இந்திய பாஸ்மதி அரிசிக்கு ஜப்பானில் புதிய சந்தை திறக்குமா?

அரிசி ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்பை அதிகரிக்க ஜப்பானுடன் பேச்சு நடத்த இந்தியா முடிவு

இந்திய பாஸ்மதி அரிசிக்கு ஜப்பானில் கூடுதல் சந்தை வாய்ப்பைப் பெறுவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது.

இந்தியா–ஜப்பான் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தமான CEPA-வை மறுஆய்வு செய்யும்போது பாஸ்மதி அரிசிக்கு கூடுதல் சந்தை அணுகல் வழங்குவது தொடர்பாக ஜப்பான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஜப்பானின் ஒசாகாவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினர் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜப்பானில் அரிசி முக்கியமான மற்றும் உணர்வுபூர்வமான துறையாக இருப்பதால், இந்திய பாஸ்மதி அரிசி ஏற்றுமதியை அதிகரிப்பது தொடர்பாக அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருப்பதாக பியூஷ் கோயல் கூறினார். பாஸ்மதி அரிசி மட்டுமின்றி இந்தியாவில் தயாரிக்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதியை ஜப்பானுக்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகளையும் இந்தியா ஆராய உள்ளது. அதேநேரத்தில், ஜப்பானின் கடுமையான தரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை இந்திய ஏற்றுமதியாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்தியா–ஜப்பான் பொருளாதார உறவுகளை மேலும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.

Exit mobile version