தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரிய மனுக்கள்; விசாரணை செப்.3-க்கு ஒத்திவைப்பு
முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை நிராகரிக்கக் கோரிய மனுக்கள் தொடர்பாக, திமுக வேட்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இதேபோல் வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெற்ற வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் மற்றும் வாக்காளர் சிவராஜ் ஆகியோர் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
தங்களுக்கு எதிரான இந்தத் தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும் என்று கோரி முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. விசாரணையைத் தொடர்ந்து, விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்துள்ள நிராகரிப்பு மனுக்களுக்கு தேர்தல் வழக்குகளைத் தொடர்ந்த திமுக வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 3-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
