இறைவனாய் வந்த இறைவி ர.சாம்பவிசங்கர்

செய்தி அலை சிறுகதைப் போட்டி – 34 இறைவனாய் வந்த இறைவி ர.சாம்பவிசங்கர்

மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு எல்லாம் சாட்சியாக இருக்கும் வானம் சில நேரங்களில் பொறுக்க முடியாமல் வெடித்துச் சிதறுகிறது. அப்படித்தான் இரண்டு நாட்களாக வானம்  வெடித்து மழையாக பெய்து கொண்டிருக்கிறது. வானம் எது பூமி எது என்று தெரியாத அளவுக்கு வெள்ளக்காடு. மக்கள் காதுகளில் மழை ஓசை மட்டுமே ரீரெக்கார்டிங் வாசித்துக் கொண்டிருந்தது.

     அந்த கிராமமே கடலுக்கு நடுவில் இருக்கும் இலங்கை போல காட்சி அளித்தது. கொட்டகையில் மாடுகளும் ஆடுகளும் நடுங்கிக்கொண்டு நின்றுகொண்டிருந்தன. மாடுகளின் அடியில் இன பாகுபாடின்றி ஆட்டுக்குட்டிகள் ஓண்டிக்கொண்டிருந்தன.

   ஓட்டு வீட்டுக் கதவை யாரோ தட்டினார்கள். கதவுத் தட்டும் ஓசையுடன் “அண்ணே.. அண்ணே”என்று யாரோ அலறும் சத்தமும் கேட்டது.

      “மழை “சோ”ன்னு பெய்யுது யாராயிருக்கும் இந்த நேரத்தில்” என்று கோபாலு மரகதத்திடம் கேட்டார். “எனக்கென்னங்க தெரியும் கதவை திறந்து தான் பாருங்க” என்று ராந்தல் விளக்கை கையில் எடுத்துக் கொடுத்தாள் மரகதம்.

 கோபால்  ராந்தல் எடுத்துக் கொண்டு முன்னே செல்ல மரகதம் பின்னாடியே சென்றாள்.

 கதவை திறந்து பார்த்தால் கொட்டும் மழையில்  பனை ஓலையால் பின்னப்பட்ட சம்புவை தலையில் கவிழ்த்துக் கொண்டு மாரி பதற்றத்துடன் நின்று கொண்டிருந்தான்.

 மாரியை பார்த்ததும் “நீயா என்ன வேணும்” என்று கோபமாக கேட்டார் கோபாலு. “அண்ணே.. என் பொண்டாட்டிக்கு பிரசவ வலி வந்துடுச்சு துடியாய் துடிக்கிறாள் வாங்கண்ணே என்று கூப்பிட்டான் மாரி. “அய்யோ.. அப்படியா தம்பி வா போலாம்” என்று மரகதம் வாசல் தாண்டி கால் வைத்தாள்.

” ஏய் ..நில்லு நீ போன கொலை விழும்” என்று கோபமாக கத்தினார் கோபாலு.

” அண்ணே.. அப்படி சொல்லாத அண்ணே, உன்னை விட்டால் எனக்கு யார் இருக்கா என்று கெஞ்சினான் மாரி.

 “அதை நீ வேற ஜாதி பொண்ணை கல்யாணம் பண்ணும்போது யோசிச்சு இருக்கணும். நம்ம ஜாதியை விட்டு வேறு ஜாதியில் கல்யாணம் பண்ணாதன்னு நாங்க எவ்வளவு கெஞ்சினோம் கேட்டியா? எப்ப நீ வீட்டு வேலைக்கு வந்த அருக்காணி கழுத்துல தாலி கட்டினியோ அப்பவே சொந்தபந்தம் எல்லாம் அறந்து போச்சு போ இங்கிருந்து”என்று ஈவு இரக்கமில்லாமல் கத்தினார் கோபாலு.

 “அண்ணே ..பழசை எல்லாம் பேசாத அண்ணே உங்க கால்ல விழுந்து கேட்கிறேன் அண்ணியை அனுப்பி வைங்க அண்ணே” என்று மாரி கோபாலின் காலில் விழ வந்தான். சட்டென நகர்ந்த கோபாலு “இந்த பாவம் எல்லாம் எனக்கு வேணாம் நீ அருக்காணி சொந்தக்காரங்க யாராவது இருப்பாங்க அவங்களை அழைச்சிட்டு போ” என்று சொல்லிவிட்டு சட்டென்று கதவை சாத்திக்கொண்டு உள்ளே சென்றார் கோபால்.

