டிராக்டர் பேரணி மூலம் போராட்டங்களை தொடர்வோம் – கைது செய்யப்பட்ட கே.எஸ்.அழகிரி பேட்டி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டிராக்டர் பேரணி மூலம் போராட்டங்களை தொடர்வோம் என்று கைது செய்யப்பட்ட கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தேனியில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிராக்டர் பேரணி நடத்திய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கைது செய்யப்பட்டார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
போராட்டங்கள் தொடரும்
மாநாட்டிற்கோ, தேர்தல் பிரசாரத்திற்கோ டிராக்டர்களை பயன்படுத்தவில்லை. ஆனால் டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மிரட்டி போலீஸார் போராட்டத்திற்கு தடை விதித்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. அகிம்சை முறையில் எதிர்ப்பை தெரிவிக்கத்தான் இந்த ஏற்பாடை செய்துள்ளோம். ஆனால் போலீஸார் அத்துமீறி செயல்படுகின்றனர். அடுத்தடுத்த மாவட்டங்களில் டிராக்டர் பேரணி மூலம் போராட்டங்களை தொடர்வோம்.

காங்கிரஸ் காலத்தில் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆனால் தற்போது விவசாயத்தை முடக்கும் திட்டங்களை மத்தியஅரசு கொண்டு வருகிறது.
பெரும் இழப்பு
இந்த வேளாண் சட்டம் மூலம் பொதுவிநியோகம் பாதிக்கும். விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கரும்பு கொள்முதலில் ஒப்பந்த முறை ஏற்படுத்தப்பட்டதால் தற்போது கரும்பு விவசாயமே பாதிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டதால் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். உள்ளிட்டவை பெரும் இழப்பை சந்தித்துள்ளன.

புதிய சட்டத்திருத்தத்தில் குறைந்தபட்ச ஆதாரவிலை குறித்த விபரம் இல்லை. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பே ஏற்படும்.
மாநிலப் பட்டியலில் உள்ள விவசாயத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருவதே தவறு. தமிழக அரசு ஏனோ இதற்கு எதிர்ப்பு காட்டவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version