மன அழுத்தத்துடன் இருப்பவர்கள் ரஜினிகாந்த் படத்தை பாருங்கள், அது உற்சாகம் தரும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவஹல் ஸ்ரீநாத் கூறியுள்ளார்.
‘சூப்பர்ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்’. ஆம் நம் சூப்பர்ஸ்டார் உலக சினிமாவின் அசைக்க முடியாத அங்கமாக இருக்கிறார். அவருக்கென இருக்கும் ரசிகர்கள் ஏராளம். 80s kids, 90s kids, 2k kids என வயது வித்தியாசம் இல்லாமல் இவருக்கு ரசிகர்கள் இருக்கின்றனர்.
பல பிரபலங்களும், திரை நட்சத்திரங்களும் கூட சூப்பர் ஸ்டாரின் ரசிகன் நான் என பெருமையாகவே சொல்லி வருகின்றனர்.
ஜவஹல் ஸ்ரீநாத் இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போது பன்னாட்டு கிரிக்கெட் அவையின் நடுவராகவும் இருக்கிறார். கபில் தேவுக்கு அடுத்த படியாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலக்குகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் ஆவார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராகவும், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 300 இலக்குகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்னும் சாதனையை படைத்தார். 1992, 1996, 1999 மற்றும் 2003 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 44 இலக்குகைகளை வீழ்த்தி அதிக இலக்குகள் வீழ்த்தியவர் பட்டியலில் முதல் இடத்தில இருந்தார்.
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவஹல் ஸ்ரீநாத்திடம் பேட்டி ஒன்றை எடுத்தார்.
அதில் அவரிடம் அவருக்கு பிடித்த நடிகர்கள் 3 மூன்று பேரின் பெயரை கூறும்படி கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் அமிதாப்பச்சன், ஷாரூக்கான், மற்றும் ரஜினிகாந்த் என்று கூறினார் .எதனால் ரஜினியை பிடிக்கும் என்ற கேள்விக்கு ‘ரஜினிகாந்த் வாழ்க்கைக்குத் தேவையான எனர்ஜியை தனது படங்களின் மூலம் கொண்டு வருவதாக நான் நினைக்கிறேன். நீங்கள் மன அழுத்தத்துடன் இருந்தால் ரஜினிகாந்த் படங்களைப் பாருங்கள். அது உற்சாகத்தை பிறக்கச் செய்யும். தன் படங்களில் வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து வந்து உயர்வார். திரையில் அவரது ஆளுமை. ஒருவித ஈர்ப்பு. அதனால் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.
மேலும் ஓரிரு முறை அவரைச் சந்தித்திருக்கிறேன். உங்களால் நம்ப முடியுமா? ஒருமுறை பெங்களூரு விமான நிலையத்தில் அவரைச் சந்தித்தேன். தனது காரில் ஏறும்படி சொன்னார். நான் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு இறக்கி விடுகிறேன் என்றார். அது அவரது கனிவுதான். உங்களது நாட்கள் மோசமாக இருந்தால் ரஜினிகாந்த் படங்களைப் பாருங்கள். உற்சாகம் பிறக்கும்’ என்று கூறி ரஜினியுடனான தனது அனுபவத்தை சொல்லி சிலாகித்துளார் ஜவஹல் ஸ்ரீநாத்.