சூடான காரசாரமான சைனீஸ் நூடுல்ஸ், பிரைட் ரைஸ் போன்றவை அடிக்கடி வெளியில் சென்று சாப்பிடுவோம். எனினும், செலவு அதிகம், மேலும் அதில் என்னென்ன சேர்க்கிறார்கள் என்றும் நமக்கு தெரிவதில்லை. இனி கவலை வேண்டாம். ஒரே ஒரு ஸ்செஸ்வான் சாஸ் செய்து குளிசாதனத்தில் வைத்து விடுங்கள். எப்போது வேண்டுமானாலும் நூடுல்ஸ், பிரைட் ரைஸ் மிகச் சுலபமாக செய்து சாப்பிடுங்கள்!

தேவையானவை:
| காரம் குறைந்த வகை சிவப்பு மிளகாய் | 15-20 |
| பூண்டு | 5-6 (சிறிதாக வெட்டியது) |
| இஞ்சி | 1 சிறிய துண்டு(வாசனைக்கு) |
| வெங்காயம் | சிறிதளவு, பொடியாக நறுக்கியது |
| சிச்சுவான் பெப்பர் | வாசனைக்கு, இல்லையென்றால் ஒதுக்கிவிடலாம் |
| சோயா சாஸ் | சிறிதளவு |
| வினிகர் | சுவைக்கு |
| எண்ணெய் | தேவைக்கேற்ப |
| உப்பு | தேவைக்கேற்ப |
| சர்க்கரை | சிறிதளவு |
| மிளகுத்தூள் | சிறிதளவு |
| தண்ணீர் | தேவைக்கேற்ப |
- மிளகாயை சூடான நீரில் குறைந்தது 30 நிமிடம் ஊற வையுங்கள். நல்ல மிருதுவாக ஆகும்.
- ஊறிய மிளகாயை எடுத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் 1-2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள்.
- ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு, இஞ்சி, நறுக்கிய வெங்காயம் மற்றும் சிச்சுவான் பெப்பர்(இருந்தால்) போட்டு வதக்கவும். நிறம் மாறி விடாமல், 1-2 நிமிடம் எண்ணையில் வதக்குங்கள்.
- இப்போது அரைத்த மிளகாய் விழுதைப் போட்டு நன்றாக கிளறுங்கள். (தெறிக்கும், பத்திரமாக நில்லுங்கள்). மிதமான தீயில் மிளகாய் வேகட்டும். அரை கப் (அல்லது அடர்த்தியைப் பொறுத்து) தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள்
- நன்கு வெந்து, எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும்.
- இந்த நிலையில், உப்பு, சிறிதளவு சர்க்கரை, 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து கலக்குங்கள்.
- பிறகு, சோயா சாஸ், வினிகர் விட்டு கிளறுங்கள்.
- நல்ல அடர்த்தியாகி, திரண்டு வரும். அப்போது இறக்கி விடுங்கள்.
- ஈரப்பதம் இல்லாத, காற்று புகாத பாட்டில் அல்லது டப்பாவில் கொட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்செஸ்வான் நூடுல்ஸ் செய்ய:
- கடைகளில் நூடுல்ஸ் வாங்கி, கொதிக்கும் நீரில் சிறிது நேரம் வேகவிட்டு, உடனே அந்த நீரை வடிகட்டி, குளிர்ந்த நீரை மேலே ஊற்றி வடிகட்டி, எண்ணெய் சிரிதளவு சேர்த்து தனியே வையுங்கள்.
- வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, சிறிதளவு பூண்டு, இஞ்சி, வெங்காயம் மற்றும் நறுக்கிய காய்கறி வகைகள்(கேரட், பீன்ஸ், முட்டைகோஸ்,காலிஃப்ளவர்) சேர்த்து வதக்குங்கள்.
- பாதி வெந்ததும், செய்து வைத்திருக்கும் ஸ்செஸ்வான் சாஸ் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் கலந்து எல்லாவற்றையும் நன்றாக கிளறுங்கள்.
- உப்பு சுவை பார்த்து சேர்த்துக்கொள்ளுங்கள்.
- இப்போது, வேகவைத்த நூடுல்ஸ் சேர்த்து, எல்லாம் நன்றாக கலந்து சூடாக பரிமாறுங்கள்.
ஸ்செஸ்வான் பிரைட் ரைஸ்:
- உதிரியாக சாதம் வடித்து, எண்ணெய் விட்டு தடவி, தனியே வையுங்கள்.
- வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, சிறிதளவு பூண்டு, இஞ்சி, வெங்காயம் மற்றும் நறுக்கிய காய்கறி வகைகள்(கேரட், பீன்ஸ், முட்டைகோஸ்,காலிஃப்ளவர்) சேர்த்து வதக்குங்கள்.
- பாதி வெந்ததும், செய்து வைத்திருக்கும் ஸ்செஸ்வான் சாஸ் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் கலந்து எல்லாவற்றையும் நன்றாக கிளறுங்கள்.
- இப்போது வைத்திருக்கும் ஆறிய சாதத்தை சேர்த்து கலக்குங்கள். சூடான பிரைட் ரைஸ் தயார்!
இது மட்டும் அல்லாமல், சில்லி பன்னீர், கோபி மஞ்சூரியன் போன்ற உணவு வகைகளிலும் இந்த ஸ்செஸ்வான் சாஸ் பயன்படுகிறது.




