தேனியில் அனுமதியின்றி ஊர்வலம் செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கைது செய்யப்பட்டார். கே.எஸ்.அழகிரி கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் 300 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உ.பி. மாநிலம் ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில், தேனி – போடி சாலையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஊர்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊர்வலத்தில், விவசாயத்திற்கு உபயோகப்படுத்தும் டிராக்டர் போன்ற வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஸ்வி எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், நியாயமான போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால், எதிர்ப்பை மீறி போராட்டம் நடத்தவேண்டியிருக்கும் என கே.எஸ்.அழகிரியும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த கே.எஸ்.அழகிரி, வேளாண்மை சட்டத்திற்கு எதிரான போரட்டத்தை காவல் துறை சீர்குலைப்பதாக கண்டனம் தெரிவித்தார். பின்னர், விடுதியிருந்து ஊர்வலமாகச் செல்ல முயன்ற கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஹசன் ஆருண், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முருகேசன் உள்ளிட்டோரை, தேனி காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையில் காவலர்கள், விடுதி வாயில் முன்பு சாலையில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதனையடுத்து, கே.எஸ்.அழகிரி கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் 300 பேர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் தேனி-குமுளி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.