நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் புதன்கிழமை ஒரே நாளில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். இதன்மூலம் இந்தியாவின் மொத்தப் பதக்க எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
வில்வித்தையில் ‘ஹாட்ரிக்’ தங்கம்
காம்பவுண்ட் வில்வித்தையில் இந்தியா மூன்று தங்கப் பதக்கங்களை அள்ளியது. ஜோதி சுரேகா வென்னம், பிரித்திகா பிரதீப் மற்றும் சிகிதா தனிப்பார்த்தி ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி, இறுதிப்போட்டியில் சீனாவை 238–234 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. இந்திய அணி பெற்ற 238 புள்ளிகள் உலக சாதனையைச் சமன் செய்தன.
கலப்பு அணிப் பிரிவில் சிகிதா தனிப்பார்த்தி–சாஹில் ஜாதவ் இணை, தென் கொரியாவை ‘ஷூட் ஆஃப்’ சுற்றில் வீழ்த்தி தங்கம் வென்றது. இதன்மூலம் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிற்கான காம்பவுண்ட் கலப்பு அணிப் பிரிவில் இந்தியா இடத்தையும் உறுதி செய்தது.
ஆடவர் காம்பவுண்ட் அணிப் பிரிவில் சாஹில் ஜாதவ், குஷால் தலால் மற்றும் கணேஷ் மணி ரத்னம் திருமுரு அடங்கிய இந்திய அணி, சீனாவை 238–237 என்ற பரபரப்பான புள்ளிக்கணக்கில் வீழ்த்தித் தங்கத்தைத் தட்டிச் சென்றது. இந்திய வில்வித்தை அணி ஒரே நாளில் மூன்று தங்கங்களை வென்று ஆதிக்கம் செலுத்தியது.
துப்பாக்கிச் சுடுதலில் ஆசிய சாதனை
டிராப் கலப்பு அணிப் பிரிவில் நீரு தண்டா–கைனன் செனாய் இணை, கத்தார் அணியை வீழ்த்தித் தங்கம் வென்றது. இறுதிப்போட்டியில் 34 புள்ளிகள் குவித்த இந்திய இணை புதிய ஆசிய சாதனையையும் படைத்தது. இந்த ஆசிய விளையாட்டில் நீரு தண்டா வென்ற இரண்டாவது தங்கமும் மூன்றாவது பதக்கமும் இதுவாகும்.
குத்துச்சண்டையில் இரண்டு வெண்கலம்
மகளிர் 60 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் சீனாவின் யாங் செங்யுவிடம் 1–4 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்தியாவின் பிரியா கங்காஸ் வெண்கலம் வென்றார். ஆடவர் 90 கிலோ எடைப்பிரிவில் உஸ்பெகிஸ்தானின் துராபெக் கபிபுல்லேவிடம் அரையிறுதியில் தோற்ற கபில் பொகாரியாவுக்கும் வெண்கலம் கிடைத்தது.
மல்யுத்தத்தில் கணக்கைத் தொடங்கிய சுனில்
ஆடவர் கிரேக்கோ–ரோமன் 87 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சுனில் குமார் வெண்கலம் வென்றார். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பிலிப்பைன்ஸின் காலம் ஜான்ஸ்டன் ராபர்ட்ஸை 9–0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். இந்த ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் மல்யுத்தப் பதக்கம் இதுவாகும்.
இறுதிப்போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி
மகளிர் ஹாக்கி அரையிறுதியில் தென் கொரியாவை 2–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தியா சார்பில் இஷிகா மற்றும் கேப்டன் சலிமா டெட்டே தலா ஒரு கோல் அடித்தனர். தங்கப் பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியா சீனாவை எதிர்கொள்கிறது.
குத்துச்சண்டை மகளிர் 75 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் தொடர்ச்சியாக இரண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இறுதிச்சுற்றை எட்டிய முதல் இந்தியப் பெண் குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
60 பதக்கங்களுடன் 8-வது இடம்
இரவு 8.30 மணி நிலவரப்படி இந்தியா 10 தங்கம், 21 வெள்ளி மற்றும் 29 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களுடன் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்திலும் ஜப்பான் இரண்டாவது இடத்திலும் தென் கொரியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தியாவுக்கு அடுத்ததாக கஜகஸ்தான் 9-வது இடத்தில் உள்ளது.





