தரையிறங்கியபோது வெடித்த விமான டயர்; 41 பேரும் பத்திரமாக மீட்பு!

டெல்லி–பிலாஸ்பூர் Alliance Air விமானத்தில் பரபரப்பு; அடுத்த விமான சேவை ரத்து

டெல்லியில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் சென்ற Alliance Air விமானம் தரையிறங்கியபோது இடதுபுற டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 41 பேரும் காயமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகல் பிலாஸ்பூரில் உள்ள பிலாசா தேவி கேவட் விமான நிலையத்தில் நடைபெற்றது.

Alliance Air நிறுவனத்தின் 9I-613 விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிலாஸ்பூர் நோக்கிப் புறப்பட்டது.

பிலாஸ்பூர் விமான நிலையத்தில் பிற்பகல் 1.22 மணியளவில் விமானம் தரையிறங்கியபோது அதன் இடதுபுற பிரதான சக்கரங்களில் டயர் வெடித்ததாக Alliance Air தெரிவித்துள்ளது.

பாதுகாப்பாக நிறுத்திய விமானிகள்

டயர் வெடித்ததைத் தொடர்ந்து விமானிகள் விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஓடுபாதையிலேயே பாதுகாப்பாக நிறுத்தினர்.

இதையடுத்து விமான நிலைய ஊழியர்கள் மற்றும் தரைக்கட்டுப்பாட்டுக் குழுவினர் உடனடியாக செயல்பட்டு விமானத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றினர்.

பின்னர் அவர்கள் பாதுகாப்பாக விமான நிலைய முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

விமான சேவை ரத்து

டயர் வெடித்த விமானம் தொடர்ந்து இயக்கப்படாமல் பிலாஸ்பூர் விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.

இதனால் அதே விமானம் மேற்கொள்ளவிருந்த அடுத்த சேவையும் ரத்து செய்யப்பட்டது.

விமானத்தை மீண்டும் இயக்குவதற்கு முன்பு அதன் landing gear உள்ளிட்ட பகுதிகளில் விரிவான தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Alliance Air பொறியாளர்கள் விமானத்தை ஆய்வு செய்து, டயர் வெடித்ததற்கான காரணத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட விமானம் அதே நாளின் காலையில் டெல்லி–குலு–டெல்லி வழித்தடத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இயக்கப்பட்டிருந்ததாகவும் Alliance Air தெரிவித்துள்ளது.

Exit mobile version