காங்கிரஸ் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் காரிய கமிட்டி கூட்டம் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு டெல்லியில் நடைபெற்றது. மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ள அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி காணொலி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றார். அவருடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியும் பங்கேற்றனர். கூட்டத்தில் ப.சிதம்பரம், மல்லிகார்ஜுனா கார்கே, கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், அக்டோபர் 17ம் தேதி கட்சித் தலைவர் தேர்தலை நடத்த காங்கிரஸ் காரிய கமிட்டி ஒப்புதல் அளித்தாக தெரிவித்தார். கட்சி தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு செப்டம்பர் 22ம் தேதி வெளியிடப்படும் என்றும் வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ம் தேதி நடைபெறும் என்றும் குறிப்பிட்டார். தேவைபட்டால் அக்டோபர் 17ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையே செப்டம்பர் 7ம் தேதிமுதல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ராகுல் காந்தி பாரத் பாதயாத்திரை செல்ல உள்ளார்.