டி.ராஜேந்தர் நாளை (ஜூலை 22) தாயகம் திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லட்சிய திமுக தலைவரும், பன்முக கலைஞருமான டி.ஆர் வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக (சிம்புவின் வற்புறுத்தலுக்கு இணங்க) கடந்த ஜூன் 14ம் தேதி அமெரிக்காவிற்கு சென்றார். செல்லும் முன் ரசிகர்களுக்கு உருக்கமான பேட்டி ஒன்றை அளித்தார். அந்த பேட்டியில், “உங்களின் நல்லாசியுடன் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறேன். எனது உடல்நலனில் அக்கறை கொண்டு விசாரித்து நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டிருந்தார். இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலானது. ரசிகர்கள் பலரும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.
இந்த நிலையில், தற்போது அவர் பூரண குணமடைந்துள்ளார். அவருக்கு வட அமெரிக்கா தமிழ் சங்கத்தை சேர்ந்த பால சுவாமிநாதன் மற்றும், கால்டுவெல் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சென்னை வந்தவுடன் தனது உடல்நலம் குறித்து விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க உள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க லதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே, நாளை சிம்பு மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘மஹா’ திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.