இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி பட்டம்; இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியர்
இந்திய செஸ் நட்சத்திரம் ஆர்.பிரக்ஞானந்தா, 2026 Grand Chess Tour Finals தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.
பிரேசிலின் சாவோ பாலோவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் முன்னணி கிராண்ட்மாஸ்டர் ஃபேபியானோ கருவானாவை எதிர்கொண்ட பிரக்ஞானந்தா, பல்வேறு வடிவிலான ஆட்டங்கள் அடங்கிய இறுதிச்சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். Classical சுற்றுக்குப் பிறகு நடைபெற்ற Rapid மற்றும் Blitz ஆட்டங்களிலும் இரு வீரர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ஒட்டுமொத்தமாக 15–13 என்ற புள்ளிக் கணக்கில் கருவானாவை வீழ்த்திய பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம் Grand Chess Tour Finals பட்டத்தை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்.
இந்த சீசன் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா, Grand Chess Tour புள்ளிப்பட்டியலிலும் முன்னணி இடத்தைப் பிடித்து Finals சுற்றுக்கு முன்னேறியிருந்தார். உலகின் முன்னணி செஸ் வீரர்களுக்கு எதிராக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் பிரக்ஞானந்தாவுக்கு இந்த வெற்றி மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்திய செஸ் வீரர்கள் சர்வதேச அரங்கில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பிரக்ஞானந்தாவின் Grand Chess Tour வெற்றியும் இந்திய செஸ் வரலாற்றில் முக்கிய சாதனையாக பதிவாகியுள்ளது.
