ஆறிலிருந்து அறுபது வரை-சத்யராஜ்சுரேந்தர்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 183 ஆறிலிருந்து அறுபது வரை-சத்யராஜ்சுரேந்தர்




பஸ் கிண்டி கத்திபாரா பாலத்தை தாண்டி வந்து கொண்டிருந்தது…கண்டக்டர் பஸ்ஸிலிருந்த எல்லோரிடமும்  டிக்கெட் எடுக்காதவங்க..எடுத்துகோங்க…செக்கிங் கிண்டி பஸ் ஸ்டாப்ல இருப்பாங்க..டிக்கெட் எடுக்கலன்னா ஃபைன் தான் போடுவாங்க…அதனால டிக்கெட் எடுக்காதவங்க டிக்கெட் வாங்கிக்கோங்க..என கண்டக்டர் 21G  பஸ்ஸில்   சென்ற பயணிகளிடம் சொல்லி கொண்டிருந்தார்…

“இந்தாம்மா ஒயிட் சுடிதார்  அந்த  மஞ்சப்பை வச்சிருக்கிற ஆளை கூப்பிடு என கண்டக்டர் ஒரு பெண்ணை பார்த்து சொல்ல  அந்த பெண் அருகில் இருந்த  வயதான முதியவரிடம் உங்கள கண்டக்டர் கூப்பிடுறார் என சொன்னாள்…

பாவம் அவருக்கு சரியாக காது கேட்காது…கொஞ்சம் சவுண்டாக பேசினால் தான் காது கேட்கும்…..அந்த பெண் முதியவரிம் கண்டக்டர் கூப்பிடுகிறார் என சொன்னதும் அந்த முதியவர் அந்த பெண்ணை பார்த்து …என்ன தாயி என்னை கூப்பிட்டீங்களா..? கொஞ்சம் சவுண்டா பேசுங்க…எனக்கு கொஞ்சம் காது சரியா கேட்காது என சொன்னார் ..

ஓ…. அப்பிடியா  …..சரியா போச்சு..எனக்கு சவுண்டா பேச வராதே என முனங்கியவாறே ..உங்கள  கண்டக்டர் கூப்பிடுறார் என சத்தமாக அந்த முதியவரிடம் சொன்னாள் அந்த பெண்…ம்..ம்…கண்டக்டர் கூப்பிட்டாரா என கண்டக்டரை பார்த்தார் அந்த முதியவர்….பஸ்ஸின் பின்புறம் கண்டக்டர் சீட்டில் இருந்த கண்டக்டரை முதியவர் பார்த்தும்…அய்யா பெரியவரே…அடுத்த ஸ்டாப் தான் கிண்டி ….நீங்க இறங்க வேண்டிய இடம்..மறந்திடாதீங்க …என சொல்லிவிட்டு கடவுளே அவருக்கு காது சரியா கேட்காதுல்ல என தனக்குள் பேசிக்கொண்டே ஏம்மா ஒயிட் சுடிதார் அந்த பெரியவர்கிட்ட அடுத்த பஸ் ஸ்டாப் தான் அவர் இறங்க வேண்டிய ஸ்டாப்னு  சொல்லிடுங்க …பாவம் அவருக்கு காது கேட்காது என கண்டக்டர் சொன்னார்…..

கண்டக்டர் ஏதோ சொல்வதை கண்ட முதியவர்  ஒன்றும் புரியாமல் நிற்க தன் பக்கத்தில் இருந்த பெண் அந்த முதியவரை கூப்பிட்டு அய்யா பெரியவரே.. நீங்க அடுத்த பஸ் ஸ்டாப்ல இறங்கனுமாம் என உரத்த குரலில் சொன்னாள்…ஓ…..சரி ..சரி..என அந்த பெரியவர் தலையை ஆட்டி கொண்டே பஸ்ல இருந்த கம்பியை கெட்டியாக பிடித்தவாறு நின்று கொண்டு வந்தார்…

 பஸ் கிண்டி பஸ் ஸ்டாப் நெருங்கியதும் அந்த ஒயிட்  சுடிதார் போட்ட பெண் அந்தப் பெரியவரிடம் அய்யா வர்ற ஸ்டாப் தான் நீங்க இறங்க வேண்டிய பஸ்ஸ்டாப்…. என வேகமாக சொல்ல பஸ்ஸில் பயணித்த அனைவரும் அவளை ஒரு மாதிரியாக பார்த்தனர்…… 

சரி தாயீ.. ரொம்ப நன்றி தாயீ… இந்த  இந்த பஸ் ஸ்டாண்ட்ல தான் இறங்க வேண்டுமா என்று பெரியவர் மறுபடியும் கேட்டார் .. ஆமா.. பெரியவரே  அப்படித்தான் அந்த கண்டக்டர் என்கிட்ட சொன்னதாலதான் நான் உன் கிட்ட சொன்னேன்…. அதனால தான் அடுத்த பஸ் நிக்குற இடம் கிண்டி பஸ் ஸ்டாப்னு உங்களுக்கு சொன்னேன் என்று ஒயிட்  சுடிதார் போட்ட பெண் மறுபடியும்  பெரியவருக்கு தெளிவாகப் புரியும்படி சொன்னாள்….

 அப்படியா தாயீ… ரொம்ப நன்றி..  நல்லா இருப்ப தாயீ என்று சொல்லிவிட்டு  பஸ்ஸில் இருந்து இறங்க தயாரானார் அந்த பெரியவர்…. கிண்டி பஸ் ஸ்டாப் வந்தது …பெரியவரே நீங்க இறங்க வேண்டிய இடம் இதுதான் இறங்குங்க  என்று அந்த பெண் சொன்னதும் சரிங்க தாயீ  என்று சொல்லிவிட்டு அந்த பெரியவரும் பஸ்ஸில் இருந்து கீழே இறங்கினார்…. பெரியவர் பஸ்ஸில் இருந்து இறங்கியதும்   ஒயிட்  சுடிதார் போட்ட பெண்ணும் பயணிகள் சிலரும்  அதே கிண்டி பஸ் ஸ்டாப்பில் இறங்கினர்…

பஸ்ஸிலிருந்து இறங்கிய பெரியவர் அந்த பஸ் ஸ்டாப்பை சுற்றிலும் பார்த்தார்….என்ன வெயிலு ..இந்த ஊர்ல இருக்கிறவங்கலாம் எப்படி தான் இநத வெயிலோட வாழ கத்துகிட்டாங்களே….முருகா…என்று சொல்லி கொண்டே சற்று தூரம் நடந்து வந்தார்…வெயிலின் தாக்கம் அதிகமா இருந்ததால் அந்த முதியவரால் நடக்க முடியல…..

 கிண்டி பஸ் ஸ்டாப்பில் இருந்த சில ஆட்டோ  டிரைவரிடம் கிண்டி பூங்கான்னு ஒரு இடம் இருக்காமே அங்க வரை போகனும்…கிண்டி பூங்கா வர ஆட்டோக்கு  எவ்வளவு ஆகும்பா என ஆட்டோ டிரைவரிடம் அந்த முதியவர் கேட்டார்… நூத்தம்பது ரூபாய் ஆகும் என்று அந்த ஆட்டோ டிரைவர் சொல்ல அவ்ளோ ரூபாய் ஆகுமாப்பா என யோசித்தபடி தன் சட்டைப் பையை பார்த்தார் அந்த பெரியவர் ….வெறும் நாற்பத்தி ஐந்து ரூபாய்தான் இருந்தது….

 ஏப்பா ஒரு இருபது ரூபாய் தாரேன் என்னைய அந்த பூங்காவுல இறக்கிவிட்டுறீயா என பெரியவர் கேட்க…என்னாது இருபது ரூபாயா…பெட்ரோல் விகமகுற விலைக்கு அதெல்லாம் கட்டுப்படி ஆகாது பெரியவரே வேணும்னா ஒரு நூறு ரூபாய் கொடுங்க….ஆட்டோவுல கொண்டு போயி பூங்காவுல இறக்கி விட்டுடுறேன்….என்றார் ஆட்டோக்காரர் …..

