கந்தல்- பொ. காயத்ரி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 166 கந்தல்- பொ. காயத்ரி

“முடியாதும்மா…. முடியவே முடியாது  என்ற குரல் ஓங்கி ஒலித்தது வீட்டில். என்ன பார்த்தா கூலிக்காரன் மாதிரி தெரியுதா? என் ரேஞ்சுக்கு நான் போய் அந்த இடத்துல நிக்குறதா?” என்ற அமுதனின்  கோபக்குரல் வீட்டினை நிறைத்தது.

சொன்னா கேளுப்பா, அப்பாக்காக, இல்ல வேண்டாம் இந்த அம்மாக்காகவாவது அங்க போயேன்? கொஞ்ச நாள், எல்லாம் கைகூடின பிறகு நீ பாட்டுக்கு உன் வழியில போயிகிட்டே இரு. உன்ன யாரு தடுக்க போறா? என கெஞ்சல் மொழியோடு மகனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார் அமுதனின் தாய் கனகவல்லி.

ச்சே… எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்குதோ என்று எரிச்சலுடன், காலை உணவினை தவிர்த்துவிட்டு வண்டியுடன் வெளியேறினான். நம் கோபத்தினையும் வருத்தத்தினையும் வெளியேற்ற கிடைத்த நவீன வடிகால் இந்த காலை உணவு தவிர்ப்பு தானே, இதில் அமுதன் மட்டும் விதிவிலக்கு இல்லையே….

அமுதன் ஒரு பொறியியல் பட்டதாரி, குறிப்பாக கட்டிடக்கலையில் சிறப்புப் பட்டம் பெற்றவன். வெளிநாடு சென்று பணி செய்ய வேண்டும் என்பது அவனது நெடுங்கால கனவு. காரணம் சிறு வயதிலிருந்தே அவனின் உறவினர்கள், உடன் பயிலும் நண்பர்களின் தந்தை போன்றோர் வெளிநாட்டில் பணி செய்ய அதன் பயனாக இங்குள்ளோர் மிக வசதியாக இருப்பதாக அவனுக்கு கற்பனை.

அதனால், அரும்பாடுபட்டாவது வெளிநாடு சென்று, அங்கேயே நிரந்தரமாக தங்க வேண்டும் என்று கனவு கண்டுகொண்டிருந்தான். ஆனால், அவன் எதிர்பார்த்த வேலை கிடைக்க தாமதமாகிக் கொண்டே போனது. தற்போதுதான் ஒரு முகவரை பிடித்து, அவரின் ஏற்பாட்டின்படி வெளிநாடு செல்ல ஆயத்தமானவனுக்கு விசா வர தாமதம் ஆனது. விசா வரும்வரை அவனை தான் ஏற்பாடு செய்த வேலையை பார்க்க சொன்ன தந்தை ரத்தினத்திடம் எதுவும் சொல்ல முடியாமல் தன் தாயிடம் அனைத்து கோபத்தினையும் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான் அமுதன்…

கதிரவன் தன் செந்நிறக் கைகளால் பூமியினை கொஞ்சம் கொஞ்சமாக அணைத்துக் கொண்டிருந்தான். பறவைகளின் ரீங்காரம் இனிய இசையாக ஒலித்தது. தன் முன் நின்றிருந்த கட்டிடத்தினை பார்வையால் அளவெடுத்துக் கொண்டிருந்தான் மயில்சாமி.

அடுப்படி கொஞ்சம் சின்னதுதான். ரெண்டு பேருக்கு மேல சேர்ந்து நிக்க முடியாது, ஹாலும் சுமார்தான், பேரப்பிள்ளைக விளையாட இது எப்படி பத்தும்? சொந்தக்காரங்க வந்தாக்கூட சாயந்திரமே கிளம்பிரனும் போல, அவங்க தங்குறதுக்குன்னு தனி அறை இல்லையே. அடுப்படியில பேசினா பக்கத்து வீட்டு பாத்ரூமுக்கு கேட்கும், ஹால்ல பேசினா, எதிர்வீட்டு பெட்ரூமுல கேக்கும். ஜன்னலை கூட திறக்க முடியாது. அப்புறம் எப்படித்தான் இங்க வந்து இருக்க முடியும் என்று யோசித்தவனின் யோசனையை கலைத்தது அந்த குரல்.

