திருவண்ணாமலை முழுவதையும் கைப்பற்ற அ.தி.மு.க தீவிரம்…

திருவண்ணாமலை முழுவதையும் கைப்பற்ற அ.தி.மு.க தீவிரம்…
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்துத் தொகுதிகளையும் சட்டப் பேரவைத் தேர்தலில் கைப்பற்ற அதிமுக உறுதி பூண்டுள்ளது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், போளூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள பூத்கள் வாரியாக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களை பூத் வாரியாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட ஆவின் தலைவருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி நேரடியாக சென்று ஆய்வு செய்து யோசனைகளை வழங்கி வருகிறார்.

இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை நகரில் 39 வார்டுகளில் பூத்கள் வாரியாக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் தலா 25 பேர் வீதம் 138 பூத்களுக்கு 3 ஆயிரத்து 450 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை பூத் வாரியாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்து, வரும் சட்டமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசனைகளை வழங்கி அவர் பேசினார். மேலும் தொண்டர்களை அவர் உற்சாகம் மூட்டியும் வருகிறார்.

அப்போது அவர் பேசும்போது, “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட திட்டங்கள் உட்பட அனைத்து திட்டங்களையும் அரசு முழுமையாக நிறைவேற்றி வருகிறது. படித்த இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகளை முதல்வர் உருவாக்கி வருகிறார். அ.தி.மு.க. அரசின் சாதனைகள் புதிய திட்டங்கள் மக்களுக்கு எடுத்துக்கூறியும் சமூக நலத்திட்டங்களை மக்கள் பெறுகின்ற வகையில் உறுதுணையாக பாசறை நிர்வாகிகள் செயல்பட வேண்டும். அதற்கான களப்பணிகளை அவர்கள் உடனடியாகத் தொடங்கவேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தை அ.தி.மு.க. கோட்டையாக நிர்வாகிகளும், தொண்டர்களும் மாற்ற வேண்டும். முதல்வர் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் மீண்டும் தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்திட திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளையும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும்” என்றார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *