ஹத்ராஸ் பலாத்கார சம்மந்தப்பட்ட செய்திகளை வெளியிட விடாமல் தடுப்பதாக டெல்லி பத்திரிக்கையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து டெல்லி பத்திரிக்கையாளர் சங்க தலைவர் எஸ்.கே.பாண்டே, பொதுச் செயலாளர் சுஜாதா மதோக், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கேமரா மற்றும் நிருபர் குழுவினர்கள் கிராமத்திற்கு உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.
எம்.பி.க்கள் டெரெக் ஓ ‘பிரையன் மற்றும் ககோலி கோஷ் தஸ்திதார் மற்றும் பிற தலைவர்கள் கிராமத்திற்குள் நுழைய முயன்றபோது காவல்துறையினரால் கடுமையாக இடைமறிக்கப்பட்டனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ஆதரவாளர்களுடன் ஹத்ராஸுக்கு நடந்து செல்ல முயன்றபோது தரையில் தள்ளப்பட்டார். பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்தை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுத்துள்ளனர்.
தடயவியல் அறிக்கையில் பலாத்காரம் நடக்கவில்லை என கூறும் நிலையில் உடலை மறுபரிசோதனை செய்ய வாய்ப்பில்லாத விதமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் அவசரமாக நள்ளிரவில் எரிக்கப்பட்டுள்ளது. முழு வழக்கையும் உ.பி. அரசு தவறாகக் கையாள்வது குறித்து கேள்விகளை எழுப்புவோருக்கு எதிராக தணிக்கை செய்வது குறித்து அதிர்ச்சி ஏற்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது