மஞ்சுளா(க்கள்)- சாஹித்யா வருண்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 184 மஞ்சுளா(க்கள்)- சாஹித்யா வருண்

ராசாத்தி அடியே ராசாத்தி.. இங்கன வந்து பாருடி” என்று மாமியார் முத்தம்மாளின் குரல் அதிகாரமாக எதிரொலித்தது.. 

“ஏனுங்க அத்தை இதோ வந்துப்புட்டேன்” என்று செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வந்தார் ராசாத்தி.

முத்தம்மாளின் பரவசத்திற்கு காரணம் அவரின் மகள் குடும்பத்துடன் வந்தது தான்.. “வாங்க வாங்க” என்று புன்னகை முகமாக ராசாத்தியும் அவர்களை வரவேற்றார்.

“பாருடி என் மவளை.. அண்ணன் மவ கல்யாணத்துக்கு நாலு நாளு முன்னாடியே வந்துப்புட்டா.. என் மவ அப்படியே என்னைய மாதிரி” என்ற முத்தம்மாளின் சந்தோசத்திற்கு அளவில்லாமல் போனது.

அன்னையின் பேச்சை காதில் வாங்காமல் “அண்ணி மஞ்சுளா எங்க.?” என்று அண்ணன் மகளை தேடினார் பங்கஜம்.

முத்தம்மாளுக்கு இரண்டு பிள்ளைகள்.. முதலில் ஆண் மகனான வீரச்சாமி.. இரண்டாவது பெண் மகவான பங்கஜம்.. வீரச்சாமிக்கும் சரி பங்கஜத்திற்கும் சரி இரண்டும் பெண் மகவுகளாகவே பிறந்தது. ஆண் மகவை எதிர்பார்த்த முத்தம்மாளிற்கு இது ஏமாற்றமே.!

உள்ளறையில் இருந்த மஞ்சுளாவை அத்தையின் குரல் தீண்டினாலும் அவரை காண விருப்பமில்லாமல் அமைதியாகவே இருக்க, பங்கஜமே அவளை தேடி வந்து விட்டார்.

அவரிடம் தன் பாராமுகத்தை காட்ட முடியாமல் “வாங்க அத்தை” என்று ஒப்புக்காக வாய்வார்த்தையுடன் அழைக்க, அண்ணன் மகளின் முகம் சோர்ந்திருப்பதை கண்டு “கல்யாண பொண்ணு மூஞ்சியை இப்படி வெச்சுருந்தா எப்படி.? சிரிச்ச முகமா இருடி” என்றார் அதட்டலுடன்.

ஆம் மஞ்சுளாவிற்கு இன்னும் மூன்று நாட்களில் திருமணம்.. ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் அவளிடம் காணப்படவில்லை.. படித்து கொண்டிருக்கும் பெண்ணை வலுக்கட்டாயமாக திருமண பந்தத்தில் இணைக்க முயன்றால் எப்படி அவளின் முகத்தில் மகிழ்ச்சி குடியேறும்.?

பங்கஜம் சென்றதும் அவளின் உடன்பிறந்த தங்கையான சிந்துஜா அவளிடம் வந்து “அக்கா உனக்கு ஏதாவது வேணுமானு அம்மா கேட்க சொன்னாங்க.?” என்றிட, “எனக்கு எதுவும் வேணாம்.. நீங்களே கொட்டிக்கங்க” என்று முகத்தில் அடித்தாற்போல் கூறினாள் மஞ்சுளா.

இதில் விலுக்கென்று சிந்துவின் விழிகள் உவர்நீரை சிந்தி “அப்பா, அம்மா இப்படி பண்றதுக்கு ஏன் அக்கா என்னையும் வெறுக்கற.?” என்று கேட்க, மௌனமாகவே இருந்தாள் அவளின் தமக்கை.

அதற்குள் ராசாத்தியும் அங்கு வர, இளைய மகள் அழுதிருப்பதை கண்டு “ஏய் என்னடி ஆச்சு.?” என்று கேட்டார். இரு மகள்களும் அமைதியாகவே இருந்தனர்.

இவர்களின் அமைதியிலே காரணத்தை உணர்ந்த ராசாத்தி “ஏன்டி இப்படி பண்ணிட்டு கிடக்கற.? பொட்டப்புள்ளயா பொறந்தா வேற வூட்டுக்கு போய் தான் ஆகணும்.. இதுக்கு ஏன்டி அழிச்சாட்டியம் பண்ற.?” என்று பெரிய மகளிடம் காய்ந்தார்.