    மரகதத்திற்கு மனசுஙெஙெ துடித்தது. அருக்காணி பாவம் எப்படி துடிக்கிறாளோ என்று வேதனைப்பட்டவள்  திடீரென்று

 “செவலக்காளை கத்துது இதோ வரேன்” என்று கோபாலுவிடம் சொல்லிவிட்டு ராந்தலை எடுத்துக்கிட்டு கொல்லைப் பக்கம் போனாள். இரண்டு வீடு தள்ளி இருந்த முனியம்மா புழக்கடை கதவை தட்டினாள் மரகதம். கதவு திறந்த முனியம்மாள் “என்ன அவசர ஜோலி கா இந்த நேரத்தில் வந்து இருக்க” என்று பதறினாள் முனியம்மாள். “முனியம்மா என் கொழுந்தன் பொண்டாட்டி பிரசவ வலியில் துடிக்கிற போய் பார்த்துட்டு வாயேன். கொழுந்தனாரே என் வீட்டு வாசல்ல நின்னு கதறாரு இந்த கூறுகெட்ட மனுஷனுக்கு மனசு இரங்களையே படுபாவி” என்று கணவனை திட்டினாள் மரகதம்.

 “சரிக்கா இதோ போறேன்” என்று புழக்கடை கதவை சாத்திட்டு ராந்தலை தூக்கி கொண்டு ஓடினாள் முனியம்மாள்.

 “ஏ.. புள்ள போகும்போது அப்படியே இருளாயி பாட்டியை அழைச்சிட்டு போன்னு” கத்தினாள் மரகதம்.

வந்த சந்தடி தெரியாமல் வீட்டிற்குச் சென்றுவிட்டாள் மரகதம்.

“பாவம் அந்த புள்ளைக்கு தலை பிரசவம் கொஞ்சமாவது மனசு இரங்க வேணாம் மனுஷனா பொறந்தா மனசுல ஈரம் இருக்கணும்” என்று புலம்பிக் கொண்டிருந்தாள் மரகதம்.

“அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கு தெரியும் 4 இடம் போய் 40 மக்கள் மனுஷனோட பழகுற என்னை வேற ஜாதி பொண்ணை கல்யாணம் பண்ணி தலை குனிய வைத்துவிட்டான். அவனை வெட்டி போடாம வாழவிட்டிருக்கேன்னு சந்தோஷப்படு”என்று ஜாதி வெறி தலைக்கேற பேசினான் கோபாலு.இந்த ஆளை திருத்த முடியாது என்று நினைத்த மரகதம்அமைதியானாள்.

     முனியம்மா வேகமாக ஓடிப்போய் அருக்காணியை பார்த்தாள். அவள் இடுப்பு வலியில் துடித்துக் கொண்டிருந்தாள்.

“அக்கா எனக்கு பயமா இருக்கு என்ன பண்றதுன்னு தெரியல” என்று கதறினான் மாரி.

 “த.. அழமா  வெரசா ஓடிப்போய் வண்டி கட்டிக்கிட்டு வா டவுன் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போவோம்” என்று மாரியை துரத்தி விட்டாள்.

 இருளாயி உள்ளே வரும்போதே அவள் வீட்டிலிருந்து சுக்கு பனைவெல்லம் மருந்தெல்லாம் சேர்த்த மூலிகை கஷாயம் எடுத்து வந்திருந்தாள்.அருக்காணியை பதமா தூக்கி அந்த கசாயத்தை குடிக்க வைத்தாள் இருளாயி. “அக்கா வலி தாங்க முடியலை மூச்சு முட்டுது கா” என அருக்காணி கதறினாள்.

 “அம்மா காளியாத்தா எப்படியாவது பிரசவம் நல்லபடியாக நடந்து தாயும் சேயும் காப்பாற்று தாயே என்று முனியம்மா சொல்லிக்கொண்டே அருக்காணி கையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.

மாரி கட்ட வண்டி கட்டிக் கொண்டு அந்த வண்டியில் நான்கு பக்கமும் கழிநட்டு  உரம் வரக்கூடிய கோணியைக் கிழித்து  பெரிய பாய் மாதிரி தைத்து மழைத்தண்ணி மேலே

 படாம கட்டி அருக்காணியை அந்த வண்டியில் டவுன் ஆஸ்பத்திரிக்கு அழைத்து கொண்டு சென்றான் மாரி. கூடவே முனியம்மாவும் இருளாயியும் சென்றனர்.

