அடிச்சது லக்கி பிரைஸ்-உலகன் கருப்பசாமி

        

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 178 அடிச்சது லக்கி பிரைஸ்-உலகன் கருப்பசாமி

மூக்கையா போத்திக்கு லாட்டரியில் பன்னிரண்டு கோடி விழுந்த சேதி கேட்டு ஊரே அல்லோல கல்லோலப்பட்டது. ஊர் என்றால் அவர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாச்சியார் புரம். ஒரே சாதியை சேர்ந்த தொண்ணூறு குடும்பங்கள் வசிக்கும் நிலப்பரப்பு. ஆனால் வெகு காலமாய் போத்தி அங்கில்லை. கள்ளியும் பிரண்டையும் ஆவாரம் மூடுகளும் மண்டி, சீனிக்கற்கள் பரவி கிடக்கும் மொட்டைப் பரும்பில், உப்புக் கிணற்றைத் தழுவி வீற்றிருக்கும் ஓட்டுச் சாய்ப்பு தான் அவரது கூடு. போத்தியுடன் சோறு, தண்ணீர் புழங்கக் கூடாதென்பது ஊர் கட்டுப்பாடு. லாட்டரி சமாச்சாரம் கேள்விப்பட்டு பக்கத்தூர் பாண்டியமார்களும், இன்னபிற ஆட்களும் சாரை சாரையாய் வந்து போயினர்.

“வரி பிடித்தம் போக எம்புட்டு கிடைக்கும் கோனாரே”

“பசில இருக்கவங்களுக்கு கொஞ்சம் பாத்து செய்ங்க”

“பெரிசு, எங்க கட்சிக்கு நிதி குடு. உன் ரூவாய்க்கு நாங்க பாதுகாப்பு”

“பூரா ரூவாயையும் எங்க பேங்க்ல கொண்டாந்து போடுங்க.வட்டிக்கு வட்டி”

“இம்புட்டு ரூவாய வச்சு என்ன செய்ய போறீரு”

போத்தி எதற்கும் செவி சாய்க்கவில்லை. நேற்றைப் போலவே இன்றையும் கழிக்க எண்ணினார். வேட்டி கூட கட்டிக் கொள்ளவில்லை. கோவணத்துடன் வலய வலய வந்தார். வீட்டம்மா போய் சேர்ந்தப் பிறகு, புதுத் துணியெல்லாம் எடுப்பதில்லை. வெளியூருக்கோ, கோயிலுக்கோ போனால் கூட வெறும் வேட்டி மட்டும் தான். மேல்சட்டை கிடையாது. பொழுதூரும் நேரம் கிணற்றடியில் மாற்று கோவணத்தை கசக்கிக் கொண்டிருந்தார். அப்போது சந்திராவும் அவள் புருசனும் நாலைந்து சிறுவண்டுகளை கூட்டி வந்தனர். கறிசோறு ஆக்கி, ஆடிப் பாடி போத்தியை களிகூறி வாழ்த்தினார்கள்.

“லாட்டரி சீட்டோட இவட தான வரணும். அது எங்க பணம். மனசுலாயோ”

எவனோ அலைபேசி அச்சமூட்டினான். போத்திக்கு பித்தம் தலைக்கேறியது.  ஊரோ கள்ள மௌனம் காத்தது.ஆஸ்திக்கு ஆளில்லா கிழவனின் பணம் தங்களை வந்தடையாதாவென ஊரான் ஒவ்வொருவனும் மனப் பால் குடித்து காத்துக் கிடந்தான்.

சரியாக மூன்று தசாப்தங்கள் இருக்கும். சுற்றுவட்டாரம் முழுக்க கடும் வறட்சி. மக்கள் தண்ணீருக்கு தட்டழிந்தார்கள். ஊர் பொதுவில் கண்மாய்க்குள் நாலைந்து இடங்களில் ஆயிரம் அடிகளுக்கும் மேல் ஆழ்துளைக் கிணறு அடித்துப் பார்த்தார்கள். வெண்புழுதி தான் பறந்ததே ஒழிய ஒரு சொட்டு தண்ணீர் கூட மேலெழும்பவில்லை. அருகாமை ஊர்களில் இம்மியளவு தண்ணீர் கிடந்த கிணறுகளில் கூட,வேற்று ஆட்கள் ஊடுருவாமலிருக்க இராப்பகலாய் காவல் ஆள் நின்றது.

