காங்கிரஸ் கட்சியினர் நிவாரணப் பணிகளில் உடனடியாக இறங்க வேண்டும்-நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கே.எஸ்.அழகிரி உத்தரவு

காங்கிரஸ் கட்சியினர் நிவாரணப் பணிகளில் உடனடியாக களமிறங்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நிவர் புயல்
நிவர் புயலால் கடந்த இரண்டு நாட்களாக கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டு, மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கிற நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையின் பல பகுதிகள் வெள்ள நீரினால் மிதந்து வருகின்றன. வெள்ளத்தில் மிதக்கும் பகுதிகளில் தமிழக அரசின் நிவாரணப் பணிகள் அனைத்து மக்களுக்கும் போய்ச்சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்ய வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சியினருக்கு இருக்கிறது.

நிவாரணப் பணிகள்
இந்தச் சூழலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குகிற வகையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள், காங்கிரஸ் முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நேரடியாகக் களத்தில் இறங்கி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version