இருக்கட்டும் பரவாயில்லை…. நான்  நடந்தே போறேன் ..கிண்டி பூங்காவுக்கு எப்படி போகனும்னு  வழியை மட்டும் சொல்லுப்பா என்று அந்த ஆட்டோ டிரைவரிடம்  கேட்டார் முதியவர்… இப்படியே நேரா போயி லெப்ட் எடுத்து   நடந்து போனீங்கன்னா ஒரு  ஸ்பென்சர் மால் தெரியும்… அதிலிருந்து ரைட் எடுத்து நேரா உள்ள போனீங்கன்னா கிண்டி பார்க்தான் என்று அந்த ஆட்டோ டிரைவர் முதியவரிடம் சொன்னார்….

 சரி நல்லதுப்பா நன்றி….என்று சொல்லிவிட்டு கிண்டி பஸ் ஸ்டாப்  சாலை ஓரத்திலேயே நடந்தபடி வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் நடந்து கொண்டு வந்தார் பெரியவர்… அப்போது பஸ்ஸில் பயணம் செய்து கொண்டு வந்த அந்த ஒயிட் சுடிதார் போட்ட பெண் அந்த பெரியவரை  பார்த்தாள்… வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் கால்களில் செருப்பு இல்லாமல் தத்தளித்த படி  நடந்து படியே வந்தார் அந்த பெரியவரை பார்த்து இரக்கப்பட்டாள்…..

 ஐயா …நீங்க எங்க போகணும் … இப்படி கால்ல செருப்பு கூட இல்லாமல் நடந்து வாரீங்களே எங்க போகணும் என்று கேட்டாள் அந்த பெண்… அந்தப் பெண்ணை பார்த்து அம்மா தாயீ… இங்க இருந்து கிண்டி பூங்கா எப்படி போகனும்னு கூட எனக்கு தெரியல …அந்த ஆட்டோ டிரைவர்கிட்ட கண்டி பூங்கா வர முடியுமான்னு கேட்டேன்…காசு அதிகமா கேட்டதால அவர் சொன்ன வழி கூட தெரியாம நடந்து வந்துகிட்டு இருக்கேன் என அந்த பெண்ணிடம் சொன்னார் பெரியவர் ….

 ஐயா கிண்டி பார்க் இங்கிருந்து கொஞ்சதூரமா இருக்கு…எப்படி நடந்து போவீங்க .. வெயில் மண்டைய பொழக்குற இந்த மத்தியான  நேரத்துல கால்ல செருப்பு கூட இல்லாம நடந்துகிட்டு போறீங்க… நான் அந்த வழியாத்தான் போறேன் என் பைக்ல ஏறுங்க… உங்கள கிண்டி பார்க்கலாம் இறக்கிவிட்டு போறேன் என்று அந்த ஒயிட் சுடிதார் போட்ட பெண் பெரியவரிடம் சொன்னாள்… ரொம்ப நன்றி தாயே அந்த பார்க்கு எங்க இருக்குன்னு கூட எனக்கு தெரியாது தாயீ… அந்த ஆட்டோ டிரைவர் ஏதோ வழிய  சொன்னதால ரோட்டோரமா  நடந்து போய்கிட்டு இருக்கேன்.. நல்ல வேளை நீ  அந்த பார்க்ல இறக்கி விடுறேன்னு  சொன்ன தாயீ…ரொம்ப நன்றி… தாயீ அந்த பார்க்ல  மட்டும் என்ன இறக்கிவிட்டுடு தாயீ… உனக்கு புண்ணியமா போகும் என்று அந்த பெண்ணை பார்த்து கையெடுத்துக் கும்பிட்டார் பெரியவர்… 

ஐயா நான் உங்கள விட வயசுல சின்ன பொண்ணு… என்ன கும்பிட வேண்டிய அவசியமில்லை …போற வழியில உங்களை இறக்கி விட்டு ஆபிஸ்  போறேன் …வண்டில ஏறுங்க என்று சொல்லவும் சரிங்க தாயீ என்று சொல்லிவிட்டு அந்தப் பெண்ணின் பைக்கில் தட்டு தடுமாறி ஏறினார்  முதியவர்… ஐயா பின்னாடி இருக்க கம்பியை கெட்டியா புடிச்சுக்கோங்க…இந்த ரோடு கொஞ்சம் மோசம் …அதனால வண்டி குலுங்கும்.. என்று அந்தப்பெண் சொல்ல பெரியவர் ஏதும் பேசாமல் போகட்டு்ம் தாயீ  என பதில் சொன்னார்…

