விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தின் டிரைலர் வெளியாகி ஒரே நாளில் 2 மில்லியன் வியூஸ் பெற்று டிரெண்டாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் சர்வ சாதாரணமாக செய்து முடிக்கக் கூடிய எதார்த்தமான ஒரு நடிகர் என்றே சொல்லலாம். வருடத்திற்கு 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வெளியிட்டு வருகிறார்.
கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் ஓ மை கடவுளே என்ற படம் வெளியானது. இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது, இவரது நடிப்பில் கடைசி விவசாயி, உப்பென்னா, மாமனிதன், மாஸ்டர், லாபம், க/பெ. ரணசிங்கம், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், லால் சிங் சத்தா, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா காரணமாக லாபம் படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளான எடிட்டிங், டப்பிங் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், லாபம் படத்தின் டப்பிங் பணிகளை விஜய் சேதுபதி தொடங்கினார். நடிகர் கலையும் தனது டப்பிங் பணியை தொடங்கினார்.
டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு லாபம் படத்தின் டிரைலர் வெளியானது. தொழிற்சாலை இயங்கினால் தான் விவசாயமும், மக்களும் வாழ முடியும் என்று நம்மை நம்ப வைத்துவிட்டார்கள். ஆனால், உண்மையில், விவசாயம் செய்தால் மட்டுமே இங்கு தொழிற்சாலைகள் இயங்க முடியும்.
இந்த மண்ணில் தான் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் தேவையான மூலப்பொருட்கள் விளைகிறது. அதை வாங்கி வியாபாரம் பார்க்கும் அத்தனை பேரும் லாபம் பார்க்கிறார்கள். ஆனால், அதை விவசாயம் செய்யும் விவசாயி மட்டும் நஷ்டத்தை சந்தித்து தூக்குமாட்டி தற்கொலை செய்கிறார்கள். இப்படியெல்லாம் வசனம் பேசும் விஜய் சேதுபதியின் லாபம் படத்தின் டிரைலர் ஒரே நாளில் 2 மில்லியன் வியூஸ் பெற்று டுவிட்டரில் டிரெண்டாகியுள்ளது.
இதனை விஜய் சேதுபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். லாபம் படத்தில் இடம்பெற்றுள்ள விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற்றம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.