  தூங்கிக்கொண்டிருந்த நர்ஸ் டாக்டர் எல்லாரையும் எழுப்பி அவசரமாக அருக்காணியை பிரசவ அறைக்கு அழைத்துச் சென்று பிரசவம் பார்த்தனர். அந்த அறையில் அருக்காணி கதறும் சத்தம் மாரியின் ரத்தநாளங்களை எல்லாம் உறைய வைத்தது. இதயம் வெளியே விழுந்து துடிப்பது போல இருந்தது. கிட்டதட்ட ஒரு மணி நேரமாக இந்த மரண அவஸ்தையை மாரியும் அனுபவித்தான். திடீரென்று மாரியின் காதுகளில் ஒரு தேவகானம் கேட்டது. அந்த நொடி இந்த உலகின் சொர்க்கங்கள் எல்லாம் அவன் கண் முன்னே தெரிந்தன. உறைந்த ரத்த நாளங்கள் வெந்நீர் ஊற்றென கொப்பளிக்க ஆரம்பித்தன. மாரியின் ரத்தம் சதையும் எலும்பும் ஆக உருக்கொண்டு குரல் கொடுத்தது.

 “மாரி உனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு” என்று துணியில் சுற்றிய மெழுகு பொம்மையை கொண்டுவந்து காட்டினார்கள்.

 இவ்வளவு நேரம் மாரி பட்ட வேதனைகள் எல்லாம் நொடியில் கரைந்து அழுத்திய சுமைகள் எல்லாம் ஆனந்த கண்ணீராய் மறைந்தது. இந்த குழந்தையை கையில் தாங்கும் போது மயிலிறகை வருடுவது போல உணர்ந்தான். நெற்றியில் மெல்லியதாய் முத்தமிடும்போது என் உயிரை உன்னுள் புதைத்து விட்டேன் என்று சொல்லாமல் சொன்னான் மாரி.

 மாரியின் வாழ்க்கையிலும் இனி மெல்ல மெல்ல விடியல் தான் என்பதை வானம் சொல்லாமல் சொன்னது. விடிந்தவுடன் நேராக மாரி அந்த ஊர்  கோயில் குருக்கள் வீட்டு வாசலில் நின்றான்.

 “வாப்பா மாரி ஆத்துல எல்லாம்  சௌக்கியமா? என்ன இவ்வளவு காலைல எங்க ஆத்துபக்கம் வந்திருக்க” என்று கேட்டார் குருக்கள்.

“நேத்து ராத்திரி என் பொண்டாட்டிக்கு வலி வந்து ஆஸ்பத்திரியில சேர்த்தேன் விடிய விடிய ஐந்து மணிக்கு எனக்கு மகள் பிறந்து இருக்கா சாமி”என்று மகிழ்ச்சியுடன் சொன்னான் மாரி.

 “ரொம்ப சந்தோஷம் பா வெள்ளிக்கிழமை அதுவுமா சாட்சாத் அந்த மகாலட்சுமி பிறந்த மாதிரி டா” இன்னைக்கு தேதி 15. 5. 2000 .காலை 5 மணிக்கு என்று சொல்லிக்கொண்டே குருக்கள் உள்ளே போய் பஞ்சாங்கத்தைப் பார்த்துவிட்டு வந்து “மாரி “வ”வரிசையில பேர் வை பா பொண்ணு அமோகமா வருவா”என்று ஆசீர்வாதம் பண்ணி அனுப்பினார்.

   வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு செட்டியார் கடையில் 25 பைசா சாக்லேட் ஒரு பாக்கெட் வாங்கி அந்த கிராமத்தில் இருந்தவங்க எல்லாருக்கும் சந்தோஷமா எனக்கு மகள் பிறந்து இருக்கா ன்னு சொல்லி சொல்லி கொடுத்தான் மாரி.

 முனியம்மா மூலமா மரகதமும் தெரிந்துகொண்டு சந்தோஷப்பட்டாள். எட்டாம் கிளாஸ் வரைக்கும் மாரி கூட படிச்ச கண்ணன் வாத்தியாரா இருந்தான்.  வழியில் பார்த்த மாரி அவனுக்கு சாக்லேட் கொடுத்து விஷயத்தை சொன்னான்.

 “என் மகள் தைரியமா அறிவாளியா நல்லா படிச்சு கலெக்டர் ஆகனும்.”வ”வரிசையில ஒரு நல்ல பெயர் சொல்லுடா” என்று பெருமிதமாக கேட்டான் மாரி. சிறிது நேரம் யோசித்த கண்ணன். “டேய் மாரி வேலுநாச்சி  ன்னு வைடா  வீர பெண்மணி டா அவங்க” என்று பெருமையாக சொன்னான் கண்ணன்.

