இரவு பசி – ராஜா ரங்கசாமி

செய்தி அலை சிறுகதைப் போட்டி – 55 இரவு பசி – ராஜா ரங்கசாமி

இரவுக்கு ஆயிரம் உறவுகள் .ஆம் ,பகலிலே ஆங்காங்கே சுற்றி திரிந்தாலும் பல உறவுகள் சங்கமிக்கும் இடம் இரவு நேரத்தில் மட்டுமே. அப்படி சங்கமித்தாலும் முதலில் ஆட்கொள்ளும் ஆத்மசக்தி பசியே. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பசியால் மயக்க நிலையை அடைவது சாத்தியமே, அவ்வாறு ஒரே வீட்டில் இருவேறு பசியால் பரிதவிக்கும் நிலையில் சூழ்ந்துள்ளது அந்த ஏழை விவசாயி ஏகாம்பரத்தின் வீடு.

 இரவு முடிந்தால் காத்திருக்கும் கடங்கார பசிக்கு தீனி போடும் கலைப்பில் கட்டிலில் வானத்தைப் பார்த்தவாறு கண்களை குளமாக்கி பள்ளம்  கண்ட நீராய் கண்ணக்குழியை நிரப்பிக் கொண்டிருந்த வேளையில் “டொயிங்” என்ற அலைபேசியின் வாட்ஸ்அப் சத்தம் கேட்டு திரும்பி பார்ப்பதற்குள் , சிறுநீர் கழிக்கச் சென்ற தன் மகன்  செவ்வேல்மணி சிட்டாய்பறந்து வந்து அலைபேசி எடுத்த மாத்திரத்தில், அருகிலிருந்த ஆயிரம் கண்கள் கொண்ட கட்டிலை தன் உடலால் நிரப்பி வாட்ஸ்அப் குறுந்தகவலை பார்த்ததும் ,தும்பை பூ போல பற்கள் மெல்ல எட்டிப் பார்த்தது. இதை ஏகம்பரம், கண்கள் நிறைய கண்ணீருடன் ஒரு கணம் பார்த்துவிட்டு விர்ரென்று எழுந்து தன் மகனை பார்த்து  “நிமிஷத்துக்கு நிமிஷம் போனையே கட்டிட்டு அலையிரியே , அப்பா தனியா கிடந்து கஷ்டப்படுறத கொஞ்சமாவது நெனச்சு பாத்தியா”  இதை கேட்ட செவ்வெல்மணி,ஒரு ஓரப் பார்வை அலட்சியமாக  அவரின் மீது வீசி விட்டு, மறுபடியும் இணைய வழியில் இளம் சிலந்தியா வாட்ஸ் அப்பில் மூழ்கியதை கண்ட அடுத்த கணத்தில் “என்னதான் வேணும், என்னோட பாவம் உன்னை சும்மா விடாது” என்ற வாட்ஸ்அப் குறுந்தகவலை பார்த்த  செவ்வேல்மணிக்கு சிறையில் அடைத்த காமகொடூரணுக்கு காமபசி வந்ததுபோல் “என்ன வேணும்” என்ற வார்த்தை கேட்டதும் விசத்தை உள்ளடக்கிய அவனது நாக்கு “உன் உடம்பு தான் வேணும்” என்ற சொன்ன வேகத்தில் “முடியாது” என்ற பதில் எதிர்முனை அளிக்க ,மின்னலேக்கே சவால் விடும் விதமாக  செவ்வேல்மணி   அந்த பெண்ணின் அந்தரங்க போட்டோவை அனுப்பி விட்டு, “இதோ பார், இது உனக்கு மட்டும் தான் இப்போ, ஆனால் ஊருக்கு அனுப்பனுமா, வேண்டாமா அப்படிங்கிறது நீ தான் பதில் சொல்லணும்” என்ற குறுந்தகவலை அனுப்பினான்.

மறுபுறம், வடு நிறைந்த விரலால் வீணையை மீட்டி னால் வரும் ஒழுங்கற்ற இசைபோல மறுநாள் என்னனென்ன நடக்குமோ என்ற நினைவு ஏகாம்பரத்தை  வாட்டி வதைத்தது அந்த இரவு.

 “நாளைக்கு காலையில நான் போன் பண்றேன், ஒருவேளை நீ மனசு மாறிட்டா, என் எதிர்காலமே நல்லா இருக்கும்” என்ற குறுந்தகவலை அந்த பெண்ணிடமிருந்து வந்ததை பார்த்த செவ்வேல்மணி, “நானாவது மனசு மாரப்போவதவது, உன்ன மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்பேன் போடி” என்று அந்த குடிசை வீடு அதிருமாறு சிரித்ததை பார்த்த ஏகாம்பரம், அவனிடம் கேட்க முடியாமல் , அவன் என்ன செய்கிறான் என்று தெரியாமலும் அந்த இரவு கழிந்தது .

