விரைவில் ஒரு லட்சத்தை எட்டப்போகும் ஒரு பவுன் தங்கத்தின் விலை… அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!!


கனடாவின் தங்கத்தை உற்பத்தி செய்யும் நிறுவனமான `கோல்டுகார்ப் இன்க்’ நிறுவனத்தின் முன்னாள் தலைவர்களான டேவிட் கரோஃபாலோ மற்றும் ராப் மெக்வென் இருவரும் தான் தற்போது எளிய மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் தகவலை சொல்லியிருக்கின்றனர்.

அவர்கள் தெரிவிக்கும் போது, “உலகில் தற்போது பணவீக்கமானது அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் இதனை உன்னிப்பாக கவனித்துவரும் நிலையில், இந்தப் பணவீக்கமானது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமைய வாய்ப்பு இருக்கிறது. அதனால் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்ற அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர்.

தங்கத்தின் விலையானது தொடர்ந்து மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ள நிலையில், நீண்ட கால நோக்கில் இன்னும் அதிகரிக்கலாம் என்றும், தற்போது 1 டிராய் அவுன்ஸ் (31.10 கிராம் தங்கம்) 1,800 டாலர்களாக உள்ள நிலையில், ஒரே மாதத்தில் 3,000 டாலர்களாக (ரூ.2,25,450) உயர வாய்ப்புள்ளது என்றும், இது நீண்டகால நோக்கில் 5,000 டாலர்களாக (ரூ.3,75,750) அதிகரிக்கலாம்” என்றும் அவர்கள் தரவுகள் அடிப்படையில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

இவர்களது கணிப்பின்படி, இன்னும் ஒரு மாதத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை சுமார் ரூ.7,250 வரையும், ஒரு சவரன் தங்கம் (8 கிராம்) சுமார் ரூ.57,990 வரையும் (27.10.2021-ல் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.36,064 என்பது குறிப்பிடத்தக்கது) உயரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

நீண்டகால அடிப்படையில் சொல்லியிருக்கும் கணிப்பின்படி கணக்கிட்டால், ஒரு சவரன் தங்கம் சுமார் ரூ.97,000-யைத் தொடும் என்றும் தெரிகிறது. அதனால்தான் இந்த செய்தி தங்கம் துறை சார்ந்தவர்களின் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எளிய மக்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

`தற்போதைய நிலையில், தங்கம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் தொழிலாளர் பற்றாக்குறை, தொழிலாளர்களுக்கு உண்டான செலவு, மூலதனப் பற்றாக்குறை, அதிகரிக்கும் இதர செலவுகள் உள்ளிட்ட பல காரணிகளினால், தங்கத்துக்கான உற்பத்திச் செலவு கணிசமாக அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இதனால் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை நோக்கிக் கொண்டு செல்லும்” என்று பொருளாதார நிபுணர் டேவிட் கரோஃபாலோ குறிப்பிட்டுள்ளார்.

தங்கம் விலை இனி என்ன ஆகும், புதிய உச்சத்தைத் தொடுமா என சென்னை தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் ஜலானியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதுகுறித்து அவர் தெரிவிக்கும் போது, “கடந்த 2020-ம் ஆண்டு உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை, பிறகு கொஞ்சம் குறைந்தாலும், அதிகளவில் குறைந்துவிடல்லை. கொரோனா காலகட்டத்தில் 30-35% வரையில் தங்கத்தின் விலை அதிகரித்தது. இனிவரும் நாட்களிலும் தங்கத்தின் விலை ஏற்றத்தில்தான் இருக்கும். குறிப்பாக, 2022-ம் ஆண்டின் ஜூன் மாதத்துக்குப்பிறகு தங்கத்தின் விலை மீண்டும் ஒரு புதிய உச்சத்தைத் தொடவுள்ளது. தற்போதைய நிலையில் ஒரு பவுன் தங்கம் விலை அதிகபட்சமாக ரூ.43,330 வரை உயர வாய்ப்புள்ளது.

உலக நாடுகளின் அமைதியின்மை, போர்ச் சூழல், அரசியல் பதற்றம், இயற்கை சீற்றங்களினால் பேரழிவு போன்ற பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையில் நிச்சயம் பிரதிபலிக்கும். இது போன்ற அசாதாரணமாக சூழ்நிலைகளில் தங்கம் விலை அதிகரிக்கத்தான் வாய்ப்புள்ளதே தவிர இறங்காது. இன்னும் சொல்லப் போனால், கொரோனா சூழல், மக்களுக்கு தங்கம் மற்றும் தங்கம் சார்ந்த முதலீடுகளின் மீது நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.

உலகத்தின் உண்மையான கரன்சி என்றால் அது தங்கம்தான். ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தி தங்கத்திற்கு இருப்பதால், என்றைக்குமே தங்கத்திற்கு மவுசு அதிகம்தான்” எனத் தெரிவிக்கிறார் ஜெயந்திலால் ஜலானி.

Exit mobile version