சமீபத்தில், ச்ச என்ன மனுசன் யா என்று அனைவரையும் ஆச்சரியத்தில் முனுமுனுக்க வைத்தவர் ராகுல் காந்தி. இப்படி அனைவரும் கூறக்காரணம் தமிழ் மக்களிடம் அவர் காட்டிய எளிமை தான். ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகையில், தேசிய கட்சியான காங்கிரசும் தன் பங்கிற்கு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. எதிர்கட்சியான திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் கட்சி இதுவரை நீடிக்கிறது.
2016 சட்டமன்ற தேர்தலில் 41 இடங்களைப் போராடிப் பெற்று போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும், காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடம் ஒதுக்கியது தான் தோல்விக்கான முக்கிய காரணமாக கருதினர் கட்சியினர். இதனால், இந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த இடம் ஒதுக்கி, தான் அதிக இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது.
நடந்து முடிந்த மக்களைவை தேர்தலில் கட்சிகள் பெற்ற வெற்றியின் அடிப்படையில் இந்த சட்டமன்ற தேர்தலுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டும் என முடிவு செய்துள்ளது திமுக தலைமை. மக்களவை தேர்தலில் ஒரு இடத்தில் வெற்றி பெற்று இருந்தால் சட்டமன்ற தேர்தலில் 3 இடங்கள் ஒதுக்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சி மக்களைவை தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் 27 இடங்கள் தான் ஒதுக்க முடியும் என திமுக தலைமை கூறியுள்ளது.
மேலும், கூட்டணி கட்சிகளையும் திமுகவின் சின்னத்தில் போட்டியிட வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக செய்திகள் வெளியாகின. இந்த கோரிக்கையை திமுக வலியுறுத்தினால் அதற்கு காங்கிரஸ் உடன்படுமா என்பதும் சந்தேகம் தான். காங்கிரஸ் கட்சி இன்னொன்றையும் சிந்திக்க வேண்டும். பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும் என்றால் திமுகவின் கூட்டணி காங்கிரஸ்க்கு முக்கியம். ஏனெனில் பாஜக, ஆளும் அதிமுக கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இவை தவிர கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் காங்கிஸின் செல்வாக்கு எப்படி உள்ளது என்ற கேள்வியும் எழுகிறது.
2011 சட்டமன்ற தேர்தலில் 63 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களிலும், 2016 சட்டமன்ற தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களிலும் மட்டுமே வெற்றிபெற்றது. இதில் 2011 தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. அதனால் காங்கிரஸின் தோல்வி பெரிதாக கேள்விகளை எழுப்பவில்லை. ஆனால், 2016 தேர்தலில் திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் தோல்வியடைந்தது. பல இடங்களில் 500, 1000 என்ற வாக்கு வித்தியாசத்தில் தான் அதிமுகவிடம் தோற்றது. இதனால் இந்த முறை காங்கிரஸின் தோல்வி பற்றி கேள்வி எழுந்தது.
காங்கிரஸ்க்கு குறைந்த இடங்களை ஒதுக்கி இருந்தால் அந்த தொகுதிகளில் திமுக நின்று வெற்றிபெற்றிருக்கலாம் என்று கட்சியினர் நினைத்தனர். இதனால் தான் இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த இடம் ஒதுக்க முடிவு செய்துள்ளது திமுக.
இந்நிலையில் தான் ‘ராகுலின் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் மூன்று நாள் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார் காங்கிரஸின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி. முன்னதாக, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை காண்பதற்கு அவனியாபுரம் வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. village cooking channel என்று சமையலுக்கு பிரபலமாக இருக்கும் யூடியூப் சேனலிலும் தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ராகுல்.
தேர்தல் நடக்கும் சமயத்தில் இவை அனைத்தும் நிகழ்வதால் மக்களின் மனதில் காங்கிரஸ் கட்சியை பதிய வைக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இவை அனைத்தும் தேர்தல் வியூகமாக இருந்தாலும் கூட ராகுலின் எளிமையான அணுகுமுறையும், அமைதியான முகமும் தமிழக மக்களை கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
திமுக குறைந்த இடங்களை ஒதுக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனித்து போட்டியிடுமா? இல்லை தமிழகத்தில் வாக்கு சதவீதத்தை கூட்ட முயற்சி செய்யுமா? ஆனால், இவை அனைத்தையும் விட பொது எதிரி பாஜகவை தோற்கடிக்க, குறைந்த இடங்கள் கொடுத்தாலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடரவே அதிக வாய்ப்புள்ளது.
ReplyForward |