விடியற்காலை சேவல் கூவும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த ஏகாம்பரம், மகன் இருக்கும் திசையை பார்த்தான். கட்டிலில் மகனும் அருகில் இருந்த அலமாரியில் எந்நேரத்திலும் போன் கீழெ விழலாம் போல் இருப்பதை, ஒரு பார்வை பார்த்துவிட்டு ,தன் கட்டில் கீழ் இருக்கும் செம்பை எடுத்து வாய் கொப்பளிக்க பார்த்தால் அதில் தண்ணீர் இல்லாததை  பார்த்துவிட்டு ,போன் வைத்திருக்கும் அலமாரியின் அடியில் நீர் நிறைந்த வாளி இருப்பதை அறிந்து, அங்கு சென்று ஒரு சொம்பு நீர் எடுத்து முற்படுகையில் ,”யார்ரா வீட்ல, வீட்டுக்காரர்  வந்திருக்கேன்  என்று உருமிகொண்டே அடுத்த கர்ஜினை தொடங்கினான் “போன வாரமே காலி பண்ணிட்டு, வாங்குன பணத்தை நாமம் போட்டு போயிருப்பேன் நினைச்சேன் பரவால்லயா வீடு திறந்து இருக்கு” என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தான்.

யாரும் பதில் பேசாமல் இருந்ததைக்   கண்டு கோபத்தில் கண்கள் சிவக்க கத்தினான் மீசைக்காரன். “நான்  பேசிட்டே இருக்கேன், யாராவது இருக்கீங்களா? ஏகாம்பரம்…ஏகாம்பரம்…” மிரட்டல் தோனியுடன் ஆறு அடி  உயரமுள்ள மீசைகாரன்,தாடியைத் தடவிக்கொண்டே உள்ளே வருவதை கண்டு பயந்து , பதறிப் போய் வெளியே ஓடிவந்து மீசைக்காரனின் காலை கட்டி பிடித்து, கதற தொடங்கினான். காலை பிடித்து அடுத்தகணத்தில்,”அப்போ,

உன்னால பணம் தர முடியாது” என்ற வார்த்தை வருவதற்குள் கரு மேகம் சூழ்ந்த  வானமாய் மாறிப்போன ஏகாம்பரத்தின் அந்த கெஞ்சல் மீசைகாரனுக்கு மனமிரங்க செய்தது.

“இப்ப என்னதான் பண்ண சொல்ற, ஒன்னு பணம் கொடு,இல்லாட்டி ஏற்கனவே சொன்ன மாதிரி உன் பையனை ஒரு வருஷம் அய்யாவோட பண்ணையில் வேலை செய்யட்டும்” என்று சொன்னதும்.  தலையில் இடி விழுந்தது போல் ஆனது ஏகாம்பரத்தின் முகம்.

 இரவு முழுக்க எந்த வார்த்தை மீசைகாரணிடமிருந்து வரக்கூடாது என்று வேதனையில் இருந்தாநோ, அதே வார்த்தை வந்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது.

 “ஐயா,அவன் எழுந்திரட்சதும், பேசி அனுப்பி வைக்கிறேன்” என்று சொன்ன அடுத்த கணமே,  ஏகாம்பரத்தின் கைபிடிக்கு ஆதரவளித்த, மீசைகாரணின் கால் விருப்பமின்றி   ஏகாம்பரத்தின்  பிடியிலிருந்து நழுவி,  படுத்திருந்த செவ்வேல்மணி இடத்தை நோக்கி போய்க் கொண்டே ,கரகரப்பான குரலில் கொஞ்சம் கோபம் கலந்த பேச்சு மீசைகரன் வாயிலிருந்து உதிர்ந்தது “உனக்கு நான் கருணை காட்டினால் என்னை ஐய்யா சந்தேகபடுவார், ஒன்னு பணத்தை கொடு, இல்லாட்டி பையன கூட்டிட்டு போறேன் . இதுல  எதுவும் இல்லாத போனா அடுத்து நான் வரமாட்டேன் அடியாளுங்க தான் வருவாங்க அப்புறம் உனக்கும், உன் பையனுக்கும் நான் பொறுப்பில்லை” என்று சொல்லிக் கொண்டு தூங்கிறவனை,உலுக்கி உலுக்கி எழுப்பி விடுகிறான் மீசைகாரன்.

இரு கைகளால் தன் கண்களைத் துடைத்துக் கொள்ள இடமளிக்காமல் “தம்பி சாவகாசமாகப்  அய்யா பண்ணையில் போய் மூஞ்சி களுவிக்கலாம் ” என்று சொல்லி அவனை பிடித்து உலுக்கி உலுக்கி எழுப்பினான் மீஸைகாரன் .