மூக்கையா தூர்ந்து போன பூர்வீக கிணற்றை தோண்டி பார்ப்போமென கடப்பாரை, மண்வெட்டியை கையிலெடுத்தார். பெண்சாதி சுப்பம்மாவும் கூட்டுச் சேர்ந்து கொண்டாள். சனம் சிரித்தது. வற்றாத கிணறுகளே காய்ந்து கிடைக்கையில் கள்ளிக் காட்டில் எப்படி தண்ணீர் கறப்பது? புருசனும் பொண்டாட்டியும் பிடிப்புடன் வேலை செய்தார்கள். சரியாக எழுபதாவது நாள் ஈரப்பதம் வர ஆரம்பிக்க, மறுதினம் ஈசானி மூலையில் ஊற்றொன்று தென்பட்டது. வாமடையை உடைத்து பாயும் நீர் போல உப்புத் தண்ணீர் பிரவாகம் எடுத்து கிணற்று மட்டம் உயர்ந்தது. சிரித்த பதர்கள் நாணிக் குழைந்து கும்பிடு போட்டார்கள். மூக்கையா கிணற்றை ஊருக்கென நேர்ந்து விட்டார். கூடிப் பேசினார்கள். ஊரார் எல்லாரும் சேர்ந்து மூக்கையாவுக்கு வருசத்துக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டுமெனவும், உப்புக் கிணறு ஊருக்கு பொதுவெனவும் முடிவெடுக்கப்பட்டது.

ஊரை விட்டு தள்ளி இருபது சொச்சம் காலனி வீடுகள் இருந்தன. அங்கேயும் தண்ணீர் பஞ்சம் தான். ஒரு நள்ளிரவில் சந்திராவும் அவள் புருசனும் வந்தார்கள்.

“குட்டைல கெடக்க தண்ணிய கைல தொட முடியல,பிசு பிசுன்னு ஒட்டுது” 

“பிய் வாடை வருது, ரெண்டு குடம் தண்ணீ தாங்களேன் கோனாரய்யா, நல்லாயிருப்பய”

மூக்கையா சுப்பம்மாவை ஏறிட்டார். அவள் கண்ணசைக்க, ஒன்றன்பின் ஒன்றாக காலனி திரள் வந்து, துவைத்து குளித்துச் சென்றது. கையெடுத்து கும்பிட்ட சந்திராவின் கரங்களை தட்டி விட்ட சுப்பம்மா,

“தண்ணியும் காத்தும் எல்லாத்துக்கும் பொது. இப்பிடி யார்கிட்டயும் போய் ஊழக் கும்பிடு போட்டுக்கிட்டு நிக்காத”

சூரியன் எழும் முன் புல்லட்டில் குளிக்க வந்த பரமன், இரவெல்லாம் காலனி சனம் குளித்த தடத்தை மோப்பம் பிடிக்க,

“ஊர்க்காரவிய பூராம் பகல்ல குளிக்கய, நமக்கு ராக்குளியல் தான்”

“சின்னையா நீரு ஒத்த ஆள் குளிச்ச மாரி இல்லையே”

போத்தியின் கண்கள் அலைபாய்ந்தன. பரமன் கண்டு கொண்டான். கோபத்தை சிரிப்பு மூடி கொண்டு, மூடிப் போனான். காலனிப் பொடியன்கள் நிலவொளியில் நீந்திக் கொண்டிருக்கையில் ஊர் திரண்டு வந்தது. கற்களும் கட்டைகளும் பறந்து வந்தன. சிரங்கள் உடைந்து கிணற்றில்  குருதி கலந்தது. கலகம் பிறந்தது.

நியாயத்தை பிறப்பிக்க, மூக்கையா காலனியை கரம்பிடித்தார். சந்திராவும் அவள் கணவனும் சேர்ந்து வன்கொடுமை வழக்குப் போட்டார்கள். மூக்கையா சாட்சி சொன்னார். மாரியும் கருத்தபாண்டியும் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஊர் கூடி மூக்கையாவை ஒதுக்கி வைத்தது. யாரும் அவருடன் அன்னம் தண்ணீர் புழங்கவோ, உறவாடவோ கூடாதென தண்டோரா போட்டு சொன்னார்கள். அன்று முதல் உப்பு கிணறும், மூக்கையா போத்தியும் காலனி சனங்களின் உதிரச் சொந்தமாகிப் போனார்கள்.