   மாரி தன் மகளுக்கு “வேலுநாச்சி” என்று பெயரிட்டு வளர்த்தான். பறவையின் சிறிய கூடு போல அந்த சிறிய குடிசைக்குள் மாரி, அருக்காணி நாச்சி  மூவரும் இருப்பதை கொண்டு மகிழ்வுடன் வாழ்ந்து வந்தார்கள். மாரியின் அண்ணன் கோபாலுக்கு தம்பி மீது இருந்த கோபம் சிறிதளவு குறைந்தது போல தெரிந்தது. தம்பி மகளை வழியில் பார்த்தால் கொஞ்சுவார் கோபாலு. இதைப் பார்த்த ஊர் மக்கள் “தான் ஆடாவிட்டாலும் தசை ஆடுது பாரு” என்று கிண்டல் செய்வார்கள். மாரி இடம் கோபத்தை குறைத்துக் கொண்டால்  உறவு கொண்டாடி கொண்டு சொத்தில் பங்கு கேட்பானோ என்று மாரி இடம் பேசாமலேயே இருந்தார் கோபாலு.

   மாரி கிராமத்தில் வயல் வெளிகளில் கூலி வேலைக்கு செல்வான். கூடவே அருக்காணியும் செல்வாள். நிலபுலம் சொத்து சுகத்தோட வாழ்ந்தவன் மாரி. வேற ஜாதி பெண்ணை கல்யாணம் பண்ணதால அனைத்தையும் இழந்து அனாதையாக வாழ்கிறான். மனதளவில் ராஜாவாக அன்பான குடும்பத்தோடு கோடீஸ்வரனாக  வாழ்கிறான் மாரி.

 காலம் மாதிரி மனிதனை வளப்படுத்துவதும் பலப்படுத்துவதும் எதுவுமில்லை. மனிதனை சித்தன் ஆக்குவதும். சித்தனை பித்தன் ஆக்குவதும் காலம்தான். நடிப்பவர்கள் நாடாள்வதும் நாடாளுபவர்கள் பதவிக்காக நடிப்பதும் மக்கள் பார்க்கும் காலத்தின் கோலங்கள். நாடுகளின் எல்லைகள் விரிந்து சுருங்குவது காலத்தின் மறுமலர்ச்சி. மாதம் மும்மாரி பெய்வதும் மழையே இல்லாமல் பொய்ப்பதும் காலத்தின் மறுசுழற்சி. மனிதன் கொடுப்பதெல்லாம் பல மடங்காக திருப்பி கொடுக்கும் சக்தி காலத்திற்கு உண்டு. நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும்  வட்டியுடன் திருப்பிக் கொடுத்து துல்லியமாகக் கணக்கிடுவது காலத்தின் கை தேர்ந்த கலை.

   அந்த காலத்தின் கட்டாயத்தால் தான் தன் மகளை ஒரு புதுமைப் பெண்ணாக வளர்க்கிறான் மாரி. அவள் வயது பெண்கள் எல்லாம் கூழாங்கல் வைத்து விளையாடும் போது வேலுநாச்சிக்கு கம்பு சுற்ற கற்றுக்கொடுத்தான். ஏரிக்கு அழைத்து சென்று நீச்சல் கற்றுக் கொடுத்தான். சிறுக சிறுக பணம் சேர்த்து ஆறு வயதிலேயே சைக்கிள் வாங்கிக் கொடுத்தான். பெண்ணை உயர்த்துவது படிப்புதான் என்று தினமும் சொல்லி சொல்லி வேலுநாச்சியின் நாடி நரம்பெல்லாம் கல்வியை நுழைத்தான் மாரி. காடு கழனி எல்லாம் மழை தண்ணி இல்லாம காய்ந்து போனது.

   கிராமத்து மக்களின் வாழ்க்கை முறையே இதுதான் “நித்தம் சோற்றினுக்கே ஏவல் செய்யும் வாழ்க்கை”. மாரியும் கிராமத்தில் வேலை இல்லை என்று நகரத்தில் வேலை தேடி அலைந்தான். ஒரு ஓட்டை சைக்கிளை வைத்துக்கொண்டு அதில் மகளை வைத்து ஐந்து கிலோ மீட்டர் மிதி மிதி என மிதித்து மகளைக் கொண்டு வந்து பள்ளியில் விடுவான். பள்ளியில் விட்டபிறகு நகரத்ச தெருக்களில்  ஏதாவது கூலி வேலை கிடைக்குமா என்று தெருத்தெருவாக சுற்றுவான். பணக்கார வீடுகளில் தோட்டங்களை சீர் செய்தல். சாக்கடை அடைத்து கொண்டால் சாக்கடை அள்ளுவது என்று எல்லா வேலையும் செய்வான். மாலை பள்ளி விடும் நேரம் வேலு நாச்சியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்வான்.  அருக்காணியும் கிராமத்தில்  வயல்வெளியில் களை எடுத்தல் வேர்கடலை புடுங்கற வேலை மல்லிப் பூ பறிக்கற வேலைஎன்று கிடைக்கும் வேலையை செய்வாள்.