“பேசாம போய்ருமா.. நான் ஏதாவது சொல்லிர போறேன்.. உங்க விருப்பப்படியே எல்லாம் நடக்கட்டும்.. நான் எதுவும் சொல்ல போறது இல்ல” என்று வீம்புடனே இருந்தாள்.

தவிப்புடன் வெளியில் எட்டி பார்த்த ராசாத்தி வீட்டில் யாருமில்லை என்றுணர்ந்ததும் “நம்ம தகுதிக்கு இந்த சம்பந்தமே பெருசுடி.. புரிஞ்சுக்கோ.. உன் அப்பனை வெச்சுட்டு என்ன தான் பண்ண முடியும்.?” என்றார் வேதனையுடன்.

பல்லை கடித்த மஞ்சுளா “நான் என்ன ஆடிட்டா இருக்கேன்.. படிச்சு நல்ல வேலைக்கு போகணும்னு நினைக்கறது தப்பா.? நாங்க தான் உங்களைய பார்க்கறோம்னு குத்திக்காட்டி பேசறவங்க முகத்துல கரியை பூசணும்னு நினைச்சதும் தப்பா.?

இத்தனை வருசம் போட்ட சாப்பாட்டை இன்னும் ரெண்டு வருசத்துக்கு உங்களால போட முடியாதா.? ஏன்மா இப்படி பண்றீங்க.? சொந்தபந்தம் வேணும் தான்.. 

அதுக்காக ஒவ்வொரு நேரமும் அவங்க என்ன பேசுனாலும் தன்மானத்தையும் சுயமரியாதையையும் விட்டு குடுத்துட்டே வாழ முடியுமா.? இந்த போலியான வாழ்க்கையை என்னால வாழ முடிலமா..” என்று கொந்தளித்து கத்தினாள்.

மகளின் கேள்வி அவரை வதைத்து கொன்றாலும் கையிலாகாத கணவரை வைத்து கொண்டு  தனியாக இரு பெண்களை கரையேற்ற முடியுமா இவரால்.?

மஞ்சுளாவிற்கு அடுத்து இளைய மகளும் இருக்கிறாள்.. ஏதாவது ஒரு தேவையென்றாலும் கணவரின் தங்கையையே நாட வேண்டிய நிலைமை.. இந்நிலையில் தான் யாரோ தெரிந்தவர் மூலம் இந்த வரனை இவரிடம் கூறி பார்க்க சொல்ல, ஜாதகமும் பொருந்தி இருந்தது.

பையனுக்கு கொஞ்சம் வயது அதிகம் என்றாலும் பார்க்க சிறு பையன் போன்றே இருந்ததால் மஞ்சுளாவிற்கு சரியான துணை என்று ராசாத்தியும் சரியென்றார்..

அதுவுமில்லாமல் பையனின் சித்தப்பா முறையான ஒருவர் வீட்டிற்கு வந்தும் பேசி இருந்தார்.. “முதல்ல புள்ளையும் பையனும் பேசட்டும்.. வற்புறுத்த வேணாம்.. புள்ளைக்கு சம்மதம்னா மட்டும் மேல பேசலாம்.. நானும் ஒரு புள்ளையை பெத்தவன் தான்” என்று வெளிப்படையாக சொல்லி இருந்தார்.

அவரின் பேச்சில் குழம்பி இருந்த ராசாத்தியின் மனதும் தெளிவடைந்தது.. மாப்பிள்ளை பையனுடன் பேசிய மஞ்சுளாவிற்கும் அவனை குறை கூற ஒரு காரணமும் தோன்றவில்லை.

ஏனோ இப்போது திருமணம் வேணாம் என்று மட்டும் அவளுக்கு இருந்தது.. திருமணத்தை நிறுத்த கூறி அன்னையிடம் கெஞ்சியும் விட்டாள்.. நம்ம தகுதிக்கு இதுவே அதிகம் என்று ராசாத்தியும் திருமணத்தை நிறுத்த சம்மதிக்கவில்லை.

இதோ அதோவென்று நாட்களும் ஓடி திருமணத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே இருந்தது. ஆனால் இங்கு வரும் போதெல்லாம் ‘நான்தான் பார்த்து குடுத்தேன்’ என்று தற்பெருமை பேசும் பங்கஜத்தின் வார்த்தையை காதில் வாங்குவது பெரிய பாடாக இருக்கும்.