 ஓ… நான் சொன்னது அந்த பெரியவருக்கு காது கேக்கலையா… என்று கண்ணாடியை பின்புறமாக பார்த்தாள்  அந்த பெண் …பெரியவர்கள் பின்புறமாக இருந்த கம்பியை இறுக்கமாக பிடித்து இருந்ததை பார்த்து  தனது பைக்கை ஸ்டார்ட் செய்து கிண்டி சாலையில் ஓட்டிச் சென்றாள் அந்த பெண்… அந்தப் பெண் தனது பைக்கை ஓட்டிச் செல்ல வானளவு உயர்ந்த கட்டங்களை பார்த்தவாறே அம்மா எவ்வளவு பெரிய கட்டடமா இருக்கு…  

ஆனா இங்க வாழ்ற மனுஷங்கதான் மிஷின் மாதிரியான  வாழ்க்கையை வாழ்ந்து கிட்டு இருக்காங்க என்று பெரியவர் தானாக சொல்லிக்கொண்டே வந்தார்.. முதியவர் அந்த கட்டணங்களை பார்த்து பிரமிப்புடன் சொன்னதைக் கேட்டு அந்த பெரியவர்  சென்னைக்கு புதிது என்பதை உணர்ந்து கொண்டாள்…. கிண்டி பார்க் அருகில் வந்ததும் ஐயா கிண்டி பார்க் வந்துருச்சு நான் உங்களை இறக்கி விட்டுட்டு போறேன் …நீங்க யாரை பார்க்க வந்தீங்க என்று கேட்டாள்…

 அந்தப் பெண் கூறியது பெரியவருக்கு அரைகுறையாக

 கேட்டதால் அம்மா தாயே நீங்க சொல்றது எனக்கு சரியா காதுல விழல வண்டியில இருந்து நான் இறங்கினதும் என்னன்னு சொல்லுங்க என்று சொன்னார் அந்த பெரியவர்… அந்த ஒயிட் சுடிதார் போட்ட பெண் சிரித்துக்கொண்டே சரிங்க ஐயா என்று சொல்லிவிட்டு கிண்டி பார்க் வாசலின் முன்பு தனது பைக்கை நிறுத்தினாள்..

 பைக்கை நிறுத்தியதும் பைக்கில் இருந்து இறங்கிய பெரியவர் ரொம்ப நன்றி தாயி இதுதான் கிண்டி பார்க்கா ..இதுக்கு போயா அந்த ஆட்டோக்காரன் நூத்தம்பது ரூபாய் கேட்டான்….என்று தனக்குள் பேசியபடியே இருந்தார்…அய்யா… இதுதான் கிண்டி பார்க்….நீங்க யார பாக்கணும் என்று சத்தமாக கேட்டாள்… ஆனால் அந்த முதியவர் அந்தப் பெண் சொன்னதைக் கேட்காமல் பார்க் உள்ளே யாரையோ எதிர்பார்ப்பது போல எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தார்… 

பூங்காவை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த அந்த பெரியவரை பார்த்து ஐயா என்று அநனத பெண் கூப்பிட்டதும்  திரும்பி பார்த்தார் அந்த பெரியவர்..சொல்லுங்க தாயி கூப்படீங்களா என்று கேட்டார்…  இங்க யாரைப் பார்க்க வந்தீங்க என அந்த பெண் கேட்டதற்கு என் பொண்டாட்டி இங்கதான் வர்றேன்னு சொன்னா தாயீ.. அதான் வந்துட்டுட்டாளான்னு எட்டி பாக்குறேன்  என்று  பெரியவர் தன் மனைவியை பார்க்கும் ஆவலாய் அந்தப் பெண்ணிடம்  சொல்லிக்கொண்டிருந்தார்…

