கலையாத கனவு-சூர்யா செல்வராஜ்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 198 கலையாத கனவு-சூர்யா செல்வராஜ்

               ஆதார் கார்டிலும் ரேஷன் கார்டிலும் கூட அழகாய் இருப்பவள் என் பொன்னி பாட்டி. பாட்டிக்கு என்ன வர்ணனை என்று நீங்கள் நினைக்கலாம். அனைத்தும் அழகாய் தெரிவது இளமை, அனைத்தும் நலமாய் இருக்கவேண்டும் என நினைப்பது முதுமை. உடையின் அழகை ரசிப்பது இளமை. உள்ளத்தின் அழகை ரசிப்பது முதுமை. இதற்கெல்லாம் மேல் அவள் சுங்குடி சேலையில், பெரிய நெற்றி குங்குமத்தில், கம்மலை தூக்கி நிறுத்தும் மாட்டலோடு, சிறு நீளமே கூந்தல் எனினும் சிக்கின்றி சீரான கொண்டையில் மல்லிப்பூ கொண்டு வீதியில் நடந்தால், மயில் கொண்ட வண்ணமும் தோற்று போகும் இவள் வண்ணத்தில், மான் கொண்ட புள்ளியும் தோற்று போகும் இவள் கன்ன சுருக்கத்தில், அத்தனை அழகு என் பொன்னி பாட்டி.

             எனக்கு மிகவும் பிடித்த பொன்னி பாட்டிக்கு தேடி தேடி முதல் முறையாக பட்டு சேலை வாங்கினேன், என் சம்பள பணத்தில், ஆம் நான் வேலைக்கு சேர்ந்த பின் வரும் முதல் தீபாவளி. அடுத்து பொன்னியின் செல்வி, என் அம்மாவிற்கும் பட்டு புடவை எடுத்துவிட்டு அதன் பின்னர் என் அப்பாவிற்கு, நான் சுயமாய் நிற்க தவமாய் தவமிருந்து காத்திருந்த தாயுமானவர்க்கும் பட்டு வேஷ்டி எடுத்துவிட்டு கடைசியாய் என் தம்பிக்கும் அவனுக்கு பிடித்தவாறு சட்டை பேண்ட் எடுத்துவிட்டு களைத்து போய் வீடு திரும்பும் மக்களுக்கு இடையில் திளைத்து போய் வீடு திரும்பினேன். என் அம்மா ஒரு முறை தீபாவளி அன்று கட்ட போகும் புடவையை நான் நூறு முறை நினைத்து பார்த்தே ரசித்தேன்.

என் தம்பிக்கு பட்டாசு மேல் தான் விருப்பம், ஊருக்கு சென்று பாட்டிக்கு ரெண்டு முழத்தில் மல்லியும் தம்பிக்கு ஆயிரம் முழத்தில் பிஜிலியும் வாங்கி தந்துவிட வேண்டும், இப்படி பல கனவு கோட்டை என் மனம் காட்டிக்கொண்டே இருந்தது. கனவு கொண்ட வாழ்வே கனிவு கொண்ட வாழ்கை அல்லவா? அதனால் எப்போதும் ஒரு கனவோடே இருப்பேன். ஊருக்கு இரயிலில் செல்ல பதிவும் செய்துவிட்டேன். எல்லா வருடமும் ஒரு நாளே யுகமாய் தோன்றும் போது, ஒரு யுகமே ஒரு நாளாய் தோன்றுவது தீபாவளி அன்று மட்டும் தான். முதல் நாள் இரவு கடை வீதி செல்வதும், அத்தை தந்த காசில் முத்துமணி வளையல் வாங்குவதும், விடியலுக்காய் காத்திருக்கும் ஒரு இனிய நாள் தீபாவளி தான்.