ஒருநாள் சுப்பம்மா செத்துப் போனாள். சொக்காரான், சொகக்காரன் எவனும் வரவில்லை. காலனிக்காரர்கள் தான் ஊர்வலமாய் அவளை தூக்கிக் கொண்டு போய் எரித்தார்கள். 

போத்தியின் சேக்காளி மகன் ஐசக் எர்ணாகுளத்தில் பழைய இரும்பு, தகரம், பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி, விற்கும் தொழில் பார்க்கிறான். போத்தியை அவ்வப்போது கேரளாவுக்கு அழைத்துச் செல்வான். சில நாட்கள் தங்கி பொருட்களை தரம் பிரித்து கொடுப்பார். கட்டஞ்சாயா உறிஞ்ச செல்கையில் லாட்டரி சீட்டொன்றை வாங்கி வேட்டியில் முடிந்து கொள்வார். வேலைக்கு மிஞ்சிய கூலி கொடுத்து வழியனுப்புவான் ஐசக். பார்வை மங்கிப் போனதால் இனிமேல் சேர நாட்டுப் பயணம் வேண்டாமென நினைத்திருந்த வேளையில் தான் போத்திக்கு அடித்தது லக்கி பிரைஸ்.

போத்தியின் உடன்பிறந்த அண்ணன் மகன் தான் பரமன். இரண்டு கொலைகள் செய்த படுபாவி. வாரிசு வேலைக்காக அப்பனை கொன்றவன். சொத்துக்காக தம்பியை போட்டுத் தள்ளியவன். பிள்ளை குட்டி இல்லா மூக்கையாவின் காணி நிலமும், வற்றா உப்பு கிணறும் என்னைக்காயிருந்தாலும் நமக்கு தான் என்றெண்ணி பவனி வந்தவன். ஏழு கோடியை அபகரிக்க கணக்கு போட்டான். ஒன்றுக்கு இரண்டாய் ஆசை வார்த்தை காட்டி ஊரை தன் வசப்படுத்தினான். மக்கள் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு, அவன் பின்னே வாலாட்டினார்கள். 

“சின்னையா உன்னைய ஊர் மன்னிச்சி ஏத்துக்கிச்சு. உன் காலத்துக்கு பெறவு லாட்டரி பணம் பூராம் நம்ம ஊருக்கு ஆவட்டும்ன்னு மட்டும் எழுதி குடுத்திரு. அம்புட்டுதான்.  இனி நீ ஊருக்குள்ள வந்துக்கோ, சாமிய கும்பிட்டுக்கோ, போதுமா”

“வேண்டாம்டே” 

“அந்த காலனி செறுக்கிவிள்ளியளுக்கு குடுக்க போறியோ”

“இப்போ வரைக்கும் அந்த யோசனை இல்ல”

“என்ன செய்யனும்? உன் விருப்பத்த சொல்லு, செய்தோம்”

வானத்தை ஏறிட்டார் போத்தி. கலைந்து செல்லும் மேகங்களுக்குள்ளே, அவர் பெண்சாதி சுப்பம்மா தென்பட்டாள். கிணற்றில் குளித்த காலனி சிறார்களில் ஒருவன் உயிர் நீத்த அன்று, உடைந்து நின்ற மூக்கையாவிடம் சுப்பம்மா இப்படிச் சொன்னாள்,

“எய்யா… சக்தி இருக்குற கழுத மேலதான் நெறைய பொதி ஏறும். கடவுள் கடுத்தத்த குடுக்காம்னா, நம்மல ரொம்ப நம்புதாம்னு அர்த்தம். எப்பயும் அடி, மிதி படுதவன் பக்கம் நிப்போம்.ஒன்னும் கெட்டுப் போயிர மாட்டோம்”

“என்ன சொல்லுதீரு”

பரமன் குறுக்கிட்டான். தெளிந்த நீரோடையாய் மாறிப் நின்ற போத்தி,

“சரிடே, எங்கப்பனும் ஆத்தாளும் எனக்கு சின்ன வயசுல காது குத்த அயத்துப் போனாவ. அதனால என்னைய நம்ம குலதெய்வம் கோயிலுக்கு கூட்டிட்டு போயி மொட்டையடிச்சி… 