 சரிங்க ஐயா …உங்க வீட்டுக்காரம்மா பார்க் உள்ளே தான் இருப்பாங்க… நீங்க போய் பாருங்க எனக்கு ஆபீசுக்கு டைம் ஆயிடுச்சு ..நான் கிளம்புறேன்… என்று சொல்லிவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்தாள் அந்தப் பெண்.. சரிங்க தாயீ… பாத்து பத்திரமா போங்க ..உங்க புள்ளை குட்டிங்க எல்லாரும் நல்லா இருப்பாங்க என்று பெரியவர் தன் தோளில் இருந்த துண்டை தன் கையில் வைத்தபடி சொல்ல அந்தப் பெண்ணும் சிரித்துவிட்டு சரிங்க அய்யா நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு பைக்கை எடுத்து கிளம்பினாள்…

 அந்தப் பெண் போனதும் பார்க் உள்ளே நுழைந்தார் பெரியவர்… பார்க் உள்ளே சென்று நடைபாதையில் நடந்து கொண்டே தனது மனைவியை தேடிக் கொண்டிருந்தார் பெரியவர்… ஒரு மரத்தடியின் கீழே இருந்த பெஞ்சில்  ஒரு வயதான பெண்மணி தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார் அந்த பெரியவர்.. தூங்கிக் கொண்டிருப்பது வேற யாரும் இல்ல தனது மனைவி தான் என்பதை புரிந்து கொண்டு அந்த பெஞ்சுக்கு அருகில் சென்றார் அந்த பெரியவர்… 

 சிவகாமி என்று  அந்தப் பெரியவர் கூப்பிட்டதும் பெஞ்சில் படுத்திருந்த அந்த வயதான பாட்டி எழுந்து உட்கார்ந்து வாங்க எவ்வளவு நேரம் காத்திருக்கேன்..நானும் காத்திருந்து காத்திருந்து ரெம்ப நேரமா நீங்க வராததால கொஞ்ச நேரம் தூங்கிட்டேன் ..இப்பதான் வந்தீங்களா என்று கேட்டார்  அந்த வயதான பெண்மணி… 

ஆமா சிவகாமி .. நம்ம புள்ள வீட்டிலிருந்து நடந்து வர கொஞ்சம் லேட் ஆயிடுச்சு …அதுவுமில்லாம இந்த பூங்காவுக்கு  ஆட்டோவுல வர நூத்தம்பது ரூபாய்  ஆட்டோக்காரன் கேக்குறாங்க அதனால நடந்து வந்துக்கிட்டு இருந்தேன் ஒரு நல்ல வேளை ஒரு மகராசி என்ன பைக்ல வந்து இறக்கி விட்டுட்டு போறாங்க…. ஐயோ.. அந்த பொண்ண உன்கிட்ட  அறிமுகப்படுத்த மறந்துட்டேன் ..என்னை மன்னிச்சிடு சிவகாமி  என்று பூங்கா கேட்டை பார்த்தவாறு தன் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்… 

பரவாயில்லைங்க அடுத்தமுறை அந்த பொண்ணு உங்க கண்ணுல பட்டுசின்னா மறக்காம கூட்டிட்டு வாங்க என்று சொன்னார் அந்த வயதான பாட்டி…. சரி சிவகாமி என்று தலையாட்டிவிட்டு ம்..ம்.. சிவகாமி சாப்பிட்டியா என கேட்டார் அந்த பெரியவர்…. சாப்பிட்டேங்க…வீட்ல நம்ம  மாப்பிள்ளையும்  நம்ம பொண்ணும்  சீக்கிரமாவே ஆபிஸீக்கு கிளம்பி போயிட்டாங்க… அதனால நம்ம பேர குழந்தைகளுக்கு தோசை ஊத்தி கொடுத்து விட்டு நானும் சாப்பிட்டு வந்தேங்க…என்று சொன்னார்  அந்தப் பெரியவரின் மனைவி சிவகாமி..

