இடைத்தேர்தலில் வாங்கிய அடி… பெட்ரோல், டீசல் விலையை குறைத்த பாஜக!!
இந்தியாவில் பல மாநிலங்களில் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி காலியாக இருந்த மக்களவை, சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள் நவம்பர் 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.
இந்தத் தேர்தல் முடிவுகளை அடுத்து, நவம்பர் 3 ஆம் தேதி பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 10 ரூபாயும் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேற்கு வங்காளம், அசாம், இமாச்சல பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 14 மாநிலங்களில் காலியாக இருந்த 29 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 30- ஆம் தேதி நடைபெற்றது, மேலும் 3 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 2 ஆம் தேதி நடந்தது. மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும் மேற்கு வங்காளத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. நான்கு தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது.
இமாச்சல பிரதேச மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் மூன்றிலும் ஆளும் பாஜகவைத் தோற்கடித்து காங்கிரஸ் வெற்றிபெற்றது. மந்தி மக்களவைத் தொகுதியிலும் பாஜகவை காங்கிரஸ் தோற்கடித்தது. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அசாம் மாநிலத்தில் பா.ஜனதா 3 இடங்களில் வெற்றி பெற்றது.
யூ.பி.பி.-எல் கட்சி இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றன. மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா இரண்டு இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. கர்நாடகாவில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றன. ஆந்திராவில் நடைபெற்ற ஒரு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. பிகார் மாநிலத்தில் நடைபெற்ற இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், இரண்டு இடங்களையும் ஐக்கிய ஜனதா தளம் கைப்பற்றியது.
தெலுங்கானாவில் ஒரு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றுள்ளது. மூன்று மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல்களில் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மக்களவை இடைத்தேர்தலில் சிவசேனா கட்சி வெற்றி பெற்றது. இமாச்சல பிரதேசம் மந்தி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மத்திய பிரதேசம் கந்த்வா மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றது.
இந்த இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றி என்பது கட்சியின் தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி. வெறுப்பு அரசியலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் வெற்றிபெறுவோமென்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியது குறிப்பிடத்தக்கது. இடைத்தேர்தல்களில் பாஜக ஆளும் இமாசலப்பிரதேசத்திலேயே அதற்கு அடி விழுந்திருக்கிறது. மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு இணையாக காங்கிரஸும் மற்ற கூட்டணிக் கட்சிகளும் பலம் காட்டியிருக்கின்றன.
இந்த நிலையில் தொடர்ந்து ஏறிக் கொண்டிருந்த பெட்ரோல் டீசல் விலையை நேற்று குறைத்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு மாதமாக தினசரி விலை உயர்த்தப்பட்டு வந்த நிலையில், விமானத்தின் பெட்ரோல் விலையை விட மக்கள் பயன்படுத்தும் வாகனங்களின் பெட்ரோல் விலை அதிகம் என்று ஆனது. சில பகுதிகளில் பெட்ரோல் விலை 120 ரூபாயை கடந்து சென்று சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளது.
இதன் மூலம் பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு பத்து ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல மாநில அரசுகளும் தங்கள் வரிகளை குறைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.