பொங்கல் பண்டிகைக்கு ரூ. 1000 வழங்க தமிழக அரசு அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் திருநாளான அன்று, இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கும், பெரியவர்கள் இளையவர்களுக்கும் பொங்கல்படி கொடுத்து வாழ்த்துவது வழக்கமாக இருந்துவருகிறது.

திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற பெண்ணுகளுக்கு தாய் வீடுகளில் இருந்து பொங்கல் பொருட்களுடன், கரும்பு, மஞ்சள், கிழங்கு என பொங்கல்படி அனுப்பி வைப்பது உண்டு. அதுபோல் தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 2009-ம் ஆண்டு அறிமுகம் செய்தார்.

ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் அரை கிலோ பச்சரிசி, வெல்லம், 20 கிராம் பருப்பு, முந்திரி, திராட்சை ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசுப்பை அப்போது வழங்கப்பட்டது. 2011-ம் ஆண்டு வரையில் பொங்கல் பரிசுப்பை திட்டம் நடைமுறையில் இருந்தது. ஆட்சி மாறியதும் 2012-ம் ஆண்டு பொங்கல் பரிசுப் பை வழங்கப்படவில்லை.

2013-ம் ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் பொங்கலுக்கு தேவையான முந்திரி, திராட்சை போன்ற பொருட்கள் வாங்குவதற்கு ரூ.100 ரொக்கப்பணம் மற்றும் கரும்பு ஆகிய தொகுப்புகளுடன் இந்த திட்டத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விரிவுப்படுத்தினார்.ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில் 2017-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பரிசு தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது. ரூ.100 ரொக்கப்பணம் நிறுத்தப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனபிறகு 2018-ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புவழங்கப்பட்டது. 2019-2020 ஆகிய ஆண்டுகளில் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. 2021-ம் ஆண்டு மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2 ஆயிரத்து 500 கொடுக்கப்பட்டது. அப்போது சட்டசபை தேர்தல் நடைபெற இருந்ததால் பொங்கல் கவனிப்பு பலமாக இருந்ததாக விமர்சனங்களும் எழுந்தன.

2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்ததும், குடும்ப அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு மற்றும் மஞ்சள் பை, முழு கரும்பு ஆகிய 21 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவுப்படுத்தினார்.

இந்த பொங்கல் தொகுப்பில் வெல்லம், பச்சரிசி போன்ற பொருட்களின் தரம் குறைவாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. அதன் எதிரொலியாக தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் மீது பணியிடை நீக்கம்நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கசப்பான அனுபவம் இந்த ஆண்டில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக வரும் பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்புக்கு பதிலாக ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் மனநிலையில் தமிழக அரசு இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதுவரையில் தமிழக அரசு சார்பில் கரும்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படாததால் அந்த தகவலில் உண்மை இருக்கலாம் என்று தெரிகிறது. இதற்கிடையே, 2023 ஆம் ஆண்டு வர உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு 1,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக அண்மையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. ஆனால் இதுவரை பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிடவில்லை. இதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்து இருந்தனர். அதன்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 வழங்கப்படும். ஜனவரி 2-ம் தேதி முதல் ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும். 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர். ரூ.2,356.67 கோடி செலவு ஏற்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Exit mobile version