September 18, 2026 11:51 AM GMT+5:30
வாஷிங்டன், செப்.18: நிலவின் மேற்பரப்பில் சமீப காலத்தில் உருவான மிகப்பெரிய பள்ளம் ஒன்றை NASA விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 222 மீட்டர் அகலமும் 43 மீட்டர் ஆழமும் கொண்ட இந்தப் பள்ளத்திற்கு ‘McGetchin’ எனப் பெயரிட முன்மொழியப்பட்டுள்ளது. NASA-வின் Lunar Reconnaissance Orbiter (LRO) எடுத்த படங்களை ஆய்வு செய்தபோது இந்த அரிய கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.
பள்ளம் உருவானது எப்போது?
இந்தப் பள்ளம் இப்போது உருவானதல்ல. LRO எடுத்த பழைய மற்றும் புதிய படங்களை ஒப்பிட்டதில், 2024 ஏப்ரல் 11 முதல் மே 22-க்குள் இந்தப் பள்ளம் உருவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிறுகோள் அல்லது வால்நட்சத்திரத்தின் ஒரு துண்டு நிலவில் மோதியதால் இது உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
மோதலை ஏற்படுத்திய விண்பொருள் மூன்று முதல் ஆறு மாடிக் கட்டடத்தின் அளவில் இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஆனால் அந்த மோதல் நிகழ்ந்த நேரத்தில் பூமியிலிருந்தோ விண்வெளியிலிருந்தோ தொலைநோக்கிகள் மூலம் அது நேரடியாகக் கண்டறியப்படவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த கண்டுபிடிப்பு
LRO திட்டத்தில் பணியாற்றும் விஞ்ஞானி ராபர்ட் வாக்னர், நிலவின் படங்களை வழக்கமான தரச் சோதனைக்காக ஆய்வு செய்தபோது, இருண்ட வளையத்தால் சூழப்பட்ட பெரிய பிரகாசமான பகுதியைக் கவனித்துள்ளார். பழைய படங்களுடன் ஒப்பிட்டபோதுதான் அங்கு முன்பு இல்லாத புதிய பள்ளம் உருவாகியிருப்பது தெரியவந்தது.
உண்மையில் 2024-ல் எடுக்கப்பட்ட படங்களில் இந்தப் பள்ளம் பதிவாகியிருந்தாலும், மிகப்பெரிய அளவிலான தரவுகளுக்கு இடையே அது உடனடியாகக் கவனிக்கப்படவில்லை. 2025-ல் இது அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள் எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழக்கூடிய மோதல்
222 மீட்டர் விட்டமுள்ள இத்தகைய பள்ளத்தை உருவாக்கும் அளவிலான மோதல் நிலவில் சராசரியாக 132 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழலாம் என்று விஞ்ஞானிகளின் மாதிரிகள் கணிக்கின்றன. அதனால்தான் NASA இதனை ‘once-in-a-century’ நிகழ்வாகக் குறிப்பிடுகிறது.
இதற்கு முன்பு LRO திட்டத்தின் மூலம் புதிதாக உருவானதாகக் கண்டறியப்பட்ட மிகப்பெரிய பள்ளம் சுமார் 70 மீட்டர் விட்டம் கொண்டதாக இருந்தது. புதிய McGetchin பள்ளம் அதைவிட மூன்று மடங்குக்கும் அதிகமான விட்டத்தைக் கொண்டுள்ளது.
நிலவின் பரப்பில் 100 கி.மீ.க்கும் மேல் தாக்கம்
மோதலின்போது வெளியேறிய பாறை மற்றும் தூசுப் பொருட்களின் தாக்கம் பள்ளத்தைச் சுற்றிய பகுதியில் மட்டும் நின்றுவிடவில்லை. நிலவின் மேற்பரப்பில் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவு வரை மாற்றங்கள் பதிவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பள்ளத்தைச் சுற்றி சுமார் 7 கிலோமீட்டர் அகலத்தில் வெப்பநிலை குறைந்த பகுதியும் கண்டறியப்பட்டுள்ளது.
விண்வெளி ஆய்வுக்கு ஏன் முக்கியம்?
புதிய பள்ளம் உருவாவதற்கு முன்பும், உருவான பிறகும் எடுக்கப்பட்ட படங்கள் விஞ்ஞானிகளிடம் இருப்பதால், ஒரு பெரிய மோதல் நிலவின் மேற்பரப்பை எவ்வாறு மாற்றுகிறது என்பதை நேரடியாக ஒப்பிட்டு ஆய்வு செய்ய முடிகிறது.
மேலும் நிலவில் நீண்டகாலம் செயல்படும் ஆய்வுத் தளங்கள் மற்றும் பிற கட்டமைப்புகளை எதிர்காலத்தில் அமைக்கும்போது, தொலைவில் நிகழும் விண்பொருள் மோதல்களால் சிதறக்கூடிய அதிவேகத் துகள்களால் ஏற்படும் அபாயத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதை இந்தக் கண்டுபிடிப்பு உணர்த்துவதாக LRO ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. LROC
NASA வெளியிட்டுள்ள McGetchin பள்ளத்தின் படங்கள் மற்றும் முழு விளக்கம்