“யார்ரா நீ, பஸ்ட் கைய எடு” என்று படம் எடுத்த நாகமாய் சீரிய நொடிப்பொழுதில் “பளார்”  என்று கன்னத்தில அடி விழ “என்ன உங்க அப்பனுக்கு சொன்ன மாதிரி உனக்கும் படிச்சு சொல்லணுமா என்ன, இப்ப நீ வரல.. நடக்குறதே வேற” கடும் கோபத்தில் கத்திய  அடுத்த கணத்தில் ஏகாம்பரம் மீசைக்காரனின் காலை மீண்டும் பற்றி கெஞ்சிக் கொண்டே செவ்வேல்மணியை பார்த்து “டேய், இது தவிர வேற வழி தெரியலை, தயவு செஞ்சி எதிர்த்து  பேசாம இவரு கூட போ” என்று கண்ணீர் மல்க கேட்டதை பார்த்த செவ்வேல்மணி  கோபத்தின் உச்சிக்கே சென்ற அவன் மீசைகாரணை பார்த்து “டேய் ஒழுங்கா போயிடு, இல்ல கந்து வட்டி கொடுமைன்னு போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணட்டுமா” என்று சொல்லிக்கொண்டு எழுந்த  செவ்வேல்மணியை, ஏகாம்பரத்தின் கண்ணெதிரே தரதரவென்று இழுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்து தன்னால் மகனை காப்பாற்ற முடியவில்லையே என்ற விரக்தியில் இருந்த அவனுக்கு சுவர் மட்டுமே ஆதரவாய் இருக்க, அந்த சுவற்றின் மீது அப்படியே சாய்ந்து கவலையில் மூழ்கினான் ஏகாம்பரம்.

சிறிது நேர அமைதிக்குப் பிறகு ஆழ்மனதில் எப்படியாவது தன் மகன் இந்த ஒரு வருசத்துல பொறுப்புள்ள  பிள்ளையாய் மாறி விடுவான் என்ற எண்ணம் தோன்றியது. அதே நேரத்தில் நேற்று இரவு செவ்வேல்மணியிடம் பேசிய அந்த பெண்ணின் புகைப்படத்துடன் கூடிய வாட்ஸ்அப் கால் வைபரேஷனில் வருவதை அறியாமல் கவலையில் சுவரின்மீது சாய்ந்தவாறு இருந்தான்.

 அந்த சமயத்தில் அந்தப் பெண்மணி தனது அந்தரங்க போட்டோவை  செவ்வேல்மணி  இணையத்தில் விட்டு விடுவானோ என்ற பயத்தில் மீண்டும்   மீண்டும்  வாட்ஸ்அப்

செய்கிறாள். ஆனால் அந்த அலைபேசியோ வெயிலில் துடிக்கும் புழுவாய் மெதுவாக நகர, மீனைப் பிடிக்க பல மணி நேரம் கொக்கு காத்திருப்பது போல, நீர் நிறைந்த வாளி (பக்கெட்) காத்துக் கொண்டிருந்தது.

ஆனால்,அந்த அலைபேசி “உர் உர்” என்று உருமிக்கொண்டே மெது மெதுவாய் நகர்ந்து கொண்டே எந்த நேரத்திலும் வாளியில் விழலாம் என்ற நிலையில் இருந்தது.

அந்த சமயத்தில் ஏகாம்பரம் திடுக்கிட்டு கண் விழித்து பார்த்த வேளையில், வேகமாய் எழுந்து எப்படியும் என் மகன் நல்ல பொறுப்புள்ளவனாய் வருவான் என மனதிற்குள் சொல்லிக் கொண்டே வீட்டை விட்டு வெளியே போய்க் கொண்டிருந்தான்.

 அந்த சமயத்தில் “ஸ்லக்” என்ற சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான்.  வீட்டின் நான்கு மூலையிலும் ஒரு பார்வை பார்த்துட்டு எதுவும் இல்லை என்று தெரிந்ததும் வெளியே சென்றுவிட்டான் .  ஆனால் அந்தப் பெண்ணின் மானத்தை உள்ளடக்கிய செல்ஃபோனோ,

வெளியே செல்ல வழியில்லாமல் நீர் நிறைந்த வாளிக்குள் அகப்பட்டு இருந்தது .

அந்த வாளியோ, ஒரு பெண்ணின் மானத்தை காப்பாற்றி விட்டோம் என்று சொல்வது போல தன்னுடைய நீர்  அசைவால் அங்கும் இங்குமாக தலையசைத்து  ஆனந்தமாய் “சலக் சலக்” என்று பாட்டுப் பாடிக் கொண்டிருந்தது.

*********************

Exit mobile version