கலெக்டராக வேலை செய்து கொண்டு வந்தான். அதியனைப் பார்த்து என்னடா ஆளே மாறிட்ட… ஊர் ஞாபகமெல்லாம் இல்லையா என கேட்டுக்கொண்டே தன்னுடைய படிப்புக்கு ஏற்றவாறு ஏதேனும் வேலை சென்னையில் இருக்குமா என விசாரித்துக்கொண்டே வீட்டுக்கு வாடா சாப்பிட்டு போவ என அழைத்தான் கணேசன். அப்போது அங்கு மாடு ஓட்டிக்கொண்டு வந்த கணேசனின் அம்மா, ஏண்டா என்ன வேலைக்கு அனுப்பினா ரோட்டுல நின்னு என்ன பண்ணிக்கிட்டு இருக்க என சிடுசிடுத்தாள். கணேசன் ஏதும் புரியாமல் விழிப்பதை அதியன் பார்த்துக் கொண்டிருந்தான். அதியனைப் பார்த்த அவள் என்ன தம்பி நல்லா இருக்கியா, வீடு கட்ட போறீகலாமே பேசிக்கிட்டாக எனக் கூறி அவனுடைய பதிலுக்கு காத்திராமல் கணேசனை ஒரு கையிலும் மாட்டின் கயிற்றை மறுகையிலும் பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினாள். அப்போது வண்டியை ஸ்டார்ட் செய்ய அதியன் எத்தனித்தபோது, “ஏன்டா எஸ்சி வீட்டு பயலுக கூட உனக்கு என்னடா பேச்சு. அது சரி அவனைப் பார்த்தால் எஸ்சி விட்டு பைய மாதிரியா இருக்கா. என்ன பண்றது அவனுங்களுக்கு தான் தேடி தேடி வேலையை கொடுக்குது இந்த அரசாங்கம். அண்ணிக்கு அந்த மாரியம்மாவுக்கு இருக்க எகத்தாளம் என்னை பார்த்து திருப்பிக்கிட்டு போறா, ஏன் போக மாட்டா வீடு கட்ட போறாள்ள” என அவள் கூறியது நன்றாகவே கேட்டது.

மலக்குவியலின் மீது நிற்பது போன்ற உணர்வு உண்டானது அதியனுக்கு.  இந்த மலக்குவியல் மீது வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் இனி எப்போதும் அவன் மனதில் உதிக்க போவதே இல்லை.

Exit mobile version