    இவர்களின் அதிகபட்ச சுவையான விருந்து உணவு என்றால் அது மீன் குழம்பும் கருவாட்டு குழம்பும் தான். இவர்களின் வருமானத்தில் பெரும்பகுதி மகளின் படிப்புச் செலவுக்காக தான் இருக்கும். காலையில் மகளுக்கு மட்டும் நல்ல அரிசி சாப்பாடு இவர்கள் இருவருக்கும் கூழுதான் இரண்டு வேளையும். மாலை பள்ளி விட்டதும் வேலுநாச்சியாரை அழைத்துக்கொண்டு அவள் பள்ளியில் நடந்த விஷயத்தை எல்லாம் கேட்டு தெரிந்து கொள்வான் மாரி. யாரிடமும் சண்டை போடக் கூடாது அதே நேரம் உன் தரப்பு நியாயத்தை பிறருக்குப் புரிய வைக்க வேண்டும் என்று கூறுவான். பெண்ணுக்கு சுய கௌரவமும் தன்மானமும் ரொம்ப முக்கியம் என்று பெரியாரின் கருத்துகளையும் பாரதியின் கருத்துகளையும் கூறிக்கொண்டே சைக்கிள் மிதிப்பான்.

   சைக்கிள் சக்கரங்கள் போலவே காலச்சக்கரம் வேகமாக சுழல ஆரம்பித்தது. அப்பாவின் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு சென்ற மகள் இப்போது அப்பாவின் துணையுடன் அவள் வேறு ஒரு சைக்கிளில் கல்லூரிக்கு செல்கிறாள் வேலுநாச்சி.

 படிப்பில் படு சுட்டி என்பதால்

 நகரத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் இவளுக்கு இலவசமாகவே சீட்டு கிடைத்தது. அந்த கிராமத்திலேயே இன்ஜினியரிங் படிக்கும் ஒரே பெண் வேலுநாச்சி தான். முனியம்மா மரகதம் இருளாயி எல்லாம் “பெண்ணை அதிகமாக படிக்க வைக்காதே அப்புறம் மாப்பிள்ளை கிடைப்பது கஷ்டம்” என்று தூபம் போட்டார்கள். அருக்காணி எதற்கும்  காது கொடுக்கவில்லை “என் மகளை நன்றாக படிக்க வைப்பது மட்டும் தான் எங்கள் லட்சியம்” என்று முகத்தில் அடிப்பது போல கூறிவிடுவாள்.

   அன்று காலை வேலுநாச்சி யும் மாரியும் சைக்கிளில் நகரத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது “நாச்சி  நேத்து ஒரு வக்கீல் வீட்டில் ஒரு வாசகம் பார்த்தேன். “மனிதனின் உழைப்பு மட்டும் இல்லை என்றால் இந்த உலகில் வெறும் கல்லும் மண்ணும் மட்டுமே மீதி இருக்கும்” என்று எழுதி இருந்தது. அருமையான வாசகம் என்றார் மாரி.

 “அதே போல தான் என் அப்பாவின் உழைப்பு மட்டும் இல்லை என்றால் நான் இல்லையே அப்பா” என்று புகழ்ந்தாள் வேலுநாச்சி.

 “அப்பா  நான் இன்னும் ஒரு வருடத்தில் படிப்பை முடித்து விடுவேன் கேம்பஸில் செலக்ட் ஆகிடுவேன் நம்பிக்கை இருக்கு நான் வேலைக்கு  போனதும் நீங்க கூலி வேலைக்கு போகக்கூடாது உங்களை உட்கார வைத்து நான் பார்த்துக் கொள்ள வேண்டும்”என்று கண்களில் கண்ணீருடன் சொன்னாள் வேலுநாச்சி.

    வேலுநாச்சி கல்லூரி போகும் சாலை வந்ததும் “பார்த்து போங்கப்பா” என்று சொல்லி விட்டு கல்லூரிக்கு சென்றாள்.  கல்லூரியில் இரண்டாவது பாடவேளை நடந்துகொண்டிருக்கும்போது பிரின்ஸ்பல் அழைத்து “உங்க அப்பாவுக்கு ஆக்ஸிடெண்ட் அரசு ஆஸ்பிட்டலில் சேர்த்திருக்காங்களாம்,உன்னை உடனே வரச்சொன்னாங்க” என்று மிகப்பெரிய இடியை வேலுநாச்சி தலையில் போட்டார்.

