ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியிடம் தோல்வியை தழுவியது.

164 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பேரிஸ்டோவ் களம் இறங்கினர்.முதல் ஒவரில் 1 பௌண்டரி அடித்து இன்னிக்ஸை தொடங்கினார் டேவிட் வார்னர்.உமேஷ் யாதவ் வீசிய 2 வது ஓவரில் பேரிஸ்டோவ் தன் பங்கிற்கு ஒரு பௌண்டரி,ஒரு சிக்ஸர் அடித்து அசத்தினார்.எதிர்பாராத விதமாக பேரிஸ்டோவ் அடித்த பந்து உமேஷ் கைகளில் பட்டு எதிரில் இருந்த ஸ்டம்பில் பட,அப்பொழுது டேவிட் வார்னர் பேட் உள்ளே இல்லாத காரணத்தினால் அவுட் ஆகி வெளியேறினார்.அடுத்து வந்த மனீஷ் பாண்டே ஸ்டைன் ஓவரில் ஒரு பௌண்டரி அடித்து அவரது ஆட்டத்தை தொடங்கினார்.உமேஷ் வீசிய 5 வது ஓவரில் அடுத்தடுத்து 2 பௌண்டரிகளை மனீஷ் தெறிக்கவிட்டார்.எதிர் முனையில் பேரிஸ்டோவும் தன் பங்கிற்கு பௌண்டரி அடிக்க,தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் வீசிய 6.2 வது ஓவரில் மனீஷ் சிக்ஸர் அடித்து ஹைதராபாத் அணி 50 ரன்களை கடக்க உதவி செய்தார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய பேரிஸ்டோவ் உமேஷ் வீசிய 9 வது ஓவரில் ஒரு சிக்ஸர்,ஒரு பௌண்டரி அடித்து அசத்த,10 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 1 விக்கெட் இழந்து 78 ரன்களை எடுத்து இருந்தது.அதை தொடர்ந்து சகால் வீசிய 12வது ஓவரில் 33 பந்துகளுக்கு 34 ரன்கள் எடுத்து மனீஷ் பாண்டே சைனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்தடுத்து மூன்று விக்கெட் வாய்ப்புகள் கிடைத்த பேரிஸ்டோவ் உமேஷ் பந்து வீச்சில் ஒரு பௌண்டரி அடித்து அரை சதத்தை கடந்து அணியின் எண்ணிக்கையை 100 ரன்களுக்கு கொண்டு சென்றார்.35 பந்துக்கு 55 ரன்கள் தேவை என்ற நிலையில் பேரிஸ்டோவ் 4 ரன்கள் அடித்து அசத்தினார்.சகால் வீசிய 15.2 வது பந்தில் பேரிஸ்டோவ் 43 பந்துகளில் 61 ரன்களுடன் கிளீன் போல்ட் ஆகி வெளியேற அதே ஓவரில் வந்த வேகத்தில் தமிழக வீரர் விஜய் சங்கரும் ரன் ஏதுமின்றி போல்ட் ஆகி நடையை கட்டினார் .16 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 127 ரன்களுடன் ஹைதரபாத் அணி தடுமாற,அடுத்து வந்த கார்க்கும் பெரிதாக நிலைக்கவில்லை.அடுத்து வந்த ரஷித் கான் முதல் பந்தில் பௌண்டரி அடித்து,அடுத்த பந்துகளிலே ரஷித் கானும் அபிசேக் ஷர்மா ரன் எடுக்க ஓடிய போது மோதிக்கொண்டு அபிசேக் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.18 பந்துகளுக்கு 29 ரன்கள் ஹைதராபாத் அணிக்கு தேவை என்ற நிலையில் சைனி வீசிய 18 வது ஓவர் இரண்டாவது பந்தில் நோ பால் போட்டு டிவிலியர்ஸ் பிடிக்க முடியமால் பௌண்டரி ஓடியது.அடுத்தடுத்த பந்தே புவனேஷ்வர் குமார்,ரஷித் கானை கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார் சைனி.துபே வீசிய 19 வது ஓவரில் காயம் காரணமாக மிட்சல் மார்ச் வேறுவழியின்றி தூக்கி அடித்து அவுட் ஆனார். ஹைதராபாத் அணிக்கு1 விக்கெட் மட்டுமே மிச்சம் இருக்க கடைசி 6 பந்துகளில் 18 ரன்கள் தேவையாக இருந்தது. ஹைதராபாத் அணி சார்பில் நடராஜன்,சந்தீப் நிற்க ஓவர் போட வந்தார் ஸ்டைன்.19.3 பந்தில் சந்தீப் பேட்டில் பட்டு ஒரு பௌண்டரி ஓடி ,அடுத்த பந்தே தூக்கி அடித்து சந்தீப் அவுட் ஆகி அனைத்து விக்கெட் இழந்து ஹைதராபாத் அணி 10ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியிடம் தோல்வியை தழுவியது.
ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக பேரிஸ்டோவ் 61 ரன்கள் எடுத்து இருந்தார்.பெங்களூர் அணியில் சகால் 18 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்களை அள்ளினார்.அதனை தொடர்ந்து பெங்களூர் அணி வெற்றி பெற முக்கிய காரணமாய் இருந்த சகாலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.