 தில்பர்ஜானே இட்லிக்கு கரிகுழம்புதானே, இனிப்பான தோப்பம், போண்டா, முறுக்கு, பலகாரம், எதை முதலில் சாப்பிட, குடலும் குளிர்ந்திடும் ஒரு நாள் இந்த திருநாள் தானே. கட்டிய புத்தாடையுடன் அக்கம் பக்கம் பலகாரம் தந்து, அத்தை மாமா வீடு சென்று, அக்கா, பெரியம்மா, சித்தி, என அத்தனை உறவும் மிளிர்ச்சியோடு காணும் நாள் தீபாவளி தான் என்னை பொறுத்தவரை, இத்தனையும் இந்த வருடமும் காண வேண்டும் என்ற நினைவோடு கண்மூடினேன். விடுமுறை நாளில் தான் இந்த ஆண்டு தீபாவளி என்றாலும் ஒரு நாள் விடுப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என மனம் நினைத்தாலும் கேட்கும் துணிவு இல்லை. ஆறு மாத காலமே ஆனதால் கேட்க தயங்கி ஒருமனதாக கேட்டுவிடுவோம் என ஆசையோடு மேனேஜர் இருக்கைக்கு சென்றேன்.

“தீபாவளிக்கு” என நான் ஆரம்பிக்கும் முன்பே அவர் முந்தி கொண்டார். “ப்ராஜெக்ட் டெலிவரி இந்த வாரம், எனவே சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களும் நீங்கள் வரவேண்டும் இதற்கு சேர்த்து பின்னர் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்”. சற்றும் எதிர் பார்க்கவில்லை இப்படி ஒரு பதிலை, தலையாட்டிவிட்டு வந்து இருக்கையில் அமர்ந்த போது, கண்ணீர் விழுமுன் தண்ணீர் அருந்தி சரி செய்ய முயன்றேன். முடியாமல் வெளிய வந்து கத்தி அழவேண்டும் போல் இருந்தது. ஐடி ஊழியர்களின் வெளியில் தெரியாத வலிகளில்  இதுவும் ஒன்று. சேர்த்து பத்து நாள் விடுப்பு கிடைத்தாலும், அந்த ஒரு நாள் தரும் மகிழ்ச்சி பின்னர் கிடைக்குமா?

அலைபேசியில் அழைத்து என் அம்மாவிடம் விவரம் சொன்னேன். ” என்னம்மா ஒரு நாள், வருடத்தில் ஒரு நாள் ஊர் வந்து அனைவரையும் பார்த்து சந்தோஷமா இருக்கவேண்டிய நாளில் அலுவலகம் போணும்னா எப்படிம்மா”, எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பொன்னி பாட்டியிடம் பேசினேன். “அறுவடை அப்போதானே அறுக்கமுடியும், அதனால் என்ன? மிகவும் முக்கியமான நேரம் என்பதால் தானே வர சொல்கிறார்கள், பொங்கல் திருவிழாக்கு நீ எடுத்த புடவையை நான் கட்டிக்குறேன், இதற்கெல்லாம் நீ அழகூடாது, நீ ஊருக்கு வரும் அத்தனை முறையும் எனக்கு தீபாவளி தான் கண்ணா” என்று கூறினார். எந்த ஆறுதலும் என் மனதை மாற்றவில்லை.

தீபாவளி நாளும் வந்தது. காலை மணி ஏழு இந்நேரம் என் அப்பா கையால் புது துணி வாங்கிருப்பேனே, பின்னர் எட்டு மணி இந்நேரம் என் தம்பியுடன் பட்டாசு வைத்திருப்பேன் என நினைத்து கொண்டே, சிவந்த கண்களோடு பேருந்து நிறுத்தம் சென்று அலுவலகம் செல்ல தயார் ஆனேன். கணினியுடன் யாருமின்றி தீபாவளி முடிந்தது, ஹாஸ்டல் உணவோடு தீபாவளி விருந்தும் முடிந்தது. வீடு திரும்பும் வேளையில் பேருந்தில் ஒலித்த பாடல் வரிகள் “ஏழை மகள் காணும் இன்பம் நான் காணவில்லை”, கண்கள் குளமாக அன்றைய தினம் முடிந்தது. பார்த்துப்பார்த்து செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களை இறைவன் தயவு பார்க்காமல் வைத்து செய்கிறானே என்ற ஆதங்கத்தில் உறங்கினேன். மனம் கொண்ட கனவை விழி காணும் நாளுக்காய் அடுத்த நாள் விடியலோடு என் பயணம் தொடர்ந்தது.

Exit mobile version