மதுரை: மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர், பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்படுகின்றன.
என்னென்ன பணியிடங்கள்?
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஓர் ஈப்பு ஓட்டுநர் பணியிடமும், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு பதிவறை எழுத்தர் பணியிடமும் உள்ளன. திருமங்கலம் மற்றும் தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் தலா ஓர் அலுவலக உதவியாளர் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 10 என மதுரை மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்புப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி மற்றும் சம்பளம்
ஈப்பு ஓட்டுநர் பதவிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் தேவை. இதற்கான ஊதிய நிலை ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை குறிப்பிடப்பட்டுள்ளது.
பதிவறை எழுத்தர் பணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஊதியம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும். அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது; ஊதியம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
மதுரை மாவட்ட நிர்வாக இணையதளத்தில் ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி, வயது, சாதி மற்றும் அனுபவச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இடஒதுக்கீடு, வயது வரம்பு மற்றும் திருத்த அறிவிப்புகளை முழுமையாகப் படித்த பின்னரே விண்ணப்பிப்பது அவசியம்.