   அழுதுகொண்டே அவசரமாக ஹாஸ்பிடலுக்கு ஓடினாள் வேலுநாச்சி. அங்கே தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள் அருக்காணி. அம்மாவை கட்டி அணைத்து அழுதுகொண்டே “என்னம்மா ஆச்சு” என்றாள்.

 “லாரிக்காரன் அடிச்சு போட்டுட்டான். உங்க அப்பா தூரப் போய் விழுந்திருக்கிறார். தலையில் பலமாக அடிபட்டு ரத்தம் போயிடுச்சு” என்று கதறினாள் அருக்காணி. உள்ளே ஓடி போய் டாக்டரிடம் “என் அப்பாவுக்கு எப்படி இருக்கு நான் பார்க்கணும்னு” கதறினாள் வேலுநாச்சி.

 “இப்ப எல்லாம் உங்க அப்பாவை பார்க்க முடியாதுமா ஐசியூவில் இருக்கார். பொழைக்கறது கஷ்டம்தான்” என்று டாக்டர் சொன்னதும் வேலுநாச்சி வேரறுந்த மரமாக அவர் காலடியில் விழுந்து எப்படியாவது என் அப்பாவை காப்பாத்துங்க என்று கதறி அழுதாள்.

“சென்னை மாதிரி பெரிய ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போனால் பிழைக்க வாய்ப்பிருக்கு” என்று டாக்டர் சொன்னார்.

 “இதுவரைக்கும் அம்மாவுக்கோ எனக்கோ உடம்பு சரியில்லைன்னா அப்பா தான் அங்கே இங்கே ஓடி கடனை வாங்கி வந்து எங்களை ஹாஸ்பிட்டல் அழைத்துப்போனார். இப்போ அவரே சாஞ்சிட்டாரே நான் யார்கிட்ட கேட்பேன். அவரை எப்படி காப்பாற்றுவேன்” என்று கதறி அழுதாள் வேலுநாச்சி. அங்கு இருந்தவர்களிடம் போனை வாங்கி பெரியப்பாவுக்கு கால் பண்ணி அழுதாள். “சென்னைக்கு அழைத்து போற அளவுக்கு என்னிடம் பணம் இல்லையே” என்று அழுது நடித்தார் கோபாலு. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள்.யார் யாரிடமோ கேட்டுப் பார்த்தாள் எல்லாரும் கை விரித்தனர். மாலை வரை ஆஸ்பிட்டலில் இருந்த உறவினர்கள் இரவு வீட்டிற்கு சென்று விட்டனர். அம்மாவும் மகளும் தான் அழுதபடியே கடவுளை வேண்டிக்கொண்டிருந்தனர்.

 கடவுளே இல்லையோ என வேலுநாச்சி வெறுக்கும் அளவுக்கு அந்த செய்தி வந்தது. மாரி கடைசியாக மகளை பார்க்க வேண்டும் என்று சொன்னவுடன் அலறியடித்துக் கொண்டு ஓடினாள். வேலுநாச்சியின் கைகளை பிடித்துகொண்டான் மாரி. கண்கள் அவளையே பார்த்து அழுதது.  வேலுநாச்சி அப்பாவின் கண்ணீரை துடைக்க குனிந்தாள்.மாரி அவள் நெற்றியில் முத்தமிட்டார்.”அப்பா..அப்பா” என்று உலுக்கினாள் ஒரு அசைவும் இல்லை. “அப்பா என்னை விட்டு போயிடாத பா” என்று கதறினாள். “நீ இல்லாம அம்மாவும் நானும் எப்படி இருப்போம்” என்று வேலுநாச்சி கேட்டுக் கொண்டிருக்கும் போதே மாரியின் கண்கள் நேராக நின்றது. வேலுநாச்சி கதறி அழுதுகொண்டே ஊரில் இருப்பவர்களுக்கு தகவல் சொன்னதும் மாரியின் உடலை கிராமத்திற்கு எடுத்துச் சென்றனர்.

  கிராமத்து மக்கள் எல்லாம் கூடி அழுதனர். அருக்காணியும்,நாச்சியும்  மாரி இல்லாமல்  எப்படி இருக்க போறாங்கன்னு தெரியலையே எவ்வளவு சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்று ஊர் மக்கள் எல்லாம் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.  “சடங்கு சம்பிரதாயம் எல்லாம் செய்யணும் உங்க பெரியப்பா பணம் கொடுத்து இருக்கிறார்” என்று வெட்டியான் சொன்னதும் ,”உயிரோடு இருக்கும்போது அன்பா பேசாத உறவு இறந்த பிறகு பிணத்துக்கு எதுவும் செய்ய வேண்டாம்”என்று கத்திய வேலுநாச்சி நேராக அம்மாவிடம் சென்று அம்மாவின் கழுத்தில் இருந்த தாலியை கழற்றினாள். இது என் அப்பா உழைப்பில் வாங்கிய தாலி இதை வைத்து அவரின் இறுதி சடங்குக்கு வெச்சுக்கங்க என்று கொடுத்ததும் ஊர் ஜனமே மூச்சு பேச்சு இல்லாமல் நின்றது.

