புவி அறிவியல் அமைச்சகம் சார்பில் இந்திய வானிலை மையம் உருவாக்கியுள்ள ‘மவுசம்’ செயலி 200 நகரங்களின் வானிலை அறிக்கையை தினசரி 8 முறை வழங்க உள்ளது.
டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் ‘மவுசம்’ செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார். மிதவறட்சி பிரதேசங்களுக்கான சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனம், இந்திய வெப்பமண்டல வானிலை நிறுவனம், இந்திய வானிலை மையம் ஆகியவை கூட்டாக இணைந்து இந்த செயலியை உருவாக்கியுள்ளன. இது கூகுளின் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது.
200 இந்திய நகரங்களின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் திசை உள்ளிட்ட தற்போதைய வானிலை தகவல்களை வழங்கும். இந்த தகவல்கள் ஒரு நாளைக்கு எட்டு முறை புதுப்பிக்கப்படும். மேலும் சுமார் 800 நிலையங்கள் அல்லது மாவட்டங்களின் வானிலையின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப உடனடி தகவல்கள், 3 மணி நேர இடைவெளியில் எச்சரிக்கைகள் போன்றவற்றை வெளியிடும். கடுமையான தாக்கம் ஏற்பட்டால், அதன் தாக்கமும் எச்சரிக்கையில் சேர்க்கப்படும். இதன் மூலம் துல்லியமான தகவல்களை பெறலாம்.
இந்த செயலி இந்தியாவில் சுமார் 450 நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை அடுத்த 7 நாட்கள் என்ற ரீதியில் வழங்கும். கடந்த 24 மணிநேர வானிலை தகவல்களும் செயலியில் கிடைக்கும். மோசமான வானிலை குறித்து எச்சரிக்கும் வகையில் ஒரு நாளைக்கு இருமுறை என அடுத்த 5 நாட்களுக்கு சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற அலெர்ட்களை காட்டும் வசதியும் இதில் உள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கண்காணிப்பு நெட்வொர்க்குகளை அதிகரிக்கவும், பழைய கப்பல்களை மாற்றவும், புதிய கணினி வளங்களை வாங்கவும் தற்போதைய பட்ஜெட்டை விட இரு மடங்காவது பெரிய நிதி முதலீடுகள் தேவை என்றார்.