புதுடெல்லி: வெளிப்புற டெல்லியின் பீராகரி அருகே ஒரே கட்டடத்தில் செயல்பட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் இன்று (அக்டோபர் 20) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்களின் நடவடிக்கையால் காலை 10:30 மணிக்குத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. உயிரிழப்போ காயமோ பதிவாகவில்லை என டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
பீராகரி சவுக் அருகேயுள்ள ஜுவாலாபுரி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அதிகாலை 5:40 மணிக்குத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மூன்று தீயணைப்பு வாகனங்கள், மூன்று தண்ணீர் டேங்கர் வாகனங்கள், சுவாச உதவிக் கருவிகளுடன் கூடிய வாகனம் மற்றும் இரண்டு விரைவு நடவடிக்கை வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன.
பல தளங்களில் தொழிற்சாலைகள்
சுமார் 300 சதுர கெஜம் பரப்பளவிலான அந்தக் கட்டடம், அடித்தளம், தரைத்தளம் மற்றும் நான்கு மேல்தளங்களைக் கொண்டது. அதன் வெவ்வேறு தளங்களில் செயல்பட்ட உற்பத்திப் பிரிவுகள் தீயால் பாதிக்கப்பட்டுள்ளன.
அடித்தளத்தில் ரப்பர் விரிப்புகள் தயாரிக்கும் நிறுவனமும், தரைத்தளத்தில் ஹெல்மெட் தயாரிக்கும் தொழிற்சாலையும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் காலணிகள் மற்றும் சால்வைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.
தீ கட்டுக்குள்; தணிக்கும் பணி
காலை 10:30 மணிக்குத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, எஞ்சிய வெப்பத்தைத் தணிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் மற்றும் பொருட்சேதத்தின் மதிப்பு குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.