என்னங்க… என்ன அப்புடி பாக்குறீங்க ஏதோ புதுசா பாக்குற மாதிரி என்றாள் சுப்புலட்சுமி அவன் கையில் தேநீரினை திணித்தவாறே…  

ஆ…. அது ஒண்ணுமில்ல… வீடு வேலை ஆகிட்டு இருக்குதுல்ல. அதான் பாத்துக்கிட்டே யோசிச்சிட்டிருந்தேன் என்று மெல்லிய புன்னகையோடு தன் மனைவிக்கு பதிலளித்தான் மயில்சாமி.

ஆஹா…. அப்படி என்ன யோசனை துரைக்கு, இன்னும் ஆறு மாசத்தில இங்கின இருந்து போய்டுவோம். இதுல நீங்க நினைக்க என்ன இருக்கு… போங்க போயி ஆகுற வேலையை பாருங்க என்றார்.

உனக்கு எப்பவுமே இப்படித்தான் சுப்பு, நீயுண்டு உன் வேலை உண்டுன்னு இருக்க. ஆனா எனக்கு தான் எப்பவுமே இந்த கட்டிடத்தோட அப்படி ஒரு பிணைப்பு கருவுல இருக்க பிள்ளை, பிறந்து வளர்ந்து, ஆளானா எப்படி இருக்குமோ அதே மாதிரிதான். அஸ்திவாரத்தில இருந்து ஆரம்பிச்சு நெடுநெடுன்னு வளர்ந்து நிக்கிற இத பாத்தா, பெத்த புள்ளையே ஆளாகி வந்து நிக்கிற மாதிரி, மனசுல அப்படி ஒரு சந்தோஷம் என்றார் கண்கலங்கிய குரலில்.

அவர் கூறிய வார்த்தையில் சுப்புவும் ஒரு நிமிடம் கலங்கித்தான் போனாள். ஆனால், உடனே சுதாரித்துக்கொண்டு, சரி, சரி மணியாச்சு இப்படி இங்கேயே நின்னுக்கிட்டு இருந்தா சூப்பர்வைசர்கிட்ட வசை வாங்கி கட்டிக்கனும், சீக்கிரம் வாங்க என்றார்.

இருவரும் சோற்றுக் கூடையுடன் அப்பெரிய கட்டிடத்தினை அடைந்தனர். அங்கு பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, இருவரும் மண்வெட்டி மற்றும் கலவை தட்டுகளுடன் தங்கள் வேலையினை துவங்கினர்.

மயில்சாமி அறுபதினை நெருங்கும் கட்டிடத் தொழிலாளி. அவர் மனைவி சித்தாள் வேலை செய்பவர். பிள்ளை குட்டி என்று யாருமில்லை. ஒப்பந்த அடிப்படையில் கட்டிட வேலை செய்து வாழ்க்கையை ஓட்டி கொண்டிருக்கும் வீடற்ற, சாலையோர சாமானியர்கள். இந்த சாலைக்கூட அவர்களுக்கு நிரந்தரமில்லாத ஒன்றுதான்.

ஏனென்றால் ஒவ்வொரு முறையும் கட்டிடங்கள் மாற மாற அவர்கள் தங்கும் சாலைகளும் மாறும். காலங்கள் மாறினாலும், இந்த காட்சிகள் ஏனோ மாறவில்லை.

இந்தா… ஏன் இம்புட்டு சிமெண்ட் கலவையை வீணா போட்டுட்டு இருக்க? அதுக்கு தக்கன மணலை மட்டும் போடாம இப்படி கலவை போட்டினா எப்படி சுவத்தில நிக்கும் என யாரையோ கடிந்து கொண்டிருந்தார் மயில்சாமி.

அவனோ பதிலுக்கு, யோவ் மயிலு உன் வீட்டு காசாயா? இருக்குறபடி போட்டு அடிச்சுவிடுயா, பாத்துக்கலாம்… கலவை போனா, மணலு போனா உனக்கு என்னயா? அதுலாம் இஞ்சினியர் பாடு. நமக்கென்ன வரப்போவுது என்றான் அலட்சியமாக.

அதனை கேட்டு கோபம் கொண்ட மயிலோ, இந்தா பாருயா, என்னை பொறுத்தவரை கட்டிடமும், பெத்த புள்ளையும் ஒண்ணு. புள்ளைக்கு எப்படி சம அளவுள சத்தா சாப்பாடு போடுறமோ அதே மாதிரி கட்டிடத்துக்கு தேவையான எல்லாமே தரமாவும், சரியாவும் இருக்கனும்னு நான் ஆசைப்படுறேன் என்றார்.

நீ இப்படியே இருயா பிழைக்கத்தெரியாத மனுஷா என்று அவரை வசைபாடியவாரே அங்கிருந்து அவரின் உதவியாளர் வெளியேறினான்.

மயில்சாமி இப்படித்தான் தன் சொந்த கட்டிடத்தை போன்றே நினைத்து ஒவ்வொரு வேலையையும் பார்த்து பார்த்து செய்வார். வழி வழியாக வாழும் இடம் சிறப்பாக இருக்க வேண்டும என்ற எண்ணம் அவருக்கு.

தன் தந்தையிடம் முகவரி பெற்றுக்கொண்டு அந்த கட்டிடத்தினை அடைந்திருந்தான் அமுதன். உள்ளே நுழைந்தவுடனேயே சூப்பர்வைசர் அவனை பார்த்து, வாங்க தம்பி, வாங்க, வரவே மாட்டேன்னு சொன்னீங்களாம். இப்ப எப்படி வந்தீங்கன்னு தெரியல. ஒரே ஆச்சரியமா இருக்கு என்றார் யோசனையாக.

அதெல்லாம் காரணமாகத்தான் என்றான் அமுதன். நான் இப்போ ஃபாரீன் போக போறேண்ணா, அந்த கம்பெனியில எக்ஸ்பீரியன்ஸ் சர்ட்டிஃபிகேட், நான் பண்ணி முடிச்ச ப்ராஜெக்ட்லாம் என்னன்னு கேட்டிருக்காங்க. சோ, அவங்களுக்கு அனுப்புறதுக்காகத் தான் இந்த வேலைக்கே வந்தேன் என்றான்.

ரைட்டு, ரைட்டு… ஒரு முடிவோடத்தான் வந்திருக்கீங்கன்னு சொல்லுங்க என்ற சூப்பர்வைசர் அவனை அழைத்துச் சென்று அனைத்து தொழிலாளர்களிடத்தும் அறிமுகப்படுத்தினான். அமுதனும் வேண்டா வெறுப்பாக அனைவருக்கும் வணக்கத்தினை சொல்லிக்கொண்டிருந்தான்.

ஆம் அமுதன் ஒரு சுயநலவாதி, தனக்கு சான்றிதழ் வேண்டும் என்பதற்காகவே இந்த வேலையில் சேர்ந்திருந்தான். அதுவும் அக்கட்டிடமானது எழுபது சதவீத வேலைகளோடு இன்னும் சில மாத காலங்களில் முடிவடைய காத்திருந்தது. இவ்வாறு, முடிவடையப் போகும் கட்டிடத்தில் வேலை செய்தால், சுலபமாக வெளிநாட்டு வேலை உறுதியாகிவிடும் என்பதால் இங்கு வந்திருந்தான்.

செய்யும் வேலைகளில் பட்டற்று, வெளிநாடு கனவுகளில் மூழ்கி திளைத்துக் கொண்டிருந்தான் அமுதன் (எ) அமிர்தேஷ்வரன். ஆனால், இங்கு நடந்ததோ வேறொன்று.

அமுதனைப் பார்க்கும்போதெல்லாம் மயில்சாமிக்கு சொல்ல முடியாத ஓர் உணர்வு ஏற்பட்டு கண்கள் குளமாகிவிடும். ஆனால், அவனோ எதையுமே சட்டை செய்வதில்லை. இருப்பினும் அவனிடம் தாமாக சென்று ஏதாவது பேசி திட்டு வாங்கிக் கொண்டிருப்பார்.

தன் வெளிநாட்டுப் பயணம் நெருங்கிக் கொண்டிருப்பதால், கட்டுமானத்தை விரைந்து முடிக்க எண்ணி, வேலையை அவசரப்படுத்திக் கொண்டிருந்தான் அமுதன். இதனால் மயில்சாமி மிகவும் அதிருப்தி அடைந்தார். ஒருநாள் நேருக்கு நேராக அமுதனிடம் கேட்டும் விட்டார்.

ஏன் தம்பி உங்க அவசரத்துக்கு வேலை முடிக்கனும்னு இப்படி பண்ணினா நியாயமா? இதனால பொருள் ஒன்றுகூட தரமா வரல, எல்லாமே மூன்றாம் தர பொருட்களா இறக்கிட்டு போயிட்டிருக்காங்க. இது நல்லதுக்கில்ல தம்பி என்றார் கோபமாக.

