குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் விண்ணப்பங்கள், புகார்கள் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம், தெளிவுபடுத்தி இருக்கிறது.
தேசிய, சர்வதேச பெண்கள் அமைப்புகள், தேசிய மகளிர் ஆணையத்தின் முயற்சியால், 2005ம் ஆண்டு குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டு, 2006ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், இழப்பீடு கோரியும், வசிப்புரிமை கோரியும், பாதுகாப்பு கோரியும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் விண்ணப்பிக்கலாம்.இந்த சட்டப்பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை ரத்து செய்யக் கோரி, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில், பாதுகாப்பு மீறல் மட்டும் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இழப்பீடு கோருவது உள்ளிட்ட கோரிக்கைகள் அனைத்தும் உரிமையியல் சம்பந்தப்பட்டது என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளதாக கூறி, இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதேசமயம், மனுதாரர்கள், நிவாரணம் கோரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும், இக்கோரிக்கைகளை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் விண்ணப்பங்கள், புகார்கள் அல்ல எனக் கூறிய நீதிபதி, இதில் சம்பந்தப்பட்டவர்களை நேரில் ஆஜராக கூறி சம்மன் அனுப்ப கூடாது எனவும், நோட்டீஸ் மட்டுமே அனுப்ப வேண்டும் எனவும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.