பேக்கெட் உணவுகளின் முன்பக்கத்தில் எளிதில் தெரியும் வகையில் புதிய லேபிள்; உச்ச நீதிமன்றத்தில் FSSAI தகவல்
அதிக அளவு சர்க்கரை, உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு கொண்ட பேக்கெட் உணவுகளை பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், அவற்றின் முன்பக்கத்தில் சிவப்பு நிற எச்சரிக்கை குறியீடுகளை இடம்பெறச் செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான முன்மொழிவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் FSSAI தெரிவித்துள்ளது.
பேக்கெட் உணவுகளில் சர்க்கரை, உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு உள்ளிட்டவற்றின் அளவை நுகர்வோர் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் Front-of-Pack Warning Label நடைமுறையை கொண்டுவர வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில்தான் தனது திட்டம் குறித்த விவரங்களை FSSAI நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
எப்படி இருக்கும் எச்சரிக்கை?
FSSAI முன்மொழிவின்படி, எச்சரிக்கைக் குறியீடு சிவப்பு நிற அறுகோண வடிவத்தில் பேக்கெட்டின் முன்பக்கத்தில் இடம்பெறும்.
குறிப்பிட்ட அளவைத் தாண்டி சர்க்கரை, உப்பு அல்லது நிறைவுற்ற கொழுப்பு இருப்பதை நுகர்வோர் உடனடியாக புரிந்துகொள்ளும் வகையில் pictorial warning அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது உணவுப் பொருட்களின் ஊட்டச்சத்து விவரங்கள் பெரும்பாலும் பேக்கெட்டின் பின்பக்கத்தில் சிறிய எழுத்துகளில் இடம்பெறுகின்றன. புதிய முறையில் எச்சரிக்கையை முன்பக்கத்தில் தெளிவாகக் காட்டுவது நோக்கமாகும்.
எந்த உணவுகளுக்கு?
தற்போதைய முன்மொழிவின்படி, நிர்ணயிக்கப்படும் வரம்புகளின் அடிப்படையில் அதிக அளவு added sugar, salt மற்றும் added saturated fat கொண்ட packaged foods எச்சரிக்கை முறையின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன.
இறுதி விதிமுறைகள் அமலுக்கு வரும்போதுதான் எந்த அளவுக்கு மேல் எச்சரிக்கை கட்டாயம் என்பது முழுமையாகத் தெளிவாகும்.
உடனடியாக அமலுக்கு வருகிறதா?
இல்லை. இது தற்போது FSSAI முன்வைத்துள்ள திட்டமாகும்.
இதற்கான வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டு, பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து கருத்துகள் பெறுதல் உள்ளிட்ட நடைமுறைகள் முடிந்த பிறகே இறுதி விதிமுறைகள் அமலுக்கு வர முடியும்.
எனவே பேக்கெட் உணவுகளில் சிவப்பு எச்சரிக்கை லேபிள் ஏற்கெனவே கட்டாயமாகிவிட்டது என்று கருதக்கூடாது.
புதிய முறை நடைமுறைக்கு வந்தால், உணவுப் பொருளை வாங்கும் முன்பே அதில் அதிக சர்க்கரை, உப்பு அல்லது நிறைவுற்ற கொழுப்பு உள்ளதா என்பதை நுகர்வோர் எளிதாக அறிந்துகொள்ள இது உதவும்.