ஊர் செலவில் தடபுடலாய் ஏற்பாடுகள் நடந்தன. ஏழு இளம் வெள்ளாட்டங்கிடாய்களும் ஏழெட்டு சேவல்களும் வரவழைக்கப்பட்டன. போத்திக்கு மொட்டை அடித்த பின், அவரது பால்ய நண்பரான இசக்கி ஆசாரி பொக்கை வாயை காட்டிச் சிரித்துக் கொண்டே, கடுக்கன் குத்தி விட்டார். மலர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்த மூக்கையாவின் மனதுக்குள் பதுங்கிக் கிடந்ததை யாரும் அறிந்திருக்கவில்லை. பூமாலை சூட்டி, தண்ணீர் ஊற்றி கிடாய்கள் வெட்டப்பட்டன. பரமன் கிடாயை போத்தியாய் நினைத்து ஓங்கி வெட்டினான். 

ஒரு காலத்தில் போத்தி குலதெய்வம் கோவிலின் தர்மகர்த்தாவாக இருந்தவர். ஊர் அவரை ஒதுக்கி வைத்தப் பின்பு வந்த கொடை ஒன்றிற்கு, 

“நீங்க என்னல என்னய வரக்கூடாதுன்னு சொல்றது? ஏன் அப்பன் வீட்டு கோயிலுக்கு வர எவனல கேக்கணும்” 

இளவட்டங்கள் அரிவாள்களுடன் காத்திருந்த வேளையில், துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு போய் சாமி கும்பிட்டு திரும்பினார். ஒரு திங்கள் கழித்து, மனசு சரியில்லா மதிய வேளையொன்றில் கோவிலுக்கு சாமி கும்பிட போயிருந்தார். கோயிலின் வெளியே ஒதுக்குப் புறத்தில் இருக்கும் சங்கிலிப் பூதத்தார் பூடம் முன்பு காலனி பெண்ணொருத்தியும் அவளது நான்கு வயது பச்சிளம் குழந்தையும், சுடு மணலில் கால் பொசுக்க நின்று வேண்டுவதை கண்டார். கசிந்துருகி கையசைத்தார். தாயும் மகளும் கோவிலினுள்ளே பிரசவித்தார்கள்.சாஸ்தாவை கும்பிடச் சொல்லி, தீருநீறு கொடுத்து, இளைப்பாறிய பின் அனுப்பி வைத்தார். விசயம் காட்டுத் தீயாய் பரவியது. மறுபடியும் ஊர் கூடியது. கண்டவளை கோவிலுக்குள் கூப்பிட்டாரென போத்தியை வசை பாடி, தூற்றி கோவிலை விட்டும் ஒதுக்கி வைத்தார்கள்.

போத்தியிடம் கைநாட்டு வாங்க பத்திரத்துடன் காத்து நின்றான் பரமன். அவர் பந்தியில் எலும்பு கடித்துக் கொண்டிருந்தார்.அந்நேரம் காலனி மக்கள் கோவிலை நோக்கி படையெடுத்தார்கள். சாதி இளவட்டங்கள் நாக்கை துருத்திக் கொண்டு அரிவாளை உருவினார்கள். போத்தி தன் சொந்தங்களை வரவேற்று, சாமி காண்பித்து, கறி சோறு பரிமாறினார். கோபக் கனலால் கொதித்தெழுந்தோரை பரமன், லாட்டரி பணம் ஏழு கோடியை நம்மாளுங்க இருக்குற தொண்ணூறு வீடுகளுக்கும் பங்கு வைத்தால் ஆளாளுக்கு ஏழரை லட்சம் கிடைக்குமென கணக்கு போட்டு காண்பித்து மட்டுப்படுத்தினான். 

வெள்ளாட்டங்கறி ஏப்பமிட்ட போத்தி, வெற்றிலையை உதப்பிக் கொண்டே  

“இனிமே எம்பிள்ளைக பூராம் இந்தக் கோயிலுக்குள்ள வரும். உங்களப் போலவே சாமி கும்பிடும், சாஸ்தாவுக்கு கிடாய் வெட்டி, பொங்கல் வைக்கும். இதுக்கு சம்மதிச்சு எழுதிக் குடுத்தியன்னா லாட்டரில வார பணம் பூராம் ஊர் பொதுக்கு”

பணமென்றால் பிணம் கூட வாயை பிளக்குமல்லவா! ஊர் சம்மதித்தது. காலனி சனம் போத்தியை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். சந்திரா மட்டும் முகத்தை திருப்பிக் கொண்டு போய் விட்டாள்.  வீட்டுக்கு ஒரு ஆண் வீதம் தொண்ணூறு பேர் போத்தியை கூட்டிக் கொண்டு லாட்டரி பணத்தை பெற்று வர கேரளா பயணமானார்கள். அப்போதும் போத்தி ஒரு ஓணம் பம்பர் லாட்டரி சீட்டை வாங்கி வேட்டியில் முடிந்து கொண்டார். 