 நீங்க சாப்பிட்டீங்களா என்று கேட்டதற்கு  சாப்பிட்டேன் சிவகாமி…  நேத்து மிச்சமிருந்த இட்லிய உதுத்து  போட்டு தாளிச்சு உப்புமான்னு  வச்சிருந்தா உன் மருமகள்..அத ரெண்டு வாயி சாப்பிட்டுட்டு  உன்னை பார்க்க கிளம்பி வந்துட்டேன் சிவகாமி என்று தயங்கிய குரலோடும்  தழுதழுத்த குரலும் சேர்ந்து சொன்னார் அந்தப் பெரியவர்…. தன் வீட்டுக்காரர் சாப்பிடாமல் வந்து இருப்பதை உணர்ந்து அந்த வயதான பெண்மணி  ஏங்க நான் வேணும்னா  அடுத்த வாரம் உங்கள  பார்க்க வரும்போது உங்களுக்கு தோசை ஊத்தி கொண்டு வரட்டுமா என்று கேட்டார்.. 

அந்த முதியவர் சிரித்துவிட்டு அதெல்லாம் வேண்டாம் சிவகாமி… நாம் ஆசை ஆசையாக வளர்த்த நாம பெத்த பிள்ளைகளே நம்மள ஆளுக்கு ஒரு மூலையில பிரிச்சு வச்சு   அரைகுறையா கஞ்சி ஊத்தி கிட்டு இருக்காங்க… அவங்களுக்கு கஷ்டம் ஏதும் கொடுக்க வேண்டாம் இருக்கிற வரைக்கும் இப்படியே இருந்துட்டு போயிடுவோம் சிவகாமி … என்று பெரியவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடி சொல்லிக்கொண்டிருந்தார்….

 அழாதீங்க ..எனக்கும் வரவர பார்வை சரியா தெரிய மாட்டீங்கது… நாம பெத்த புள்ள கிட்ட சொல்றது கூட தயக்கமா இருக்கு… கண் ஆஸ்பத்திரிக்கு கூட்டி போக சொன்னா நம்ம மருமகனோ மருமகளோ..  என்ன சொல்லுவாங்களோ என்று நினைச்சு பாத்தாலே அவங்கிட்ட சொல்லாமலேயே இப்படியே இருந்திடலாம் கூட தோணுதுங்க என்று அந்த பெரியவரின் மனைவி சிவகாமியும்  அழுதுகொண்டே சொன்னார்…

 எல்லாம் நாம வாங்கி வந்த வரம் தான் சிவகாமி என்று சொல்லிவிட்டு தன் மடியில் தன் மனைவியை படுக்க வைத்து தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்……

 சில நாட்கள் கடந்து சென்றன …கிண்டி பார்க் வழியே  ஒருமுறை பைக்கில் ஆபீசுக்கு சென்று கொண்டிருந்த அந்த ஒயிட்  சுடிதார் போட்ட பெண் கிண்டி பார்க் வந்ததும் பைக்கை நிறுத்தினார்… 

பைக்கை நிறுத்தி விட்டு அந்தப் பெரியவர் இங்க தானே இருப்பார் இன்னைக்கு கூட வெள்ளிக்கிழமை தான்.. இதே டையத்துக்கு தான  கொஞ்ச நாளுக்கு முன்னாடி அந்த பெரியவரை இறக்கி விட்டோம் …சரி பார்க்ல அந்த பெரியவர் இருக்காரான்னு  போய் பாப்போம் என்று சொல்லி விட்டு தன் பைக்கை பார்க் ஓரத்தில் நிறுத்திவிட்டு  உள்ளே சென்றாள் அந்தப் பெண்… பார்க் உள்ளே சிறிது தூரம் நடந்து சென்ற அந்த பெண்  தூரத்தில் பெஞ்சில் ஒரு பெரியவர் உட்கார்ந்து இருப்பதை பார்த்தாள்… 

பார்ப்பதற்கு தான் முன்னாடி பார்க்கில் இறக்கிவிட்ட  அந்த பெரியவர் போல இருந்ததால் சரி அந்த பெரியவர் தான் உட்கார்ந்து இருக்காரு….  அவரிடம் எப்படி இருக்கீங்கன்னு கேட்டுட்டு நலம் விசாரித்துவிட்டு போவோம் என்று அந்த பெரியவரை நோக்கி நடந்தாள் அந்த ஒயிட் சுடிதார் போட்ட பெண்… அந்தப் பெரியவரின் நெருங்கியதும் அய்யா பெரியவரே என்ன அடையாளம் தெரியுதா ? எப்படி இருக்கீங்க என்று கேட்டாள் அந்தப் பெண்… 

தன் கையை கண்ணுக்கு அருகில் வைத்து சில விநாடிகள் யோசித்த பெரியவர்…. அம்மா தாயீ…நீங்களா….! நல்லா இருக்கீங்களா …நான் நல்லா இருக்கேன் தாயீ… இதோ என் பொண்டாட்டி கிட்ட பேசிகிட்டு இருக்கேன் ….வாங்க  தாயீ… உங்களை என் பொண்டாட்டிகிட்ட அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என்று சொல்லி விட்டு  சிவகாமி இவங்கதான் அன்னைக்கு என்ன அவங்க மோட்டார் வண்டியில இறக்கி விட்டாங்க …அன்னைக்கே உன் கிட்ட சொன்னேன்ல…. 

 மறந்துட்டியா…போ…சிவகாமி…நீ இப்படித்தான் எதையாவது மறந்து கொண்டே இருப்ப.. அம்மா தாயீ….கோச்சுக்காதீங்க… என் பொண்டாட்டி கொஞ்சம் ஞாபக மறதி காரி…. அன்னைக்கே உங்கள பத்தி சொன்னேன் …

மறந்துட்டா  போல…இப்ப உங்கள பத்தி சொல்லி விட்டேன் …இனி உங்கள ஞாபகம் வச்சிருப்பா அப்படித்தான சிவகாமி என்று அந்தப் பெரியவர் தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தார்.. ஐயா இங்கே யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்கீங்க …என்று அந்த ஒயிட்  சுடிதார் போட்ட பெண் கேட்டாள்..

 என்ன தாயி என் பக்கத்துல  என் பொண்டாட்டி சிவகாமி உட்கார்ந்து இருக்கா ….அவ கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் இவ்வளவு நேரம் என்று பெரியவர் சொல்ல அந்தப் பெண் ஷாக்காகி நின்றாள்….. அந்தப் பெரியவர் சொல்வது புரியாமல் ஐயா இங்கே யாருமே இல்லையே …நீங்க மட்டும் தான் ஒக்காந்து இருக்கீங்க… யார் கிட்ட பேசிட்டு இருக்கீங்க…  உங்க வீட்டுக்காரம்மா இங்க பூங்காக்கு  வெளிய எங்கேயும் போய் இருக்காங்களா  என்று கேட்டாள் அந்த பெண்… 

என்ன தாயி உங்களுக்கும் என் பக்கத்துல உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்குற என் பொண்டாட்டி சிவகாமிய  அடையாளம் தெரியலையா …..பாரு சிவகாமி  நீ பக்கத்துல இருந்தும் உன்னை இவங்க யாருக்கும்  அடையாளம் தெரியலையாம்…. ஒரே தமாஷா இருக்கு சிவகாமி என்று சிரித்துக்கொண்டே  மீண்டும் தன் பக்கத்தில் இருந்த தன் மனைவியிடம் பேசுவது போல் பேசிக் கொண்டிருந்தார் அந்த பெரியவர்… 

அந்த ஒயிட் சுடிதார் போட்ட பெண்ணிற்கு அந்தப் பெரியவரைப் பார்க்க பயமாகவும் பாவமாகவும்  இருந்தது. அப்போது அவர்கள் இருவருக்கு அருகில் ஒரு பேண்ட் ஷர்ட்   அணிந்த நபர் ஒருவர் வந்து நின்றார்.. யாருங்க நீங்க எங்க அப்பா பக்கத்துல உக்காந்து என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று கேட்டார் அந்த நபர்… சார்  இவரு உங்க அப்பாவா  என அந்த நபரிடம் ஒரு ஒயிட் சுடிதார் போட்ட பெண் கேட்டாள் …

ஆமாங்க இவர் எங்கப்பாதான் …என்ன விஷயம் என்று கேட்டார் அந்த நபர்.. இல்ல சார்… ரெண்டு வாரத்துக்கு முன்னாடி உங்க அப்பாவ இதே பார்க்கல உங்க அம்மாவை பார்க்க  இறக்கி விட்டேன் சார் ஆனா இப்ப இங்க வந்து பார்த்தபோது உங்க அப்பா மட்டும் தனியா பேசிகிட்டு இருக்காரு …அதான் எனக்கு ஒரே குழப்பமா இருக்கு சார் …என்று அந்த நபரிடம் சொன்னாள்  அந்தப் பெண்… அது வேற ஒன்னும் இல்ல மேடம்.. 

