உடன்குடியில் தொடரும் சட்ட விரோத மண் கொள்ளை !

திருச்செந்தூர் தொகுதி உடன்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் சட்ட விரோத மண் கொள்ளை மிக பெரிய அளவில் நடந்து வருகிறது.

வெள்ளாளன் விளையில் உள்ள மானாட்சி குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குளம் தூர்வாரி தருகிறோம் என்னும் பெயரில் 2000 லோடு மண் கொள்ளை நடந்தது . அதே போல சடையநேரி குளத்திலும் தற்போது மண் கொள்ளை நடந்து வருகிறது.

தற்போது கடந்த சில நாட்களாக 100 க்கணக்கான லாரிகளில் உடன்குடி அனல்மின் நிலைய வடக்கு பகுதியில் உள்ள தனியார் பட்டா இடங்களில் 50 அடி ஆழம் தோண்டி மண் எடுத்து உடன்குடி அனல் மின் நிலைய பணிக்கு சட்ட விரோதமாக எடுத்து செல்கின்றனர்.

ஏற்கனவே நிலத்தடி நீர் இல்லாத கருமை பகுதி என அரசால் அறிவிக்க பட்டுள்ள உடன்குடி ஊராட்சி ஒன்றியம் இந்த பகுதியில் நடக்கும் இந்த சட்டவிரோத மண் கொள்ளையால் மீண்டும் பாதிக்கபட்டு கடல் நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

ஏற்கனவே இதே இடத்தில் 500 ஏக்கரில் கடந்த ஆட்சியில் நடந்த மண் கொள்ளையால் இந்த பகுதியில் கடல் நீர் உட்புகுந்து விட்டது. இது தொடர்பான வழக்கும் மதுரை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

மேலும் இந்த பகுதியில் சட்டவிரோதமாக கொள்ளையடிக்கபடும் இந்த மண்ணில் பெரும் பகுதி தாதுமணல் ஆகும். அபூர்வமான அரசுக்கு சொந்தமான இந்த தாது மணலை எந்த அனுமதியும் இல்லாமல் மண் கொள்ளையர்கள் திருடி செல்கின்றனர்.மாவட்ட நிர்வாகம் , வருவாய்துறை ,கனிமவளத்துறை , காவல்துறை என ஒட்டு மொத்த தூத்துக்குடி மாவட்ட அரசு அதிகாரிகளும் அரசியல் அழுத்தம் காரணமாக இந்த விஷயத்தில் கள்ள மௌனம் காக்கின்றனர்.

ஏற்கனவே கடந்த ஆட்சியில் நடந்த அதே சட்டவிரோத மண் கொள்ளை இந்த திமுக ஆட்சியிலும் தொடர வேண்டுமா???… தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் இந்த மண் கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குணசீலன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version