சீனாவை சேர்ந்த எவோக் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டது என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சீன தலைநகர் பீஜிங்கை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எவோக் நிறுவனம் 6061 எலெக்ட்ரிக் குரூசர் என்ற பைக்கை அறிமுகம் செய்துள்ளது. மிகப்பெரிய பேட்டரி பேக் மற்றும் வேகமான மற்றும் சிறந்த சார்ஜிங் வசதி இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளது.
இதில் பொருத்தபட்டுள்ள 120 கிலோவாட் திறன் கொண்ட மோட்டார், மணிக்கு அதிகபட்சம் 230 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. இதன் பேட்டரியை 0 முதல் 80% வரையில், டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டு சார்ஜ் செய்ய வெறும் 15 நிமிடங்களே போதுமானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எவோக் 6061 மாடலானது வட்ட வடிவத்தில் எல்இடி முகப்பு விளக்குடன் மஸ்குலர் தோற்றம் கொண்டுள்ளது. இதன் பின்புற பகுதியை பார்க்க டுகாட்டி டையவெல் போன்று காட்சியளிக்கிறது. மேலும், இந்த பைக்கில் 24.8kWh லிக்விட் கூல்டு பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
நகர்ப்புற பகுதியில் ஓட்டும் போது இந்த பைக் 470 கிலோமீட்டர் வரையிலும், நெடுஞ்சாலைகளில் செல்லும் போது 265 கிலோமீட்டர் வரையிலிம் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவோக் நிறுவனத்தின் இந்த புதிய 6061 பைக் விரைவில் அமெரிக்க சந்தையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 18.73 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.