வானிலை அறிக்கை தயாராவது எப்படி?

பூமியில் ஏற்படும் மிகப் பெரிய வானிலை நிகழ்வாக பார்க்கப்படுகிறது, சூறாவளித் தாக்குதல். ஒரு புயல் எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதை அதன் கண் பகுதிக்கு அருகில் இருக்கும் காற்றின் வேகத்தை வைத்து கணக்கிடுகின்றனர்.

கண்காணிப்பு விமானங்கள் பயன்படுத்தப்பட்டாலும் செயற்கைகோள்களைக் கொண்டு ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை எடுக்கும் புகைப்படத்தைையே இன்றுவரை முக்கியமாகக் கருதுகின்றனர் வானிலை ஆய்வாளர்கள். 

விண்வெளியில் பூமியை சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் Infra red  கேமராக்களைக் கொண்டு படங்ளைப் பிடிக்கின்றன. செயற்கைக்கோள்களின் மூலமே புயலின் நடுப்பகுதியை கண்டுபிடிக்கமுடியும். 

புயலின் கண் எங்குள்ளது என்பதை வைத்து அந்த புயலின் இருப்பிடத்தையும் அது எங்கு நகர இருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ளலாம். அதே போல ரேடார்களைப் பயன்படுத்தியும் புயலின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றது. ரேடாரின் கண்காணிப்பு திறன் எவ்வளவு தூரம் உள்ளதோ அதற்கேற்றார் போல அவை கண்காணிக்கப்படும்.

உலகின் பல நாடுகளும் தங்கள் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புயல் உருவாவதை முன்கூட்டியே கணித்து விடுகின்றனர். ஆனால் கடந்த பல நூற்றாண்டுகளாக புயல் ஏற்பட்டிருப்பதையும் தாக்குதல் அபாயங்களும் கப்பல் மாலுமிகளாலும் அதில் பயணித்தவர்களாலும் சொல்லப்பட்டு வாய்வழியே தான் பரவியது. 

கப்பலோட்டிகள் பல நாட்கள் கடலில் பயணிக்கும் போது புயலில் மாட்டிக் கொள்ளும் அபாயம் இருந்தது. அதில் இருந்து தப்பித்தவர்கள் சொல்லித்தான் புயல் உருவாகியுள்ளதை அறிந்துகொள்ள முடிந்தது. இல்லையேல் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வருபவர்கள் சொல்லக் கேட்டே அறிந்து கொள்ளவேண்டும்.  இதற்கு ஒரு சில வாரங்களில் இருந்து சில மாதங்கள் கூட ஆகலாம். 

அதன்பின் 1905ல் தந்திசேவை தொடங்கப்பட்ட பிறகு அதன்மூலம் உடனடியாக புயல் தாக்குதல்களை அறிந்துகொள்ள முடிந்தது. அதன் தொடர்ச்சியாக தொழில்நுட்பம் வளரத் தொடங்கியதன் அடையாளமாக இரண்டாம் உலகப்போரின் போது விமானங்களைப் பயன்படுத்தி புயல் தாக்குதல்களை கண்காணிக்க ஆரம்பித்தனர். பின்னர் ரேடார் , செயற்கைகோள்களைப் பயன்படுத்தி உடனுக்குடன் அவற்றின் இருப்பிடத்தை அறிந்துகொள்ளமுடியும்.

ஒரு சில சந்தர்ப்பங்களில் வானிலை அறிக்கைகள் தவறான தகவல்களை தருவதையும் நாம் பார்க்கமுடியும். அதற்கு காரணம் தவறான தொழில்நுட்பம் அல்ல. எளிதில் மாறும் தன்மையுடைய புயல்களே காரணம். அவை திசைவேகம், எந்த திசையில் பயணிக்கிறது போன்றவற்றை புறக்காரணிகளே தீர்மானிக்கின்றன. 

கடலின் வெப்பநிலை,ஈரப்பதம் இருக்கிறதா இல்லையா போன்றவையே பெரிதும் தீர்மானிக்கின்றன. திடீரென புயல் வலுவிழக்கலாம் அல்லது வலுபெறலாம்.  இதுவே வானிலை அறிக்கைகளில் தவறுகள் ஏற்பட காரணமாய் இருக்கிறது. புயலின் ஆரம்பப்புள்ளியை அறிய முடியாததும் தவறுகள் நிகழக் காரனமாய் இருக்கின்றன. இது போன்று பல்வேறு சவால்களைக் கடந்தே வானிலை ஆய்வறிக்கைகளை தயாரிக்க வேண்டியுள்ளது.

Exit mobile version