அமுதன் இதனை கேட்டு கடுஞ்சினம் கொண்டான். நீங்க ஆமை மாதிரி வேலை பார்ப்பீங்க, அதுவரை நான் இங்கேயே உக்காந்து ஈ அடிச்சிட்டிருக்கிறதா? நான் சொல்றதை மட்டும் நீங்க செஞ்சா போதும். என் படிப்பென்ன? உங்க திறமையென்ன? பாத்து பேசுங்க என்று கத்திவிட்டு வெளியேறினான்.

அமுதனின் அவசர பயணத்திற்காக கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் வாங்கினான். தரம்பார்க்க அவனுக்கு தோன்றவில்லை காரணம் அவனின் வெளிநாட்டு கனவு.

அமுதனின் வார்த்தைகளால் பெரிதும் காயப்பட்டு போனார் மயில்சாமி. ஆனால், அவர் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. யாரோ ஒருவரின் பேராசைக்காக, தங்களின் முதுகெலும்புகள் முறிக்கப்படுவதாக உணர்ந்தார். இதற்கு காரணம் அமுதன் மற்றும் அவர்கள் வேலை பார்க்கும்  நிறுவனம் ஒரு பெரும் கார்ப்பரேட் நிறுவனம். அவர்கள் லாப நோக்கில் மட்டுமே பயணித்தார்கள்.

கட்டிடத்தின் அஸ்திவாரம் போடும்போதே, குடியிருப்பின் மொத்த வீடுகளும் விற்று தீர்ந்தன. அதனால் எக்காரணம் கொண்டும் வேலை நிதானமாக நடப்பதை அவர்கள் விரும்பவில்லை. அவர்களை எதிர்க்கும் அளவுக்கு மயில்சாமி போன்றோருக்கு என்றுமே திராணி இருந்ததில்லை….

சோ… என மழை கொட்டித் தீர்த்தது. அவசர அவசரமாக வரும் வழியிலேயே மாட்டிக் கொண்டான் அமுதன். தொப்பலாக நனைந்திருந்தான். மழை விட்டபாடில்லை. ஒதுங்கும் நோக்கில் சாலை ஓரமிருந்த அந்த தார்ப்பாயினுள் ஓரமாக நின்றிருந்தான்.

அவனை பார்த்ததும், வாங்க தம்பி உள்ள வாங்க என்றாள் சுப்புலட்சுமி. யோசனையுடன் சற்று உள்ளே போனான். சுற்றும் முற்றும் பார்த்தான். ஒன்பதுக்கு பன்னிரண்டு அளவிலான தார்பாயில் கூடாரம் போல அமைத்திருந்தனர். சொல்லிக்கொள்ளும்படி பொருட்கள் ஏதுமில்லை, நான்கைந்து பாத்திரங்களும், இரு பெரிய பிளாஸ்ட்டிக் பைகளும், ஒரு பெட்டி மட்டுமே இருந்தது. தார்ப்பாய்களிலும் ஆங்காங்கே மழைநீர் ஓடிய வண்ணம் இருந்தது. சட்டென்று அவன் பார்வை அங்கு மாட்டியிருந்த போட்டோவில் பதிந்தது.

அவன் பார்ப்பதை கவனித்து சுப்புலட்சுமி அமுதனிடம், அவன் தான் தம்பி எங்க ஒரே பையன். பேரு ராஜா, பேரு மட்டுமில்ல அவன் குணத்திலும் அப்படித்தான். ஏதோ கெட்ட நேரம் அவன் போயி சேர்ந்துட்டான் என்றார் விம்மலுடன்.

அமுதனின் மனம் சற்று இளகியது. அவரை ஆறுதல்படுத்தும் நோக்கில் பேசியவன், என்ன ஆச்சு என்றான்.

எங்க போறாத நேரம் தம்பி இங்க வந்து இப்படி கஷ்டப்படுறோம். எங்களுக்கு சொந்த ஊர் காஞ்சீவரம். பரம்பரை பரம்பரையா நெசவு செஞ்சவங்க நாங்க என்று சொல்லும் போது சுப்புலட்சுமிக்கு நா தழுதழுத்தது. விவசாயிகளுக்கும், நெசவாளிகளுக்கும் என்னைக்கய்யா வேலைக்கு தக்கன கூலி கெடச்சுச்சு? மாங்கு மாங்குன்னு ஒரு மாசம் வேலை செஞ்சாலும், கைக்கும் வாய்க்குமே பத்தல. போராடி பார்த்துட்டு முடியாம நாங்க டவுனுக்கு பிழைப்பு தேடி வந்துட்டோம்.

