மாவட்ட வாரியாக மேற்கொண்ட கொரோனா சோதனை விவரங்கள், படுக்கைகள் காலியாக உள்ள மருத்துவமனைகள், மாதிரிகள் சேகரிக்கும் மையங்கள் ஆகியவற்றை வெளிப்படையாக அறிவிக்க கோரி மதுரை மத்திய தொகுதி திமுக எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு மற்றும் சென்னை மாநகராட்சி அளிக்கும் தகவலில் முரண்பாடுகள் உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் ஆகிய விதிகளை பின்பற்றுவதில்லை என குற்றம்சாட்டினார்.
அரசு தரப்பில் கொரோனா தடுப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும், தொற்று பதித்தவர் குறித்த விவரங்களை தினசரி அடிப்படையில் வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 133 ஆய்வகங்களில் இதுவரை 34 லட்சத்து 32 ஆயிரத்து 25 மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 12 நிலவரப்படி 314520 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, அதில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 313 பேர் குணமடைந்து திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், அரசு அபராதம் விதித்து அரசாணை பிறப்பித்திருந்தாலும் அது முறையாக அமல்படுத்தபடவில்லை என மனுதாரர் கூறுவதால், மக்கள் கூடும் இடங்களில் அதிகாரி ஒருவரை அனுப்பி முக கவசம் மற்றும் தனி மனித இடைவெளி ஆகிய விதிகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமென உத்தரவிட்டார்.
முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்றாவிட்டால் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை அளித்துள்ளதை கருத்தில் கொள்ள வேண்டுமென எச்சரித்தனர்.
மேலும், சந்தை, திருமணம், இறுதி சடங்கு ஆகிய இடங்களுக்கு செல்பவர்களுக்கு முகக்கவசம் வழங்குவதற்கு சாத்தியமுள்ளதா என பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.