இன்றும் அவர்களின் ஒன்றுவிட்ட சின்னம்மாளின் வீட்டிற்கு தான் தற்பெருமை பேச தான் சென்றிருக்கிறார் பங்கஜம். அதை உணராமல் முத்தம்மாளோ தன் மகள் வந்து விட்டாள் என்று மருமகளை குத்தி காட்டி கொண்டிருக்கிறார்.

“அதான் அந்த மாப்பிள்ளை தம்பி கல்யாணத்துக்கு அப்பறம் படிக்க வெக்கறேனு சொல்லிருக்குல.? முகத்தை கொஞ்சம் சிரிச்ச மாதிரி வெய்யுடி” என்று கெஞ்சலாக மகளிடம் உரைத்து விட்டு வேலையை கவனிக்க சென்றார் ராசாத்தி.

‘திருமணத்திற்கு பிறகு தாராளமாக நீ படிக்கலாம்’ என்று மாப்பிள்ளை சம்மதம் அளித்திருக்க, ஆனால் அவரின் வீட்டில் சம்மதிப்பார்களா என்ற கேள்வி தான் இவளுள் ஓடி கொண்டிருக்கிறது.

திருமணத்திற்கு பிறகு படித்தாலும் ‘அதான் கல்யாணமாகி குழந்தை வந்துருச்சே இனி எதுக்கு படிச்சுக்கிட்டு.?’ என்று கேட்பவர்களே சில வருடங்களில் ‘படிச்சுருந்தா ஏதாவது வேலைக்கு போலாம்.. இப்ப பாரு வீட்டுல சும்மா இருக்க வேண்டியதா போய்ருச்சு’ என்று குத்திக்காட்டி பேசுவார்கள்.

இப்படிதான் அன்னைவழி உறவில் அவளின் அக்கா முறையான ஒருவருக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பு படிக்க வைக்கிறேன் என்றவர்கள் திருமணம் முடித்ததும் படிச்சது போதும் குடும்பத்தை பாரு என்று வீட்டோடு உட்கார வைத்து விட்டார்கள்.

இதை எல்லாம் கண்டு தான் படித்து முடித்து வேலை வாங்கியபின்பு திருமணம் செய்து கொள்கிறேன் என்று தலையாக அடித்து கொண்டாள். ஆனால் அவளின் பேச்சை செவிமடுக்க தான் ஆளில்லாமல் போனது.

வருத்தத்துடன் “அக்கா என் மேலயும் கோவமா.?” என்று சிந்து வினவ, “கோவப்பட்டு என்னவாக போகுது.. அப்பா மட்டும் ஒழுங்கா இருந்துருந்தா நமக்கு இந்த நிலைமை வந்துருக்குமா.?” என்று விரக்தியுடன் கேட்டாள் மஞ்சுளா.

சரியாக அதே நேரம் வெளியில் அவர்களின் தந்தை வீரச்சாமியின் குரல் கேட்டது.. “எங்கமா பங்கஜம்.? வந்ததும் வூடு வூடா ஊர் பேச்சு பேச போய்ட்டாளா.?” என்று முத்தம்மாளிடம் கேட்க, “சின்னம்மா மவ வூட்டுக்கு வர சொன்னா முடியாதுனா சொல்ல முடியும்.?” என்றார் முத்தம்மாளும்.

“சிந்து நீயாவது படிச்சு வேலைக்கு போகணும்டி.. அடுத்தவங்க சொல்றாங்கனு கேட்காம உனக்கு விருப்பப்பட்டதை மட்டும் பண்ணு.. என் வாழ்க்கை தான் எப்படி போகுதுனு தெரில.. உன் வாழ்க்கையாவது நல்லாருக்கணும்டி” என்று தங்கையின் தலையை வருடியவளுக்கு அழுகை பீறிட்டு எழுந்தது.

இருந்தும் தங்கையின் முன்பு அழ விருப்பமின்றி துளிர்த்த கண்ணீரை மறைத்தவள் “எனக்கு குடிக்க தண்ணீ மட்டும் எடுத்து வா சிந்து” என்று அவளை அனுப்பி விட்டாள்.

“எப்படியோ பெரியவளுக்கு நல்ல சம்பந்தம் கிடைச்சுருச்சு.. அப்படியே சின்னவளையும் கட்டிக் குடுத்துட்டா என் பாரம் குறைஞ்சுரும்” என்று வீரச்சாமி அவர் அன்னையிடம் பேசுவதும் முத்தம்மாளும் பதில் சொல்வதும் தெளிவாக கேட்டது மஞ்சுளாவிற்கு.

இவருக்கு பாரமா.? அப்படி என்ன செய்து விட்டார்.? பெற்று விட்டேன் என்ற கடமைக்காக குடிக்கும் பணத்தில் மீதியை அன்னையிடம் தருகிறார் அவ்வளவே.

உடல்நிலை சரியில்லாமல் கிடந்தாலும் ஆறுதலாக ஒரு வார்த்தையும் விசாரிப்பதும் இல்லை.. அவரின் தங்கை மகள்கள் எப்படி இருக்கிறார்கள்.? அதை பார்த்தும் இவர் திருந்தாமல் இருப்பதை நினைத்து தான் கோவம் கோவமாக வரும்.

பங்கஜத்தின் பெரிய மகள் யாரையோ காதலிக்கிறாளாம்.. அது ராசாத்திக்கும் யாரோ ஒருவரின் மூலம் தெரியும்.. கேட்டால் ‘அவளின் தந்தையால் இதை சமாளிக்க முடியும்.. உன் அப்பாவால முடியுமா.?’ என்று கேட்டு அவளின் வாயை தான் அடைப்பார்.

இப்போதும் பங்கஜத்தின் பெரிய மகள் யாருடனோ போன் பேசியபடி தான் இருக்கிறாள். கேட்டால் தோழியாம்.. விரக்தியாக சிரித்து கொண்டாள் மஞ்சுளா.

அவரவரின் வீட்டில் இருக்கும் அழுக்குகளை மறைத்து அடுத்தவரின் அழுக்குகளை தோண்டி துருவி எடுப்பதையே பலர் வழக்கமாக கொண்டு திரிகிறார்கள்.. இந்த கேடுகெட்ட உலகில் வாழ்ந்து தான் ஆகணுமா என்ன.? என்ற வினாவும் அடிக்கடி அவளுள் எழும்.

இரவில் அண்ணனும் தங்கையும் வாய் ஓயாமல் பேசி கொண்டிருக்க, ராசாத்தி தான் அனைத்து வேலைகளையும் ஒரே ஆளாக செய்ய, அவருக்கு துணையாக சிந்துவும் அங்கு இருந்தாள்.

அதுவும் அடிக்கடி “நல்ல சம்பந்தம்.. நல்ல சம்பந்தம்” என்று தேய்ந்த ரெக்கார்டு போல் கூறியதையே திருப்பி திருப்பி தந்தை கூறுவதை கேட்டு எதையாவது எடுத்து அடித்து விட்டால் என்னவென்று இருந்தது பெண்ணவளுக்கு.

யாராவது கொஞ்சம் சிரித்து பேசி விட்டால் போதும்.. அவர்கள் நல்லவர்கள் என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் தந்தையின் மனநிலையை கண்டு எப்போதும் கடுப்பாகவே இருக்கும்.

‘அப்பத்தா என்ன பையனை வளர்த்தி வெச்சுருக்க.?’ என்று அவளின் அப்பத்தாவிடம் கேட்க வாய் துடிதுடியாக துடிக்கும்.. மகனே இப்படியென்றால் அவரின் அன்னை மட்டும் எப்படி இருப்பார்.? என்று அமைதியாக இருந்து விடுவாள்.

தந்தையின் கையிலாகாத நிலையை எண்ணி வருத்தப்படுவதை தவிர வேற வழியும் இல்லை.. பெற்றவர்கள் பெற்ற மகள்களை பாழுங்கிணத்தில் தள்ள மாட்டார்கள் தான்..

அதை அறிந்தும் ஏனோ மஞ்சுளாவால் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தாள்.. அவள் நினைப்பது ஒன்று.. ஆனால் நடப்பதோ வேறொன்று.!

குடும்பத்திற்காக அவளின் கனவுகளையும், ஆசைகளையும் யாரும் அறியாமல் உள்ளுக்குள் புதைத்து வைத்தாள். 

அவளின் மனதோரத்தில் வருங்கால கணவராவது என் கனவுகளுக்கு உயிர் குடுத்து அதை நிறைவேற்றினால் போதுமென்றே ஒரே ஆசையில் திருமணத்திற்கும் தயாராக முயன்றாள்.

துணையாக நிற்காமல் தனக்காக நின்று தன் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பான் என்ற ஆசையிலே பல மஞ்சுளா(க்கள்)..

Exit mobile version