
தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டு வரும் ‘எஸ்.கே. 20’ படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் படத்தின் மொத்த வருவாய் ரூ. 100 கோடியை கடந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் அயலான், மாவீரன் மற்றும் பெயரிடப்படாத ’எஸ்.கே 20’ படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக எஸ்.கே 20 படத்தை அனூதீப் இயக்கி வருகிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான இவர், ‘பிட்டாகோடா’, ‘ஜதிரத்னலு’ படங்களை இயக்கி முத்திரை பதித்தவர்.
இந்நிலையில் படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதன்மூலம் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எஸ்.கே 20 என்று அழைக்கப்பட்டு வந்த இப்படத்துக்கு ‘பிரின்ஸ்’ என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளது.
சிவகார்த்திகேயன் இப்படத்தில் பள்ளி ஆசிரியராக நடிக்கிறார். கதாநாயகியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோசப்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சத்யராஜ், பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




