மியான்மரில் தொடரும் பதட்டம் : ஓராண்டிற்கு அவசரநிலை பிரகடனத்தை அறிவித்தது ராணுவம்

மியான்மர் அதிபர் தேர்தலில் நடந்த முறைகேடால் இன்னும் ஓராண்டிற்கு அவசரநிலை சட்டம் தொடரும் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

மியான்மர்:

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்றது. ஆனால்,இந்த தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக மியான்மர் ராணுவம் குற்றம்சாட்டி அதிபர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மியான்மர் ராணுவத்தின் இந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், அதிபர் வின் மைன்ட் மற்றும் ஆளுங்கட்சியின் முக்கியத் தலைவர் ஆங் சான் சூச்சி உள்ளிட்டோர் அந்நாட்டு ராணுவத்தின் அதிரடியால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அந்நாட்டில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது.

Read more – தூத்துக்குடியில் அரங்கேறிய கொடூரம் : சரக்கு வாகனத்தை ஏற்றி காவல் உதவி ஆய்வாளர் கொலை

மேலும், இன்று அங்கு நாடாளுமன்றம் கூட இருந்த நிலையில் ராணுவம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையால் அரசியல் கட்சி மற்றும் உறுப்பினர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது. இதனால் தலைநகர் நேபிதா மற்றும் முக்கிய நகரான யாங்கூனின் வீதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பல்வேறு முக்கிய நகரங்களில் தொலைத் தொடர்பு சேவையையும் துண்டித்து வருகின்றனர்.

பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதால் அவசர நிலை சட்டம் அமல்படுத்தப்பட்டு இன்னும் ஓராண்டிற்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

Exit mobile version