சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படமும், தல அஜித்குமார் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் 2019ஆம் வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் வெளியானது.
இதில் தல அஜித்குமாரின் விஸ்வாசம் திரைப்படம் வசூல் அடிப்படையில் முதல் இடத்தை பிடித்தது. இந்த நிலையில் வருகிற தீபாவளிக்கு ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படமும், அஜித் நடித்த வலிமை படமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அஜித்குமாரின் விஸ்வாசம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா தான் அண்ணாத்த படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேய கும்மகொண்டா, யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். ரஷ்யாவில் நடைபெற்று வந்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. அதற்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. அதனால் வலிமை படத்தையும் தீபாவளி அன்று வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இரு திரைப்படங்களும் தீபாவளியை குறிவைப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.