டாப் ஸ்டார் பிரசாந்துடன் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான பாலிவுட் படம் ‘அந்தாதூன்’. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் இந்தப் படம் குவித்தது.
இந்தப் படத்துக்க்கான தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார். இதில் ஆயுஷ்மான் குரானா வேடத்தில் பிரசாந்த் நடிக்கிறார். பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது.
இந்நிலையில் இந்திப் படத்தில் தபு வேடத்தில் நடித்த கேரக்டரில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயை நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே பிரசாந்துடன் நடிகை ஐஸ்வர்யா ராய் ஜீன்ஸ் படத்தில் நடித்திருந்தார். 1998-ல் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