எங்க அம்மாவும் எங்க அப்பாவும் கிராமத்தில் வளர்ந்தவங்க… எங்கள சிட்டியில  என்னையையும் என் தங்கச்சியையும் கல்யாணம் பண்ணி கொடுத்தார் … வயசான காலத்துல அவங்க தனியா இருக்க கூடாதுனு  நானும் என் தங்கச்சியும் எங்க அம்மாவையும் அப்பாவையும் தனித்தனியா  பிரிச்சி எங்களோட குழந்தைகளை பாக்குறதுக்காக  தனித்தனியா வாழ்ற சூழ்நிலைக்கு கொண்டு வந்துவிட்டோம்… 

வாரத்துல ஒரு நாள் ரெண்டு பேரும் இந்த  பார்க்ல தான்  மீட் பண்ணிடுவாங்க.. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி அம்மா இறந்தது அம்மாவோட பிரிவைத் தாங்கமுடியாத எங்கஅப்பா வெள்ளிக்கிழமை ஆனா இங்க வந்து எங்க அம்மாவோட பேசுவதை வழக்கமாகக் வச்சிகிட்டார்… அவர் பைத்தியம் இல்லை …அவர் சந்தோஷத்துக்கு இங்க வந்து கொஞ்ச நேரம் அவர் பொண்டாட்டி கிட்ட பேசுறது தான் அவருக்கு திருப்தியா இருக்குன்னு என்கிட்டே நிறைய தடவை சொல்லிட்டாரு…. 

அதனால அவரை நாங்க தடுக்கல என்று சொல்லி விட்டு அழுதார் அந்த நபர்… அந்த நபர் சொல்ல சொல்ல போய் ஒயிட் சசுடிதார் போட்ட பெண்ணுக்கு கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது … அழுகையை அடக்க முடியாமல் அந்த பூங்காவில் இருந்து எழுந்து கொஞ்ச தூரம் நடந்து வந்து மீண்டும் அந்த பெரியவரை திரும்பிப் பார்த்தாள் அந்தப் பெண்.. ஒரு சிறு குழந்தை போல தன் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்…. 

 அடப்பாவிகளா …கிராமத்துல அவங்களுக்கு அவங்களே துணையா நல்லா வாழ்ந்துகிட்டு இருந்தவங்களை உங்களுடைய சுயலாபத்துக்காக  நல்லா வாழ்ந்த கணவன் மனைவியைப் பிரிச்சு  அவங்கள வாரம் ஒருமுறை இப்படி மீட் பண்ண வச்சு   கடைசியில இப்படி தனியா பேசுற அளவுக்கு கொண்டு வந்துடீங்களேடா… 

நீங்க குழந்தையா இருக்கும்போது அவங்க சம்பாதிச்ச நேரத்துல உங்க கூட தான்டா அவங்களும் இருந்தாங்க… இப்ப நீங்க காசு சம்பாதிக்கும் போது மட்டும் ஏன்டா அவங்க தனியா பிரிச்சு கூட்டிட்டு வந்துடுறீங்க.. உங்க அப்பா அம்மாவோட  நிலைமை நாளைக்கு உங்க பிள்ளைகளும் உங்களுக்கு பண்ணமாட்டாங்கன்னு என்னடா நிச்சயம் என்று சொல்லிவிட்டு அழுதுகொண்டே தன் பைக்கை ஸ்டார்ட் செய்து ஆபீஸுக்கு கிளம்பினாள் அந்த ஒயிட் சுடிதார் போட்ட பெண்…

Exit mobile version