“கிழட்டு பயலுக்கு ஆச விடுதா பாரேன்!”

மறுநாள் வந்து காசோலையை பெற்றுக் கொள்ளலாமென ஒரு மூத்த அதிகாரி மலையாளத்தில் சொல்ல, ஐசக்கின் குடோனில் இராத்தங்கல் என முடிவானது. நடுநிசியில் புகுந்த போலீஸ் பட்டாளம் “மூக்கையா எவட, மூக்கையா எவட”வென கேட்டு எல்லோரையும் சகட்டுமேனிக்கு அடித்து நொறுக்க, போத்தி பதறியடித்து எழுந்து வந்தார். பரிசு விழுந்த லாட்டரி சீட்டை பறித்துக் கொண்டார்கள். எவனோ செய்த சூழ்ச்சி! காணாமல் போன லாட்டரி சீட்டை போத்தி திருடி விட்டாரென்று புகார். போத்தி கெஞ்சி கூத்தாடிப் பார்த்தார். துரும்பும் அசையவில்லை. பணம் இல்லையென்றானதும் பரமன் சின்னையாவை காறி துப்பிவிட்டு, ஆட்களுடன் நடையை கட்டினான். மூன்று நாட்கள் போலீஸ் காவலில் இருந்துவிட்டு போத்தி பரும்பு காட்டுக்கு திரும்பினார்.

ஊர் கொதித்து போய் கிடந்தது. கிழவனை என்ன செய்து என்னவாகிவிடப் போகிறது?, மக்கள் வயிற்றெரிச்சலில் கிடந்தார்கள். காலனி சனம் போத்தியை தேற்றியது.  அவருக்கு தினமும் சோறு குழம்பு கொடுக்க வரும் சந்திரா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவள் பேசாதது போத்தியை என்னமோ செய்தது. தான் செய்த பிழையென்னவென்று பிடிபடாமல் வருந்தினார். மறுதினம் உப்புக் கிணற்றில் துணி அலசிக் கொண்டிருந்த சந்திராவை நோக்கி ஓடி வந்தார் மூக்கையா. தனக்கு மறுபடியும் லாட்டரியில் 25கோடி விழுந்திருப்பதை சொன்னார். அந்த லாட்டரிச் சீட்டை காட்டினார்.  

“பரமன் கிட்ட போயி இந்த சீட்டக் குடுத்திட்டு, நம்ம பிள்ளைக கோவிலுக்குள் போக ஏற்பாடு பண்ணப் போறேன்”

“அந்த சாமி இதுவரைக்கும் எங்களுக்கு எந்த நல்லதும் செய்யல. மாறி மாறி அந்த தப்ப செய்யாதிய கோனாரய்யா. எனக்கு மண்ட சூடாவுது”

ஒரு கணம் சுப்பம்மாளை காண்பது போலிருந்தது மூக்கையாவுக்கு.

“என்ன செய்ய தாயி, நீ சொல்லு”

“நம்ம பிள்ளையளுக்கு படிப்ப மட்டும் குடுங்க, அதுக பெழச்சுக்கும்”

இரண்டு நாள் கழித்து தான், சேதி ஊருக்குள் கசிய ஆரம்பித்தது. போத்தி இறந்துவிட்டால் வாரிசுப் படி பணம் முழுவதும் தன்னையே வந்து சேருமென கட்டம் கட்டிய பரமன், பரும்புக்குள் புல்லட்டில் வந்திறங்கினான். பிரண்டைத் தூரொன்றில் கண்ணசந்து கிடந்த போத்தியைக் கண்டான். முதுகுப் பக்கம் கைவிட்டு வீச்சரிவாளை உருவிக் கொண்டு, அந்த எண்பது வயது கிழவனை நோக்கி நடந்தான்.    

மொத்தப் பணமும் காலனி பிள்ளைகளின் படிப்பு செலவுக்கென, சந்திரா முன்னிலையில் போத்தி பத்திரத்தில் கையொப்பமிட்டது பரமனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை…

Exit mobile version