வெள்ளத்தில் மிதக்கிறது பெங்களூரு

கனமழை காரணமாக பெங்களூரு வெள்ளத்தில் மிதக்கிறது.

ஆகஸ்டு 30ம் தேதி பெங்களூருவில் கனமழை பெய்தது. இதனால், பெங்களூரு புறநகர் சாலை (ஓ.ஆர்.ஆர்) வெள்ளத்தில் மூழ்கியது. இதன் காரணமாக, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அந்த சாலையில் அமைந்துள்ள சாப்ட்வேர் கம்பெனிகளுக்கு செல்ல முடியாமல் ஐடி ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் கோபமடைந்த ஐடி கம்பெனிகள், ஊழியர்கள் சரியாக பணிக்கு வராததால் ₹250 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு இந்த விசயத்தில் (மழைநீர் தேங்குவதை தடுக்க) உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் எங்களுடைய கம்பெனிகளை வேறு இடத்திற்கு மாற்றிவிடுவோம் என எச்சரிக்கை விடுத்தன.

இந்த விவகாரம் அடங்குவதற்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பெல்லந்தூர் ஏரி முழுமையாக நிரம்பியது. மேலும், அதில் இருந்து நீர் வெளியேறி அருகில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்துக் கொண்டது.  மழைநீருடன், சாக்கடை நீரும் சேர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளை சூழ்ந்தன. அங்கு 75ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளது.

சர்ஜாப்புரா ரோட்டில் உள்ள ரெயின்போ லே அவுட் வழக்கம் போல் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கு 300க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த நிலையில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என கர்நாடக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தோசையும், உப்புமாகவும் இந்த ஹோட்டலில் மிகவும் ருசியாக இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் இங்கு வாருங்கள் என்று கூறுகிறார். பெங்களூருவே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. ஆனால் தேஜஸ்வி சூர்யா வழக்கம்போல் தனது பிரேக் பாஸ்டில் பிசியாக இருக்கிறார். என நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

Exit mobile version