 “வேலுநாச்சி தாலியை இப்படி கழற்றக்கூடாது மா ரொம்ப தப்புமா” என்று மெதுவாக சொன்னாள் இருளாயி.

” பாட்டி எங்க அம்மா காழுத்துல இந்த தாலி நிரந்தரமா இருக்குமா? இருக்காதாதில்ல பத்து நாள் கழிச்சி கழற்றுவதை இப்பவே கழட்டி விட்டேன். அவர் உழைப்பு அவருக்கு பயன்படனும் எங்கப்பா இருந்த வரைக்கும் எங்களை எதுக்காகவும் அடுத்தவங்க கிட்ட கையேந்த விட்டது இல்லை” என்று முடிவாக சொன்னாள். அவள் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்து அமைதியாகி விட்டாள் இருளாயி.

  “இந்த பொண்ணுக்கு  படிச்சிருக்கற  திமிரு” என்று கோபாலு கோபப்பட்டார். “விடுங்கய்யா சின்ன பொண்ணு அதுக்கு என்ன தெரியும்.மேற்கொண்டு ஆக வேண்டிய காரியத்தை பார்ப்போம்” என்று குரல் கொடுத்தார் ஒரு பெரியவர். “ஆம்பளை புள்ளை இல்லாததால பங்காளி தான் கொள்ளி போடணும் கோபாலு நீ கொள்ளி போடறயா?என்று கந்தசாமி கேட்டார்.

 “என்ன பண்றது கூட பொறந்துட்டானே

 அனாதை பொணமா அனுப்ப மனசில்லை நானே கொள்ளி போடறேன்னு” கோபாலு சொன்னார்.

 “அதான்யா உடன்பிறப்புங்கறது என்று ஒருத்தர் ஒத்து ஊதினார். இவர்கள் பேசியது எதுவும் வேலுநாச்சிக்கு தெரியாது அவள் அப்பாவின் காலடியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.

   மாலை நேரத்தில் மாரியை மயானத்திற்கு எடுத்துச் செல்லும் சடங்கு நடந்து கொண்டிருந்தது. மாரியை குளிப்பாட்டி எல்லா சடங்குகளும் செய்து தென்னை ஓலையில் பின்னிய பாடையில் படுக்க வைத்ததும், வேலுநாச்சி தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டு கொள்ளிக் சட்டியை கையில் எடுத்ததும் ஊர் ஜனங்கள் ஒட்டுமொத்தமாக “வேலுநாச்சி என்ன பண்ற” என்று கத்தினார்கள்.

 “ஏன் என் அப்பாவுக்கு கொள்ளி வைக்க போறேன்” என்று திடமான குரலில் சொன்னாள். “பொம்பள கொள்ளி வைக்க கூடாது என்று உனக்கு தெரியாதா? என்று கூட்டத்தில் ஒருவர் கத்தினார்.

“என் அப்பாவிற்கு மகன் இல்லை மகள் நான் மட்டுமே  இருக்கேன் அதான் நான் கொள்ளி வைக்கப் போறேன்” என்று தைரியமாக பதில் சொன்னாள்.

 “மகன் இல்லைன்னா கூட பொறந்தவங்க யாராவது தான் கொள்ளி வைக்க வேண்டும்” என்று வேறு ஒரு பெரியவர் விளக்கம் சொன்னார்.

 “என் அப்பா எத்தனை நாள் பசியோடு இருந்திருப்பார். அப்போதெல்லாம் அன்பாக பேசி இருப்பாரா? ஒருவேளை உணவு கொடுத்து இருப்பாரா? எதுவும் செய்யாமல் கொள்ளி மட்டும் ஏன் வைக்க வேண்டும்” என்று கொதித்தாள் வேலுநாச்சி.

 “சரிம்மா ஆயிரம் இருக்கட்டும் கோபாலு கூட பிறந்தவர் அவர் தான் செய்யணும்” என்று ஒரு பெரியவர் கூறினார்.

 “அவர் கூட பிறந்தவர் என்றால் நான் என் அப்பாவின் ரத்தத்தில் பிறந்தவள். நான் கொள்ளி  வைத்தால்தான் என்அப்பா ஆன்மா சாந்தியடையும்”என்று சரியான பதில் சொன்னால் வேலுநாச்சி. “அதெல்லாம் முடியாது மா சமுதாய அமைப்புன்னு ஒன்று இருக்கு பெண்கள் கொள்ளி வைக்க கூடாது” என்று கண்டிப்புடன் கூறினார் கூட்டத்தில் ஒருவர்.

 “சொத்தில் சரி பாதி பங்கு தருவீங்க, அரசியலில் சரி பாதி பங்கு தருவீங்க, வேலைவாய்ப்பில் சரி பாதி பங்கு தருவீங்க, ஆனால்  உணர்வாய் உயிராய் வாழும் உறவில் சரிபாதி தராதா உங்க சமுதாயம்” என்று பொங்கி எழுந்தாள் வேலுநாச்சி.

 “நீ கொள்ளி போடுறதா இருந்தா உங்க அப்பாவை நாங்க தூக்க மாட்டோம்னு” ஒட்டுமொத்த ஆண்களும் விலகி போயிட்டாங்க.

” ஐயா அவ ஏதோ சின்ன பொண்ணு தெரியாம பேசுறா என் ராசா  போகும்போது நல்லபடியா போகணும் யா என்று உதவி செய்யுங்க யா”என்று கெஞ்சினாள் அருக்காணி.

 “அம்மா நீ ஏம்மா கெஞ்சுற இவர் என் அப்பா மா நான் பிறந்ததும் தோளில் போட்டு வளர்த்த அவரை நான் தோளில் சுமந்து போறேன் மா”என்று மாரியை தூக்கப்போனாள் வேலுநாச்சி.

“வேலுநாச்சி நான் தூக்குறேன்” என்று முன்னாடி வந்தாள் முனியம்மா மகள் திவ்யா. “திவ்யா அவ கூட சேர்ந்து உனக்கு திமிரு வந்திருச்சா” என்று கத்தினார் திவ்யாவின் அப்பா.

 “அப்பா நீயும் மூணு பொண்ணு தானே பெத்து வச்சிருக்க எங்களை பாசமா வளர்த்திருக்க அதுக்கு நன்றி காட்ட வேண்டாமா நாங்க, எங்கிருந்தோ வரும் மருமகனும் பங்காளியும் யாருப்பா எங்க அப்பா அம்மாவுக்கு செய்யறதுக்கு. பெத்த பொண்ணுங்க எங்களுக்கு தாம்பா உரிமை இருக்கு என்று திவ்யா சொன்னதும் பாசத்தில் அமைதியானார் திவ்யாவின் அப்பா.

திவ்யா வேலுநாச்சி பக்கத்தில் போய் நின்றாள்.  கூட்டத்தில் இருந்து தீபா போய் திவ்யா பக்கத்தில் நின்றாள்.

 “தீபா நீ ஏன் அங்க போற” என்று கத்தினாள் இருளாயி பாட்டி. “அப்பா அம்மா இல்லாத என்னை நீதானே பாட்டி வளர்க்கிற நாம கஷ்டப்படும்போது உதவாத சொந்தம் கொள்ளி வைக்கறதுக்கு மட்டும் எதுக்கு பாட்டி” என்று தீபா அழுதுகொண்டே கேட்டதும் அமைதியானார் இருளாயி. கூட்டத்திலிருந்து ஒரு இளைஞன் வந்தான் “தங்கச்சி நீ தூக்குமா எவன் தடுக்கறான்னு அண்ணே நான் பாத்துக்கிறேன்னு கிட்டே   வந்தான் நான்கு பேரும் சேர்ந்து மாரியை தூக்கினார்கள். வேலுநாச்சி கொள்ளிச் சட்டியை ஒரு கையில் வைத்துக்கொண்டாள். பெரியம்மா மரகதம் அவர்களுடன் வந்தார்.

 எல்லா பெண்களும் பின்னாலேயே வந்தார்கள்.

“என் பொண்ணு சொல்றதுல என்ன தப்பு இருக்கு எனக்கு எல்லாமே என் பொண்ணுங்க தான். அவள் பின்னாலேயே போறேன்” என்று திவ்யாவின் அப்பா வந்தார். பெண்ணை பெற்றவர்கள் எல்லாரும் அவர் பின்னால் வந்தார்கள். வானம் இருட்டி மழை பெய்யத் தொடங்கியது. அன்றொரு நாள் இதே மழையில் தன் உயிரை கையில் சுமந்தார் மாரி. இன்றும் இதே மழையில் மாரியை தோளில் சுமக்கிறாள். மாரியின் உயிர் மகளின் நெஞ்சில் இளைப்பாறுகிறது.

    நிறைவுற்றது.

(மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு  சமர்ப்பணம்)

Exit mobile version