பழனி அருகே உயிரிழந்து கிடந்த பெண் காட்டுயானையின் உடலை விட்டு நகராமல் குட்டியானை ஒன்று சுற்றிச் சுற்றி வந்த வீடியோ காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் பழனியை அடுத்துள்ள பாலாறு-பொருந்தலாறு அணையை ஒட்டியுள்ள ஜீரோ பாயின்ட் வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த யானையை பரிசோதனை செய்ததில் பெண் யானை என்று தெரியவந்தது. மேலும் இறந்து கிடந்த பெண் யானையின் உடலின் அருகே மூன்று மாத குட்டி யானை ஒன்று சுற்றிச் சுற்றி வந்துள்ளது. இதனையடுத்து, கால்நடை மருத்துவர்கள் இறந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
அப்போது யானை இறந்து மூன்று நாட்களுக்கு மேலாகி இருக்கலாம் என்று தெரியவந்தது. மேலும் இறந்து கிடந்த பெண் யானை, அந்த குட்டியானையின் தாயாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து யானையின் உடலை வனப் பகுதியிலேயே வனத்துறையினர் புதைத்தனர். யானையின் இறப்பு குறித்து வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
உயிரிழந்த தாய் யானையை விட்டு நகராமல் இருந்த குட்டியானையின் வீடியோ காண்போரை கண்கலங்க வைக்கிறது.