எங்க பையன் படிச்சு பெரிய உத்தியோகத்துக்கு போவான்னு பெரிய கனவு கண்டோம். அவனும் ஒருத்தரை நம்பி வெளிநாடு போனான். தம்பி இஞ்சினியர் வேலைன்னு கூட்டிட்டுபோயி, ஒட்டகம் மேய்க்க விட்டுட்டானுங்க. தம்பி, புள்ள துடிச்சி போயிட்டான். சரியா சோறு, தண்ணி போடாம, பட்டினி போட்டு, அடிச்சே கொன்னுட்டானுங்க தம்பி. இருபத்தியஞ்சு வயசுதான் என் புள்ள மூஞ்சியக்கூட கடைசி வரைக்கும் நான் பாக்க முடியல அவன இங்க கொண்டு வந்து சேர்க்கக் கூட வசதியில்ல தம்பி.

அவன போன்ல தான் காட்டினாங்க. பிணமா கிடந்தான். உடம்பில ஒட்டுத்துணி கூட இல்லாம போட்டிருந்தாங்க. என் நெஞ்சே வெடிச்சிருச்சு தம்பி என வெடித்து அழுதார். அமுதனுக்கு என்னவோ போல ஆனது. சுப்புவின் கந்தல் துணியை காணும் போது இன்னும் வலித்தது. அவரின் கண்ணீர் அமுதனை ஏதோ செய்தது.

இரவு முழுக்க தூக்கம் வராமல் தவித்தான் அமுதன். மயில்சாமியும், சுப்புவும், அவர்களின் மகனும் வந்து வந்து போயினர். சே… எளிய மனிதர்கள் என்றதும், ஏளனமாக நினைத்துவிட்டேன் என்று மருகினான். வயதுக்கு மீறி கோபப்பட்டபோதெல்லாம், அவர்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாதது இன்று புரிந்தது. நாளை முதல் வேலையாக அவர்களை பார்த்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று எண்ணினான்.

காலையில் நேரமாகவே வீட்டைவிட்டுக் கிளம்பியிருந்தான். கட்டிடத்தினை நெருங்க, நெருங்க ஏதேதோ சப்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. அங்கு அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. கம்பீரமான பத்து மாடிக்கட்டிடம் இடிந்து நொறுங்கியிருந்தது.

திசையெங்கும் மரண ஓலங்கள். ஆம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் அலறிக்கொண்டிருந்தன. விரைந்து வேலையை முடிக்க எண்ணி அதிகாலையிலிருந்தே கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்ததால் அனைவரும் அதில் சிக்கிக் கொண்டனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு கனவு போல அனைத்தும் நடந்தேறிற்று. அமுதனின் நெஞ்சம் பாராங்கல்லாய் கனத்தது. செய்வதறியாது சிலை போல அசைவற்று நின்றிருந்தான்.

அவன் அருகில் வந்த ஒருவர், ‘தம்பி’ என்றழைத்தபோதுதான் சுயத்திற்கு வந்தான். தம்பி கொஞ்சம் உதவி பண்ணுங்க. இந்த கல்லை கொஞ்சம் நகர்த்த உதவினீங்கனா இடிபாடுல யாராவது இருந்த காப்பாத்திடலாம் என்றார்.

உடனே மளமளவென சிதறிய கற்களையும், கலவை ஓடுகளையும் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தான் அமுதன். மனமெங்கும் மயிலையும், சுப்புவையும் தேடியது. கடவுளே, அவங்களுக்கு ஒண்ணும் ஆகியிருக்கக் கூடாது என வேண்டிக் கொண்டான்.

ஒருநாள் முழுவதும் போயிற்று, பாதி பேரைத்தான் பிணமாக மீட்டனர். விடிய, விடிய மீட்புப் பணி நடந்தது. மறுநாள் மதியமே சுப்புவை மீட்டனர். நல்ல வேளையாக உயிர் இருந்தது. உடனே அவருடன் மருத்துவமனை சென்றான் அமுதன். ஏனோ தெரியவில்லை, தாரை, தாரையாக அவன் கண்களிலிருந்து நீர் வழிந்தது.

அன்று மாலைக்குள் மீட்புப் பணியை முற்றிலுமாக முடித்திருந்தனர். அறுபத்திரண்டு உயிர்களில் ஒன்றுகூட மிஞ்சவில்லை. அவர்களை அடையாளம் காண வரிசையாக அடுக்கி வைத்திருந்தனர்.

சுப்புவின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. கடைசியாக அவரை காண்பதற்கு அமுதன் வந்தான். அவனை பார்த்த சுப்பு, அவனின் கைகளை இறுக பற்றிக்கொண்டு பேச முயற்சித்தார். தம்பி… ஈன ஸ்வரத்தில் அவரின் குரல் ஒலித்தது. அமுதன் கூர்ந்து கேட்க ஆரம்பித்தான்.

ராசா, உனக்கொன்னும் ஆகலையே என்று அவர் கேட்டபோது  அமுதனின் இதயத்தை யாரோ வாள் கொண்டு அறுப்பது போல இருந்தது. இல்லை என்று சொல்லும் நோக்கில் தலையசைத்தான்.

ஐயா உன்ன எம்மகனாட்டம் நினைச்சி ஒன்னு சொல்றேன். கேளு சாமி. இந்த வெளிநாட்டு வேலை எல்லாம் வேணாம்பா. என் புருசன் உன்னை பார்க்கறப்போலாம், எங்கிட்ட புலம்பிட்டே இருப்பாரு. உனக்கும் எங்க புள்ள மாதிரி ஆயிடுமோன்னு பயமாருக்குன்னு சொல்லுவாறு. உன் திறமைக்கு இங்கன நல்ல வேலையெல்லாம் கிடைக்கும் ராசா. வெளிநாடு வேணாம்பா எனும்போதே அவர் உயிர் பிரிந்திருந்தது.

அமுதனின் ‘என்னை மன்னிச்சிருங்க’ எனும் கதறல் கேட்கும் முன்னே அவர் மரித்திருந்தார். நடந்த விபத்திற்கு தானும் ஒரு காரணமே என்று அவனது மனது ஆணித்தரமாய் அடித்து கூறியது. அவனால் அழுக முடிந்ததே தவிர, ஒன்றும் செய்ய முடியவில்லை.

விபத்து விசாரணையில் ஆளாளுக்கு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினர். முடிவில் பணம் வென்றது. உறவை இழந்த எளியவர்களின் கதறல் யார் செவியையும் எட்டவில்லை. நிகழ்வு மறந்து போனது.

என்ன நடந்ததென்று அமுதனுக்கு நன்றாக தெரியும். சீக்கிரம் லாபம் பார்க்க நடந்த அவசர கட்டுமானம், விதிமீறல்கள், நீர்நிலையை ஆக்கிரமித்தது, தரமற்ற பொருட்கள், தன் வெளிநாட்டு மோகத்தால் நடந்த இவையனைத்திற்கும் துணை போனது என்று காரணப்பட்டியல் அவனிடமிருந்தது. மனம் கனத்தது.

யாரோ ஒருவனின் பேராசைக்காக இன்னொருவன் சுரண்டப்படுகிறான், பந்தாடப்படுகிறான், வஞ்சிக்கப்படுகிறான் என்று நெஞ்சம் சொல்லிக் கொண்டேயிருந்தது.

சில வருடங்களுக்குப் பின்பு …..

முடியாது சார்…. முடியவே முடியாது…. நீங்க எத்தனை கோடி கொடுத்தாலும் சரி, நான் நீர்நிலைகளை ஆக்கிரமிச்சு கட்டுற இந்த ப்ராஜெக்ட்டுக்கு அப்ரூவல் தர மாட்டேன் என தீர்க்கமாக அதே நேரத்தில் எச்சரிக்கும் தொணியில் சொன்னான் அமுதன் (எ) டவுன் பிளானிங் ஆபீசர்.

அவன் மனதில் நிழலாடியது அன்றையநாள். அடையாளம் காண வரிசையாக வைக்கப்பட்டிருந்த உடல்களில் மயில்சாமியைத் தேடினான். சிதைந்து கிடந்த ஓர் உடலில் ஆடை கிழிந்து கந்தலாகக் கிடந்தார் மயில்சாமி. ஊராரின் மானம் காக்க நூல் தறித்தவனின் கந்தலை, யாராலும் சரிசெய்ய முடியவில்லை. கடைசியில் கந்தல் துணியுடனேயே மண்ணிற்குள் சென்றார் நெசவாளி மயில்சாமி.

Exit mobile version